- நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையை ஒரு பொருளாதார சமையல் குறிப்பாக நான் பார்க்கிறேன்.
- 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த சமையல் குறிப்பில் ஒரு சுவையான விருந்தைத் தயாரிப்பதற்கான அனைத்துப் பொருள்களும் அடங்கியிருக்கின்றன. அவற்றைச் சரிவரப் பயன்படுத்தி சிறந்த உணவை தயார் செய்யும் பணி பல்வேறு அமைச்சகங்களைச் சாரும்.
- இந்த நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்வதற்கு முன்பு, இதில் உள்ள கல்விக்கான ஒதுக்கீடு குறித்துப் பார்க்கலாம்.
கல்வித் துறை
- பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை சேர்த்து மொத்தம் ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகளின் இணைந்த பட்டியலில் கல்வி உள்ளது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
- இதில் மாநில அரசின் பங்கு முக்கியமானது; நாடெங்கிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை கல்வி நிறுவனங்களுடன் பொறியியல் மாணவர்களின் பயிற்சிக்காக இணைப்பது பல பொதுப் பிரச்னைகளைத் தவிர்க்க வழிவகை செய்யும். சில தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் பட்டப்படிப்பை வழங்க அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது. 150 உயர் கல்வி நிறுவனங்களுக்கு தங்கள் பட்டப்படிப்பு, பட்டயவியல் படிப்புகளுக்கு 2021 மார்ச் மாதத்துக்குள் தொழிற்பயிற்சி அளிக்க அனுமதி அளித்ததும் வரவேற்கத் தகுந்தது.
- உயர் கல்வித் துறையில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்; கல்வித் துறைக்கும் அதன் தொடர்புடைய மற்ற துறைகளுக்கும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். இந்தக் கல்வி நிறுவனங்கள் பல துறைகளுடன் இணைந்து செயல்பட்டு இந்த வாய்ப்பை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்புகளிலிருந்து பயன் பெற முன்னோடி பொது - தனியார் கல்வி நிறுவனங்களுடன் கூட்டாகச் செயல்பட ஏதுவான ஒரு கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
- கல்விக்கான ஒதுக்கீடு குறித்து எனது பார்வை தனிப்பட்டதாகும். பொதுவாக, விருந்துக்காக சாதம் மட்டும் தயார் செய்து விட்டு, சமையல் முடிந்து விட்டது என்று சமையல் குறித்துக் கருத்து கூறுவது தவறு. சாதம்தான் விருந்தின் பிரதான உணவாகும் என்பதில் சந்தேகமில்லை. மற்ற பதார்த்தங்களுடன் சேர்த்து சாதம் வழங்கப்படும்போதுதான் விருந்து முழுமை அடைகிறது. அதுபோல கல்விதான் சமூக மேம்பாட்டுக்கு பிரதான வழிகோலியாகும். ஆனால், மற்ற துறைகளுடன் கல்வி இணைக்கப்படும்போதுதான் அது ஆரோக்கியமாகிறது. அந்தத் தன்மை குறித்து தற்போது பார்ப்போம்.
நிதிநிலை அறிக்கையில்...
- நிதிநிலை அறிக்கையின் கல்வித் துறைக்கான செலவை சாதம், பருப்பு மட்டுமே கொண்டு (அதாவது, பள்ளிக் கல்வி - உயர் கல்வி) சுவைப்பதற்கான குறிப்பாகத்தான் பல நிபுணர்கள் ஆராய்வார்கள்; கல்வித் துறைக்கு துணையான மற்ற துறைகளான அறிவியல், பொறியியல், பயோடெக்னாலஜி, அறிவியல் - தொழில்துறை வளர்ச்சி, திறன் மேம்பாடு - தொழில்முனைவுத் திறன் போன்றவை உயர் கல்வி ஆராய்ச்சிக்கு முதுகுத்தண்டாக அமைகின்றன. இதை ஒரு சிறந்த விருந்துக்கான மற்ற பதார்த்தங்களைப் போல கருத வேண்டும்.
- இந்தத் துறைகளையும் சேர்த்து உயர் கல்விக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.56,950 கோடியாகும். இது கடந்த ஆண்டின் ஒதுக்கீடான ரூ.53,593 கோடியைவிட 6.3 சதவீதம் அதிகமாகும். இதைப் பலர் 4 சதவீதம் என தவறாகக் குறிப்பிடுகின்றனர். இது பல பதார்த்தங்கள் அடங்கிய கல்வி விருந்தாக அமைகிறது.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் பெரிதும் தேவையான ஜம்மு-காஷ்மீருக்கான உதவித் தொகை திட்டத்துக்கு ரூ.225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் இனிப்பு, மற்றவற்றில் காரம் சேர்க்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "ஸ்டார்ட்-அப் இந்தியா" திட்டத்துக்காக உயர் கல்வித் துறைக்கும், "சர்வதேசமயமாக்கல் - இந்தியாவில் கல்வி' திட்டத்துக்கும் இந்த ஆண்டு இரு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இந்தப் பட்டியலில் உள்ள மற்றவற்றுக்கு நுகர்வோரின் பசிக்கு ஏற்ப கூட்டியும், குறைத்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த தட்டு சேவை முழுமையானதாகவும் வயிறு நிறைந்ததாகவும் உள்ளது. நமது உணவை விருப்பத்துக்கேற்ப தனித் தனியே கேட்கும்போதுதான் வித்தியாசம் ஏற்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையை முக்கோணப் பார்வையாக "ஆர்வமுடன் இந்தியா , பொருளாதார வளர்ச்சி, அக்கறையுடைய சமூகம்' என்ற கோட்பாட்டுக்குள் பார்க்கும்போது இது கல்வி நிறுவனங்களுக்கு தனது தகுதி, திறமைக்கேற்ப தேர்ந்தெடுக்கத்தக்க பல வாய்ப்புகளை வழங்குகிறது.
