TNPSC Thervupettagam

நிதிக்குழு பரிந்துரையும் மாநில உரிமைகளும்

November 18 , 2020 1524 days 1029 0
  • அண்மையில் நாட்டின் 15-ஆவது நிதிக்குழு, 2021-22 முதல்  2025-26-வரையிலான நிதிப்பகிர்வு அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் இடையிலான நிதிப்பகிர்வை வரையறை செய்வதே நிதிக்குழுவின் முக்கியப் பணியாகும்.
  • இந்த அறிக்கை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
  • முதலாவது, இரண்டாவது பாகங்களில் முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
  • மூன்றாவது, நான்காவது பாகங்களில் மத்திய- மாநில அரசுகளின் முக்கிய துறைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவை வீழ்ச்சிகளையும், சவால்களையும் எந்தெந்த விதத்தில் சந்தித்திருக்கின்றன என்பது குறித்தான பகுப்பாய்வு செய்து வழங்கப்பட்டுள்ளதாக நிதிக்குழு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது. 
  • இந்த நிதிக்குழுவின் அறிக்கையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்தார். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளைப் பகிர்ந்து அளிப்பது குறித்து ஒரு தெளிவான நெறிமுறையை நிதிக்குழு பரிந்துரைத்திருக்கிறது.
  • மாநில வருவாயின் பெரும்பகுதி குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி-க்குப் பிறகு மாநில வருவாய் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதே உண்மை. 
  • 14-ஆவது நிதிக்குழு, ஏற்கெனவே மத்திய வரி வருவாயில் 42 % அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது அதற்கு முந்தைய நிதிக்குழுவின் பரிந்துரையைவிட 10 % கூடுதலாகும்.
  • தற்போதைய 15-ஆவது நிதிக்குழு,  2020-21-ஆம் ஆண்டுக்கு மத்திய வரி வருவாயில் 41 % மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
  • இதில் குறைக்கப்பட்ட ஒரு விழுக்காடு,  புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • பல்வேறு மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்நாட்டின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
  • மக்கள்தொகை குறைந்திருப்பதை அளவுகோலாக வைத்து தமிழகத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கினால் மாநில அரசு திண்டாடிப் போய் விடும். மேலும், மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்ற கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். 
  • நிதிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு குறைவான நிதி வழங்கப்பட்டால், மாநில அரசுகள் புதிய திட்டங்களை வகுக்க முடியாது.
  • இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நிதிக்குழுவின் தலைவர் என்.கே. சிங் (நந்த்கிஷோர் சிங்) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நிதிப்பகிர்வு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். ஆகவே, இயற்கையாகவே எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவே இந்தப் பரிந்துரைகள் பார்க்கப்படுகின்றன. 
  • 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பற்றாக்குறை நிறைந்ததாக இருக்கும் என்றால், மாநில அரசுகளின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
  • ஆகவேதான், மக்கள்தொகையின் அடிப்படையில் இல்லாமல், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தற்போது மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையிலேயே 15-ஆவது நிதிக்குழுவும் பரிந்துரையும் செய்துள்ளது. 
  • தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இந்த நிதிப்பகிர்வு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்தியப் பங்குகளின் எதிர்காலம் இந்த நிதிப்பகிர்வின் முடிவைப் பொருத்தே அமைந்திருக்கும்.
  • மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதால், அது மாநில வளர்ச்சியின் விழுக்காட்டை அதிகரிக்க வழிகோலும். 
  • தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயத்தில், 13-ஆவது நிதிக்குழுவின் ஒதுக்கீட்டை ஒப்பிடும்போது, 14-ஆவது நிதிக்குழுவின் ஒதுக்கீடு 19 % குறைந்த ஒதுக்கீடாக அமைந்திருந்தது.
  • இதனால் தமிழகத்திற்கு ஏறக்குறைய 6,123 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு விட்டது. இந்த ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, தமிழகம் மிகப்பெரிய சவாலைச் சந்தித்து வருகிறது. 
  • 14-ஆவது நிதிக்குழுவின் ஒதுக்கீட்டில், தமிழகத்திற்கு 19 % வரை மத்திய அரசு நிதி உதவி குறைக்கப்பட்ட நிலையில்,  இப்போது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது இயல்பே.
  • தற்போது மக்கள்தொகை தவிர, மற்ற அனைத்து காரணிகளுக்கும் ஒதுக்கீடு நிலையானதாக இருந்தால், 13-ஆவது நிதிக்குழுவின் ஒதுக்கீட்டு விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் 70 % அளவுக்கு இழப்பீடு இருக்கும் என்று பொருளாதார ஆய்வின் அடிப்படையில் கூறப்படுகிறது.
  • இந்திய அளவில் மிகக் குறைவான அளவு மக்கள்தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்களாக, தமிழகமும், கேரளமும் திகழ்கின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 
  • 1971-க்கும் 2011-க்கும் இடையேயான மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், மற்ற மாநிலங்களில் மக்கள்தொகை உயர்ந்ததைவிட தமிழகத்திலும், கேரளத்திலும் மக்கள்தொகை குறைந்த அளவே உயர்ந்துள்ளது.
