- உலக அளவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தாலும், பல இடங்களில் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இல்லாமல் இருக்கிறது. அரசியல் நிச்சயமற்ற தன்மை, பன்னாட்டு உறவுகளில் நீடிக்கும் சிக்கல், கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி உயர்வு உலக அளவில் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
- ஆனால், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், வரும் நாள்களில் இது தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்ற இந்த வேளையில்தான், நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2024-25) தாக்கல் ஆகியிருக்கிறது. அதே வேளையில், இந்தியாவின் பணவீக்க விகிதம் 4% ஆக இருக்கிறது.
பட்ஜெட் என்ன சொல்கிறது?
- இந்த பட்ஜெட்டில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிற நிலை இருந்தாலும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குரல்கள் நாலா பக்கமும் ஒலிக்கின்றன.
- தமிழ்நாட்டுக்குப் பேரிடர் மேலாண்மை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாடு’ பெயரையும், திருக்குறளையும் பாஜகவினர் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இங்கு கிடைத்த தேர்தல் தோல்வியால், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்னும் பெயரை உச்சரிக்கக்கூட பாஜக மறுத்துவிட்டது. மொத்தத்தில், மோடி அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட்டாகவே இது பார்க்கப்படுகிறது.
- புதிய வருமான வரித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு நிலையான கழிவுத்தொகை ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.75ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமானவரித் திட்டத்தில் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெற்றால் வரி இல்லை. ரூ.3 முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி; 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10% வரி; 10 முதல் 12 லட்சம் வரை 15% வரி, 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரி, 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30% வரி என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பழைய வருமானவரித் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கான வருமான வரி விகிதத்தையே இது காட்டுகிறது. ரூ.4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்குப் பலன் தரக்கூடிய அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. 30% வரை வரி விதிக்கப்படுகிற புதிய வருமான வரி முறையைத் தேர்வுசெய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துகிறது.
- 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன்பயிற்சி வழங்குதல் - வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 5 திட்டங்களைப் பிரதமர் தொகுப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுத்திருப்பது எவ்வாறு செயல்பாடாக மாறப் போகிறது என்பதைப் பொறுத்துதான் வரவேற்பு கிடைக்கும்.
- வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, குறு-சிறு-நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். வேளாண்மை, அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- எந்தத் தட்பவெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் பெறும் பயிர்கள் அறிமுகப்படுத்தப்படுவதோடு, தானியம் - எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி - சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதி மாநிலங்களில் விவசாய வளர்ச்சிக்காகவும், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- ஹைதராபாத், பெங்களூரு பாதுகாப்புத் தளவாடத் தொழில்வழித் தடத் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. இதுபோன்று பிஹாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கக் கூடுதல் நிதி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரம், பிஹார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாக இருக்கிறது.
சர்ச்சைக்குரிய அம்சங்கள்:
- ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பிஹாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்திருப்பதை அடுத்து, அந்த மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்ற மாநிலங்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் எழுப்பக் காரணமாக அமைந்திருக்கிறது. ஆந்திரத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கான சிறப்பு நிதி என்பது சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையாக இருந்தது. பிஹாருக்கான சிறப்பு அந்தஸ்து என்பது நிதீஷ்குமாரின் வேண்டுகோளாக இருந்தது.
- பிஹாருக்குப் பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு வெள்ள பாதிப்புகளைத் தடுப்பது, விவசாயப் பாசனத்திற்கெனப் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் கயா, புத்த கயா உள்ளிட்ட புராதனச் சின்னங்கள், கோயில்களை மேம்படுத்தச் சிறப்பு நிதி, நாளந்தா பல்கலைக்கழக மேம்பாடு, சுற்றுலாத் துறை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில், பிஹாருக்குச் சிறப்பு அந்தஸ்து தரப்படவில்லை. ஆகவே, சிறப்பு உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் சொல்கிறார்.
- இதேபோல் ஆந்திரத்தில் புதிய தலைநகரத்தை உருவாக்குதல் - உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் போலவரம் திட்டம், நதிநீர், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களால் ஆந்திரத்துக்கு ஒரு புதிய விடியல் கிடைத்திருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு நிலைமை வெவ்வேறாக இருக்கிறது. குறிப்பாக, பிற தென் மாநில மக்கள் வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. இது இந்தியாவுக்கான சமச்சீரான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், சில மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியிருப்பதாகவே அறிய முடிகிறது.
- சமச்சீரான வளர்ச்சி என்பது ஒரே விதமான வளர்ச்சியையும், ஒன்றிரண்டு மாநிலங்களின் வளர்ச்சி என்பது வீக்கத்தையுமே காட்டுகின்றன என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் - புயல் பாதிப்புகளுக்கு எவ்வித நிதி ஆதாரமும் ஒதுக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
- இந்தியாவில் 20 கோடி மக்கள் ஏழையாக உள்ளனர். 80 கோடி மக்கள் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் பொருள்களை நம்பி வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவர்கள் வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்ன? மக்களின் நலன் சார்ந்த திட்டங்களே காலம் கடந்து நிற்குமே தவிர, ஜிடிபி போன்ற புள்ளிவிவரங்கள் மக்களுக்கு நேரடிப் பயன்தராது.
பாரபட்சமான அணுகுமுறை:
- இந்த பட்ஜெட் மூலம் பாஜக தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்கான பாரபட்சமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று குற்றம்சாட்டத் தோன்றுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது ஏழை, எளிய மக்களின் மீதான நம்பிக்கைப் பார்வையைக் குறைத்திருக்கிறது.
- உயர் கல்விக்கான மாணவர் உதவி ரூ.499 கோடியாக உயர்ந்துள்ளது. கூடுதலாக ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு - தொழில்பயிற்சிகளுக்கான நிதி உதவிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சிக்காக ரூ.162 கோடியில் இருந்து ரூ.355 கோடியாகவும், தேசிய தொழில்பயிற்சித் திட்டத்தில் ரூ.460 கோடியில் இருந்து ரூ.600 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- 2023-24 முந்தைய ஆண்டு வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இருந்து 6.8% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில், நம் முதலீடுகளைப் பொறுத்தும், நாம் தேர்வு செய்யும் வரிமுறையைப் பொறுத்துமே நாம் பணக்காரர் ஆவோமா, ஏழையாகவே இருப்போமா என்பதெல்லாம் தீர்மானிக்கப்படும்.
- பட்டியல் சாதி, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்தத் திட்டமும் வழங்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதாரத் திறனை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் முன்மொழியப்படவில்லை. விளிம்புநிலை மக்கள், அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. நிலைமை இவ்வாறாக இருக்க, பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைப்பதைப் போலல்லவா அமைந்திருக்கிறது!
- மிக முக்கியமாக, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம், டெல்லி, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாததன் மூலம் எவ்வகையான அரசியலைப் பிரதமர் மோடி முன்னிறுத்த விரும்புகிறார்?
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)