திட்டங்கள்
- எனவே, நமது உணவை நாமே தேர்வு செய்து கேட்பதற்கு ஒப்பாகத் தோன்றச் செய்கிறது. மற்ற நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்து பல்வேறு திட்டங்களை கூட்டாக உருவாக்க இந்த மூவகைத் திட்டங்கள் வழிவகை செய்கின்றன. இத்தகைய சிறப்பான உணவுச் சேவையை தங்களுக்கு விருந்தாக ஆக்கிக் கொள்வதா அல்லது பசியுடன் வாடுவதா என்ற கேள்விக்கான பதிலும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.
உணவுப் பட்டியலைக் குறை கூற முடியாது. இதைத் தவிர, சிறப்பு இனிப்பு வகை - "எக்ஸ்டெண்டட் கமர்ஷியல் பாரோயிங்', அந்நிய நேரடி முதலீடு ஆகியவை தயாராகும்போது பரிமாறப்படும்; இவை நமக்கு சிறப்பாகத் தோன்றினால் மட்டுமே சாப்பிட முடியும். அதுவரை இது குறித்த கருத்துகள் இல்லை; அடுத்ததாக சூடாக, புளிப்பாக பசியைத் தூண்டும் "சூப்' குறித்துப் பார்க்கலாம்.
- தொண்டு அமைப்புகள் (டிரஸ்ட்டுகள்), சமூகங்கள் அல்லது பிரிவு 8-இன் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றைச் சேர்ந்தவர்கள்தான் கல்வி நிறுவனங்களை நடத்த முடியும். இந்த நிறுவனங்களுக்கு பிரிவு 10 (23சி), 12 ஏஏ, 80(ஜி)-இன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு இல்லாமல், இந்த கல்வி நிறுவனங்களால் செயல்பட முடியாது. இந்த வரிவிலக்கு, கல்வி நிறுவனங்களுக்கு உணவுப் பட்டியலில் பசியைத் தூண்டும் வஸ்துவாக மட்டுமல்லாமல், அனைத்துத் தொண்டு நிறுவனங்களுக்கும் உணவாக விளங்குகிறது. 2020-21 நிதிநிலை அறிக்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றமான பிரிவு 12 ஏபி, 10 (23சி), 80ஜி-இன் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல், 12ஏஏ, 10 (23சி)-இன் கீழ் பரஸ்பரம் ஒருங்கிணைந்து செயல்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகிய இரண்டு விஷயங்களுக்குத்தான் மாற்றுத்தீர்வு காண வேண்டும்.
- பிரிவு 10(23(சி), 12 ஏஏ-இன் கீழ் உள்ள பதிவுகளின் ஒருங்கிணைந்த நிலையை உச்சநீதிமன்றமும் பல சட்ட அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரிவு 10(23சி)-இன் கீழ் வரும் ஒரு நிறுவனம், பிரிவு 12 ஏஏ-இன் கீழ் செயல்படும் தொண்டு அமைப்பு (டிரஸ்ட்) அல்லது ஓர் அமைப்பின் கீழும் ஒருங்கிணைந்து இருக்கலாம் என்பதை தற்போதைய நிதி மசோதாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பிரிவு 10(23சி)-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு 12 ஏஏ விலக்கு அளிக்க நிதிநிலை அறிக்கை திருத்தம் மறுக்கிறது. அதேபோல் 12 ஏஏ-இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு 10(23 சி) அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில், இதனால் அதிக குழப்பம் ஏற்படும் நிலை உருவாகும்.
பரிசீலனை
- இரண்டாவதாக, 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை கவனமாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனை, நிதிநிலை அறிக்கை திருத்தங்களுக்குப் பிறகு 12 ஏஏ-இன் கீழ் அளிக்கப்பட்ட பதிவு நிரந்தரமாக்கப்பட்டதுடன், அதை ரத்து செய்யும் அதிகாரமும் அளிக்கப்பட்டது. மீண்டும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் என்ற முறையைக் கையாண்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும், செயலற்ற தொண்டு அமைப்புகளை (டிரஸ்ட்டுகள்) விலக்கும் பொருட்டு, சுய அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பதிவு எண் தற்போது செயல்பாட்டில் இருக்கும் தொண்டு அமைப்புகளுக்கு ஆன்லைனில் கொடுக்கப்படலாம்.
- பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இருப்பதால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் தவிர்க்கக் கூடிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரிவு 10(23சி), 12 ஏஏ-இன் கீழ் அளிக்கப்படும் வரிவிலக்கு, இந்தியர்களின் மனிதநேயம், தொண்டுக்கு இடையே நெருங்கிய உறவு இருப்பதை வெளிப்படுத்தும்.
- மேலும், அரசு சாரா நிறுவனங்கள் செய்யும் பொதுத் தொண்டுக்கு ஒரு பசி ஊக்கியாக இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் அது பல சமூக பொதுத் தொண்டுக்கு இடைஞ்சலாக அமைய வாய்ப்பு உள்ளது.
- நிறுவனச் சட்டத்தில் நல்ல சீர்திருத்தங்களை நம்பிக்கையின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிப்படையில் அளித்துள்ளார். தொண்டு அமைப்புகள் (டிரஸ்ட்டுகள்) நம்பகத்தன்மையுடன் இருப்பதால், நிதி அமைச்சர் இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என்னைப் போல பலரின் தாழ்மையான வேண்டுகோள். இது ஒரு முழு விருந்துக்குத் தேவையான முக்கியப் பதார்த்தமாகும்.
நன்றி: தினமணி (06-02-2020)