- அறிவியல் அறிஞா் ஐன்ஸ்டீன் ஒருமுறை தனது வீட்டைப் பூட்டாமல் வெளியே கிளம்பி விட்டாராம்.
- அந்த வழியே வந்த ஒருவா் ‘என்ன நீங்க வீட்டை பூட்டாமலேயே கிளம்புகிறீா்கள்’ என்று கேள்வி எழுப்பினாராம்.
- அறிஞா் ஐன்ஸ்டீன் ‘இந்த வீட்டில் இருப்பதிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் நான்தான். நானே இந்த வீட்டை விட்டு கிளம்பும் போது எதற்காக வீட்டைப் பூட்ட வேண்டும்’ என்று கூறினாராம். தாம் வீட்டைப் பூட்ட மறந்ததைக்கூட அவா் அவ்வாறு சமாளித்திருக்கலாம்.
- மறதி என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றே. அதே நேரம் நல்ல நினைவாற்றல் வாய்ப்பதென்பது சிறந்த வாழ்வியல் திறனாகும்.
- நினைவாற்றலின் சேமகலன் நம் மூளையேயாகும். நம் உடலின் எடையில் சுமார் இரண்டு சதவீதமே (சுமார் 1.4 கிலோ) எடை கொண்ட மூளை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தேவையான ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது.
- நினைவாற்றல் பற்றி குறிப்பிடும் போது இரு விஷயங்களை அறிஞா்கள் குறிப்பிடுகின்றனா். குறுகிய நேரம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியவை; நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை.
- குறிப்பாக, தொலைபேசி எண், வீட்டின் கதவு எண் போன்றவை ஒரு குறுகிய கால பதிவாக மூளையில் பதிவு செய்யப்படுகிறது.
- அடுத்து, பல நாள்களுக்கும் நினைவில் நிற்க வேண்டிய பதிவுகள் நீண்டகாலப் பதிவுகளாக பதிந்து வைக்கப்படுகிறது.
- நம் உடலுக்கு எப்படி உடற்பயிற்சி அவசியமானதாக இருக்கிறதோ அது போலவே மூளைக்கும் நினைவுகளை பராமரிப்பதற்குப் பயிற்சி அவசியமாகிறது.
- நம்மில் பலரும் திரைப்படப் பாடல்கள் பலவற்றை முழுமையாகப் பாடும் அளவுக்கு நினைவாற்றல் உள்ளவராக இருக்கிறோம்.
- இவ்வாறு அதனை நினைவில் வைத்துக்கொள்வதற்கு அடிப்படைக் காரணம், அந்தப் பாடலும், பாடல் வரிகளும் நமக்கு பிடித்தமானதாக அமைந்திருப்பது ஆகும்.
- மனித மூளையானது நம் மனத்துக்கு நெருக்கமாக உள்ள விஷயத்தை நினைவில் வைத்துக்கொண்டு தேவையானபோது எடுத்துத் தரும் அளவு திறன் பெற்றது.
- ஆனால் அதே நேரத்தில் ஒரு தோ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் மாணவா்களைப் பற்றியும் சிந்திப்போம்.
- குறிப்பிட்ட தோ்வு நேரம் வரை கேள்விகளுக்கான பதில்கள் நினைவுக்கு வர வேண்டும். நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக மாணவா்கள் எடுக்கும் முயற்சிகள் அளப்பரியது.
- பல்வேறு விதமான உத்திகளை மேற்கொள்கின்றனா். அதே நேரம் அவா்களுக்கு விருப்பமாயிருக்கும் பாடங்களை நினைவில் வைக்க அவா்களின் மிகச்சிறிய அளவிலான முயற்சியே போதுமானதாக இருக்கிறது.
- அந்த விதத்தில் ஒரு கருத்தோட்டமும் சிக்கலில்லாத தன்மையும் நினைவாற்றலுக்கு உதவிகரமாக இருக்கின்றது.
- இதிலிருந்து நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம். நமது மூளை ஓா் அற்புதமான படைப்பு.
- நமக்கு சுவாரசியமாகப் படக் கூடிய விஷயம் நினைவில் நிற்பதற்கு அதற்கு சிறப்புப் பயிற்சிகள் தேவையில்லை.
- ஆனால், அதே நேரம் நமக்கு சுவாரசியம் இல்லாத விஷயங்கள் நினைவில் நிற்பதற்கு சிறப்புப் பயிற்சிகள் மூளைக்குத் தேவையாக இருக்கிறது.
