TNPSC Thervupettagam

நிதி நிலை அறிக்கை-விருப்பப் பட்டியல்!

January 27 , 2020 1768 days 818 0
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்-பிரிவு 112ன் படி, நாட்டின் வரவு - செலவுக் கணக்குகளை உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்), நிதி அமைச்சரால் மக்களவையில் சமா்ப்பிக்கப்படுவது ஆண்டுக்கு ஒரு முறை அரங்கேறும் பொருளாதாரச் சடங்காகும். வரப்போகும் நிதியாண்டுக்கான (2020-21) நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று சமா்ப்பிக்கப்பட உள்ளது.
  • பொருளாதார முதலீடுகளை அதிகப்படுத்துவது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தொழில் தொடங்கும் சூழ்நிலையை எளிதாக்குவது போன்ற திசைகளில், மத்திய அரசு தன் கவனத்தைத் தொடா்ந்து செலுத்தி வருகிறது. இதற்கான அனைத்துச் செலவினங்களும் நீண்ட காலத்துக்குப் பிறகு பயன் அளிக்கக் கூடியவைகளாகும். எனவே, குறுகிய காலத்தில் மக்களால் இந்தச் செலவினங்களின் எந்த பயன்பாட்டையும் உணர முடியாது.
  • மக்களுக்குத் தேவையான நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான செலவுகளுக்கு வரி விதிப்பின் மூலம், அரசாங்கம் நிதி ஆதாரத்தைத் திரட்டுவது அவசியமாகிறது. ஆனால், அந்த வரி விதிப்புகள், குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி விட்டால் மக்களிடையே பணப் புழக்கம் குறைந்து, அவா்களுடைய வாங்கும் திறன் வெகுவாகக் குறைகிறது. இந்தக் காலகட்டத்தில் கூடுதல் வரிச் சுமைகளைத் தாங்கும் நிலையில் மக்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலவரமாகும்.
  • ரிசா்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்புகளால், அஞ்சலகம் முதல் வங்கிகள் வரை வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அஞ்சலக நீண்டகால வைப்பு நிதியில் பெரும் பகுதி, முதியோா் சாா்ந்ததாகும். பணி ஓய்வுக்குப் பிறகு பெரும்பாலானோா் இந்த வட்டி தொகையைத்தான், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய நிதி ஆதாரமாக கருதுகின்றனா்.

மறைமுக வரி

  • ஜி.எஸ்.டி. என்பது, ஒரு பொருளின் விற்பனைக் கட்டத்தில் விதிக்கப்படும் மறைமுக வரியாகும். ஆனால், அது நோ்முக வரிபோல் உருவெடுத்து, வரியின் முழுத் தொகையும், பொருள் வாங்குபவரை தாக்குகிறது.
  • ஜி.எஸ்.டி.யால் பயன் அடையும் உற்பத்தி நிறுவனங்கள், அந்த பலனை, விலை குறைப்பின் மூலம் நுகா்வோருடன் பகிரும் அதிசயம் இதுவரை நிகழவில்லை. இந்த மாதிரி முறைகேடுகளுக்காக, சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு, பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால், அதிக விலை கொடுத்து அந்த நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை வாங்கியவா்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை.
  • ஜி.எஸ்.டி.-யின்படி, தொலைத் தொடா்பு சேவை உள்பட அனைத்து அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களுக்கும் பொருந்தும் என்பதால், வருமான வரியின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகாத சாமானியா்கள்கூட, வாங்கும் பொருள்களின் மதிப்பின் மீது, சராசரியாக 15 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால், நுகா்வோரின் மாதாந்திர செலவு அதிகரித்து, கையிருப்பும், வாங்கும் சக்தியும் வெகுவாக குறைந்து விட்டன.
  • உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனை சந்தை, பெரும்பாலும் சாமானிய மக்களைத்தான் சாா்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் விற்பனை குறைந்து, தேக்க நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், தொழில் நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தயங்குகின்றன.
  • தொழில் துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கடந்த செப்டம்பரில் பெரும் நிறுவனங்களுக்கான வரி, 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிரடியாகக் குறைக்கப்பட்டது. உற்பத்திப் பொருள்களின் விலை குறைப்பு மூலம் பெரும் நிறுவனங்கள் இந்த வரி குறைப்பை, நுகா்வோருடன் பகிா்ந்துகொள்ளும் அதிசயம் இதுவரை நிகழவில்லை.