  • குடும்பக் கட்டுப்பாடு குறித்து இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆனால், தற்போது மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையைக் கொண்டு மாநிலங்களுக்கான நிதிப்பங்கீட்டை மேற்கொள்ளலாம் என 15-ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது தவறு.
  • "வெர்டிகல் ஷேர்' எனப்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்படுவதால், இந்தியாவில் இருக்கின்ற எல்லா மாநிலங்களுக்குமே பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. 14-ஆவது நிதிக்குழுவில் 42 % வழங்கப்படுவதாகக் கூறினாலும், உண்மையிலேயே நமக்குக் கிடைத்தது 33 % தான். 
  • அதாவது, கணக்கீட்டின் அடிப்படையில், எட்டு லட்சம் கோடி ரூபாய்தான். கல்விக்கு, சுகாதாரத்துக்கு என மத்திய அரசு விதிக்கும் "செஸ்' வரி இதில் கழிக்கப்படுகிறது. இதனால், "செஸ்' வரியில் இருந்து 100 % மத்திய அரசுக்கே கிடைக்கிறது. 
  • இந்த "செஸ்' வரி எப்போதும் குறைக்கப்படுவதே இல்லை. மாறாக, அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை மாநிலங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும். உதாரணமாக, கார்ப்பரேட் வரி ஒன்றரை லட்சம் கோடி குறைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பையும் தமிழ்நாடு சந்தித்தே ஆக வேண்டும். 
  • இதன் மூலமாக, தமிழகத்திற்கு நேரடியாக சற்றேக்குறைய 6,123 கோடி ரூபாய் இழப்பீடாகிறது. தனிமனித வருவாய் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகத் தொகை வழங்கப்படுகிறது.
  • இந்தியாவில் தனிமனித வருவாய் வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு இதன் காரணமாகவே கிடைக்க வேண்டிய வரித்தொகை கிடைக்காமலே போய் விடுகிறது. 
  • வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு வளர்ச்சியை மையமாக வைத்து நிதியை ஒதுக்கீடு செய்வதும் சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனென்றால், வளர்ச்சிக்கான நிதி கட்டமைப்பு, தொழில் முதலீடுகள் பெறுவது என பல தேவைகள் வளர்ந்த மாநிலங்களுக்கு இயல்பாகவே இருக்கும். ஆகவே, வரி நிர்வாகம், வரி வருவாய் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். 
  • ஏற்கெனவே 12-ஆவது நிதிக்குழுவில் இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டன. தற்போது இவை கணக்கில் கொள்ளப்படாதது, மாநிலங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்குத் தரப்படும் நிதிக்கான பங்கீடு எந்தெந்த வகையில் நடந்துள்ளது என்பதை நிதிக்குழு மதிப்பீடு செய்ய வேண்டும். 
  • எத்தனை ஆண்டுகளுக்கு வளர்ச்சி அடையாத மாநிலங்களாகவே இருக்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறதல்லவா
  • 1971-இல் பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கூட்டு மக்கள்தொகை 21.21 கோடியாக இருந்தது.
  • தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் கூட்டு மக்கள்தொகை 13.53 கோடியாக இருந்தது.
  • சுமார் 50 ஆண்டுகள் கடந்த நிலையில், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள், அவற்றில் இருந்து பிரிந்த மாநிலங்கள் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகை 51.37 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • அதேநேரம், தென் மாநிலங்களின் மக்கள்தொகை 25.12 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. 1971-இல் இந்த நான்கு வட மாநிலங்களின் மக்கள்தொகை, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 38.7 % ஆக இருந்தது. ஆனால், 2011-இல் இது 42.2 % ஆக உயர்ந்திருக்கிறது. 
  • ஆனால், தென் மாநிலங்களின் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையில் 24.7 விழுக்காட்டிலிருந்து 20.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் நேரடி வரி வருவாயில் தென் மாநிலங்களின் பங்கு 23.5 % ஆகும். ஆனால், வட மாநிலங்களின் பங்கு 9.7 % மட்டுமே. 
  • மாநிலத்தின் நிலப்பரப்பு, மாநில வருமானம், மாநிலத்தின் தேவைகள் இவை கணக்கில் கொள்ளப்படுவதோடு, அதிக வரி வசூல் செய்யும் மாநிலத்தோடு ஒப்பிட்டால், ஒரு மாநிலம் எந்தத் தரவரிசையில் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, நிதி பகிரப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 
  • இந்த நடைமுறையால், கூடுதல் வரி வசூல் செய்யும் மாநிலங்கள் நிதியை இழக்க வேண்டியிருக்கும். இந்தத் தரவரிசையில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.  
  • முதல் முறையாக, 2020-21-ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு 4,025 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரை செய்யப்பட்டு, அதற்கான முதல் தவணையும் பெறப்பட்டுள்ளது. இந்த விகிதாசாரம் தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை 2019-20-ஆம் ஆண்டில் 21.4 % ஆகவும், 2020-21-ஆம் ஆண்டில்  21.83 % ஆகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
  • எனவே, மாநிலப் பரப்பளவு, மக்கள்தொகை எண்ணிக்கை போன்றவற்றை அளவுகோலாகக் கொள்ளாமல், தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதே மாநில நலன் சார்ந்ததாக அமையும்.

நன்றி: தினமணி (18-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்