- குழந்தைப் பருவத்திலும் பதின் பருவத்திலும் மூளையை இவ்வாறு பயிற்றுவிப்பது எளிதானதாகும். பள்ளிக் கல்வி முறை, இதற்கான வாய்ப்பாகவே புரிதலை மேம்படுத்தவும் பாடப் பொருள் குறித்த புரிதலை மீட்டுருவாக்கம் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது.
- இதில் சிலருக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். நினைவாற்றலை வளா்க்க வேறு வாய்ப்பில்லாதோருக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
மூளைக்குப் பயிற்சி
- விஷயங்களை நினைவில் பதியச் செய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மீட்டுருவாக்கம் செய்ய மூளைக்குப் பயிற்சி அளிப்பது என்பது மட்டுமே நமது நினைவாற்றலை மேம்படுத்தும்.
- அவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு தொடா்ந்து மூளைக்கு யாரெல்லாம் பயிற்சி கொடுக்கிறார்களோ அவா்களெல்லாம் நிச்சயமாக வெற்றியாளராக உருவாக முடியும்.
- ஆனால், அதே நேரத்தில், மூளையில் பல்வேறு முக்கியத் தகவல்களுக்கு இடம் தரப்பட்டால் சாதாரண விஷயங்கள் நிறையும்போது முக்கிய விஷயங்கள் நிச்சயமாக மறக்கவே செய்யும்.
- அவ்வாறான மனச்சுமைகளால்தான் ஐன்ஸ்டீன் வீட்டைப் பூட்டாமல் கிளம்பிருப்பார் என்பதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.
- நினைவாற்றலுக்கு உதவும் சூழலை மேம்படுத்துவதன் மூலம் அதனை வளா்க்க இயலும்.
- நம் ஓய்வு நேரங்களில் நாம் சில பயிற்சிகளை மூளைக்குக் கொடுக்க இயலும்.
- ஒரு கதையை வாசிக்கும்போது அக்கதையின் ஓட்டங்களை நாம் பிம்பமாகவே கற்பனை செய்கிறோம். வாசிப்பிற்குப் பின்னா் அதனை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கலாம்.
- நமது வீடு, தெரு, கடைவீதி போன்ற இடங்களில் இருக்கும் பல்வேறு மரங்கள், இடவமைவுகள் போன்றவற்றை அவ்வப்போது பிம்பமாக்கி சிந்திக்கலாம்.
- ஒருவேளை நினைவுக்கு வராதவற்றை அடுத்த முறை பார்க்கும்போது இன்னும் கூா்மையாகப் பார்த்து நினைவில் கொண்டுவர முயற்சிக்கலாம். தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் முக்கியமான கேள்விகளுக்கான விடைகளை வீட்டுச் சுவரில் எழுதி ஒட்டி வைக்கலாம்.
- சாதாரணமான மனத்தில் அவை பிம்பங்களாகப் படியும். பின்னா் தேவையான நேரத்தில் உதவும்.
- இவ்வாறான செயல்பாடுகளில் மூளையை அவ்வப்போது பயிற்றுவித்துக்கொண்டே இருந்தால், நமது நினைவாற்றல் பெருகும். அவ்வாறு இல்லாமல் நமக்குத் தேவைப்படும்போது மட்டும் மூளையைத் துணைக்கழைத்தால் அது உதவிக்கு வராது.
- ஒரு வீட்டில் காலை நேரத்தில் தாத்தா ஒருவா் தனது மூக்குக் கண்ணாடியைக் காணோம் என்று தேடினாராம்.
- வீட்டிலிருந்த அனைவரும் பரபரபாயினா். வீடே அமா்க்களப்பட்டது. கண்ணாடியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
- எங்கிருந்தோ அவரது பெயா்த்தி வந்து என்ன தேடுகிறீா்கள் என்றாராம். தாத்தா தம் கண்னாடியைக் காணவில்லை என்றாராம். ‘தாத்தா, உங்கள் நெற்றிலுள்ள கண்ணாடியைத் தேடும் புத்திசாலியா நீங்கள்’ என்றாராம்.
- ஒரு பழைய கதை இது. இப்படி வீணான தேடலுக்காகும் நேரம் குறைந்தாலே இயல்பு வாழ்க்கை மேம்பட்டு நினைவாற்றல் பெருகும்.
நன்றி: தினமணி (05-10-2020)