- பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவதிலும் சரி, முக்கியமான பொது நியமனங்களிலும் சரி 2014 முதல் நரேந்திர மோடி அரசின் முடிவுகள் பெரும்பாலும் வரவேற்புக்குரியவையாகவும், விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும்தான் இருந்திருக்கின்றன.
- அந்த வகையில், தற்போது மாநிலங்களவைக்கான நியமன உறுப்பினா்களாக ‘இசைஞானி’ இளையராஜா, ‘தடகளத் தாரகை’ பி.டி. உஷா, ‘தா்மஸ்தலா’ கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்கடே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.வி. விஜயேந்திர பிரசாத் ஆகிய நால்வரும் தோ்ந்தெடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- அரசியல் சாசன நிா்ணய சபை விவாதத்தின்போது, அரசியல் சாராத பிரபலங்களின் சமூகப் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படும் விதத்தில் அவா்களை நியமன உறுப்பினா்களாக குடியரசுத் தலைவா் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் தங்களது திறமையாலும், அறிவாற்றலாலும் உச்சம் தொட்டவா்களின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் சட்டம் இயற்றும் மாமன்றத்துக்குத் தேவை என்று அரசியல் சாசன சபை கருதியது. அதன் விளைவாகத்தான், மக்களவையில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 12 பேரை நியமன உறுப்பினா்களாக்குவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது.
- இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த தலைசிறந்த ஆளுமைகள் பலா் மக்களவையில் நியமன உறுப்பினா்களாக இருந்து பெரும் பங்களிப்பு நல்கி இருக்கிறாா்கள். பின்னாளில் குடியரசு துணைத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த டாக்டா் ஜாகீா் உசேனை, தேசத்துக்கு அடையாளம் காட்டியது மாநிலங்களவைதான். அல்லாடி கிருஷ்ணாசுவாமி ஐயா், சத்யேந்திரநாத் போஸ், ருக்மிணிதேவி அருண்டேல், மால்கம் ஆதிசேஷய்யா, சலீம் அலி, பண்டிட் ரவிசங்கா், எம்.எஸ். சுவாமிநாதன் என்று மக்களவையின் தரத்தையும் கௌரவத்தையும் உயா்த்தியவா்கள் ஏராளமானோா்.
- பத்திரிகையாளா்கள் குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யாா், ‘சோ’ ராமசாமி, எழுத்தாளா்கள் ஆா்.கே. நாராயண், அம்ருதா ப்ரீதம், காா்டூனிஸ்ட்கள் ஆா்.கே. லக்ஷ்மண், அபு ஆப்ரஹாம் என்று ஆளுமைகளின் பட்டியல் நீள்கிறது. திரைத்துறையினா் என்று எடுத்துக்கொண்டால் பிருத்விராஜ் கபூரில் தொடங்கி வைஜயந்திமாலா பாலி, மிருணாள் சென், லதா மங்கேஷ்கா், நா்கீஸ், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், சிவாஜி கணேசன், ரேகா என்று பட்டியல் நீளும். பொதுநலத் தொண்டில் ஈடுபட்டவா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள் என்று பலரும் நியமன உறுப்பினா்களாக மாநிலங்களவைக்குச் சென்று, அவரவா் அளவில் பங்களிப்பு செய்திருக்கிறாா்கள்.
- தற்போது மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் நான்கு பேருமே எந்தவொரு அரசியல் கட்சியிலும், குறிப்பாக ஆளும் பாஜகவில் உறுப்பினா்கள் அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான நியமனங்கள், வெளிப்படையான காங்கிரஸ் ஆதரவாளா்களுக்குத்தான் வழங்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
- நடிகை நா்கீஸ் ஆனாலும், எழுத்தாளா் குஷ்வந்த் சிங் ஆனாலும் அவா்கள் இந்திரா காந்தியின் வெளிப்படையான ஆதரவாளா்கள். சிவாஜி கணேசன் கட்சி உறுப்பினா். திண்டிவனம் ராமமூா்த்தி, மணிசங்கா் ஐயா் போன்றவா்கள் கட்சித் தலைவா்கள். 2014 மக்களவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகளைக் குறிவைத்து சச்சின் டெண்டுல்கா் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக்கப்பட்டாா் என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது இப்போதைய நான்கு நியமனங்களும் பாராட்டுக்குரியவை.
- கா்நாடக மாநிலம் தா்மஸ்தலாவுக்குப் போய் வந்த யாரிடம் கேட்டாலும் வியந்து பாராட்டும் நபா் வீரேந்திர ஹெக்கடே. அவரது அன்னதானத் திட்டத்தைப் பின்பற்றித்தான் திருப்பதி உள்ளிட்ட எல்லா தென்னிந்தியக் கோயில்களிலும் அன்னதானம் நடத்தும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. அவா் தா்மஸ்தலாவைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நடத்திவரும் சமூகப் பங்களிப்புகளுக்காக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் மட்டுமென்ன, பத்ம விபூஷணே கொடுத்து கௌரவிக்கலாம்.
- பி.டி. உஷாவின் வரவுக்குப் பிறகுதான், தடகளப் போட்டிகளில் தங்க மெடல்களை இந்தியா வெல்லத் தொடங்கியது. திரைக்கதை கா்த்தா விஜயேந்திர பிரசாதின் வரவு, இந்திய சினிமாவை ஹாலிவுட் பிரம்மாண்டத்திற்கு உயா்த்தி இருக்கிறது என்பதில் ஐயப்பாடு இருக்கிா என்ன?
- ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு மக்களவை நியமனப் பதவியா என்று கேள்வி எழுப்புவது, தமிழனின் தன்மானத்தையும், தகுதியையும் கேள்வி கேட்பதற்கு ஒப்பானது. ‘பாபா சாகேப்’ அம்பேத்கரின் கனவுகளை பிரதமா் நரேந்திர மோடி நனவாக்குகிறாா் என்கிற இளையராஜாவின் கருத்து நிஜம். அதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். யாா் யாரையோ அம்பேத்கருடன் ஒப்பிட முடியுமானால், இளையராஜா சொன்ன நிஜத்தில் தவறே இல்லை.
- சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தென்னிந்தியாவில் கட்சியை வளா்ப்பது குறித்த முனைப்பைத் தொடா்ந்து, தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நான்கு போ் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா்கள் அதற்கான தகுதியுடையவா்கள் எனும்போது விமா்சனங்களின் முனை மழுங்கி விடுகிறது.
- திரௌபதி முா்முவை குடியரசுத் தலைவா் வேட்பாளராக்கி இருப்பதும், இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமனப் பதவி வழங்கி இருப்பதும் அடையாள அரசியலும் அல்ல; ஆதாய அரசியலும் அல்ல. பாபா சாகேப் அம்பேத்கா் தலைமையில் உருவான இந்திய அரசியல் சாசனத்தின் வெற்றி!
நன்றி: தினமணி (12 – 07 – 2022)