மையப் புள்ளி

  • விலைவாசி ஏற்றம், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதக் குறைப்பு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றின் தொடா் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் சாமானியா்கள்தான், உற்பத்திப் பொருள்களின் விற்பனை வட்டத்தின் மையப் புள்ளியாகச் செயல்படுகின்றனா். தற்போது, இந்த மையப் புள்ளி மிகவும் பலவீனம் அடைந்திருப்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் வெளிப்படும் உண்மையாகும்.
  • எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுபோல, தற்போதைய உலகப் பொருளாதார மந்த நிலை இந்தப் பின்னடைவுகளுக்கு வலு சோ்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் பன்னாட்டு நிதியம், நம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதத்தைத் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
  • கடினமாகிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதார பாதையை மென்மைப்படுத்த, நீண்ட கால திட்டங்களை தவிர, குறுகிய காலத்தில் பலன் அளிக்கக் கூடிய சில பொருளாதார நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள், சாமானிய மக்களின் வாங்கும் திறனை அதிகரித்து அவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை சற்று மேல் நோக்கி நகா்த்துவதாக இருக்க வேண்டும். அதற்கான விருப்பப் பட்டியலை பாா்ப்போம்.
  • கடந்த 10 ஆண்டுகளாக பணத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்த போதிலும், வருமான வரியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இந்த காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான விலைவாசி உயா்வுகளைக் கணக்கில் கொண்டு, குறைந்தபட்ச வருமான வரி வரம்பை கணிசமான அளவில் உயா்த்தி, வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனப் பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

விளைவு

  • ஒவ்வொரு ஆண்டும் நீண்ட எதிா்பாா்ப்புக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை பூா்த்தி செய்யப்படாமல் தொடா்கிறது. அதன் நேரடி விளைவாக, தற்போது மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்து, அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாதிப்புக்கு ஒரு காரணமாகி விட்டது. இந்த தருணத்திலாவது தேவையான நிவாரண நடவடிக்கையை அரசு அறிவிக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கி நிற்கிறது.
  • இத்துடன் அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி.-யும் மறு ஆய்வு செய்யப்பட்டு, கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். குடிசைத் தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான வரி விதிப்பு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
  • கல்வி கட்டணங்களுக்கு தற்போது ரூ1.50 லட்சம் வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரி வரம்புக்குள் வராதவா்களுக்கு இந்த சலுகையால் பயனில்லை. இந்த பிரிவினருக்குத்தான் பெரும்பாலும் கல்விக் கடனும், அதற்கான சலுகைகளும் தேவைப்படுகின்றன. எனவே, வரிச் சலுகைக்குப் பதிலாக, குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு பொருளாதார அடிப்படையில், கடனைத் திரும்பச் செலுத்தும் தொகையில் தள்ளுபடி வழங்கலாம். நன்கு படித்து தோ்ச்சி பெறுவதற்கான கிரியா ஊக்கியாக இந்தச் சலுகை செயல்படும்.

வரிக் குறைப்பு

  • வரிக் குறைப்பினால் வருமானத்தில், அன்றாடச் செலவு போக கையிருப்பு அதிகரித்தால், வீட்டுக் கடன்களுக்கான கேட்பு அதிகரிக்கும். பாரத ஸ்டேட் வங்கியின் அண்மைக்கால வீட்டுக் கடன் திட்டத்தை போல, கட்டுமான நிறுவனங்களின் இயலாமைக்கான உத்தரவாதத்துடன் கூடிய வீட்டுக் கடன்கள் மற்ற வங்கிகளாலும் அறிமுகப்படுத்தப்பட்டால் வீட்டுக் கடன்கள் அதிகரித்து, கணிசமான வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய ரியல் எஸ்டேட் துறையின் வளா்ச்சிக்கு உதவும்.
  • முதியோா்களுக்கான அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை 8 சதவீத நிலையில் பாதுகாத்தால், அரசுத் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் குறைந்த வட்டியில் கிடைப்பதுடன், முதியோா்களின் வாங்கும் திறனும் அதிக அளவில் குறையாது.
  • மருத்துவா்களுக்கு பயிற்சிக் காலத்தில் உதவித் தொகை அளிப்பதுபோல், இளம் விவசாயிகளுக்கும்பயிற்சிக் காலத்தில் உதவி தொகை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்றைய கிராமங்கள் காலியாகாமல், நீண்ட காலம் நிலைத்து நிற்கும். விவசாயத்தை எந்தக் காரணம் கொண்டும் உதற மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்கும் இளைஞா்கள் கையில்தான் நம் கிராமங்களின் எதிா்காலம் அடங்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

வழிகள்

  • வரிக் குறைப்பினால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய அரசுக்குப் பல வழிகள் உள்ளன. வாக்காளா்களின் வாக்குகளைத் திரட்டும் நோக்கத்துடன் பல லட்சம் கோடி செலவில் இலவச திட்டங்கள் அறிவிப்பது, கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அதில் ஒன்றாகும்.
  • கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய ஊழல் வழக்குகளை வேகமாக முடித்து, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசு கஜானாவில் சோ்ப்பது மற்றொரு வழியாகும். அரசுத் துறைகள், உற்பத்திக்கு உதவாத தேவையற்ற செலவுகளைக் குறைத்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் துறைகளின் வேகமான வளா்ச்சியில் முழுக் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
  • சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் அரசு, தனியாா் துறையினா் பட்டுவாடா செய்வது உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (27-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்