- நாட்டிலேயே மிகச் சிறப்பான உணவு உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பைக் கொண்டது தமிழ்நாடு.
- இப்போதும், பட்டினிச் சாவு என்ற பேரவலம் வந்துவிடக் கூடாது என்றே மூன்று மாதங்களுக்குத் தமிழ்நாட்டு நியாய விலைக் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், இரண்டு கிலோ சீனி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் வழங்கவும், கூடவே, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
- பாராட்டுக்குரிய செயல்பாடு இது. அதேநேரத்தில், அரசின் நன்னோக்கம் முழுமையாக ஈடேற, மக்களை இந்த உதவிகள் சிதறாமல் சென்றடைவது முக்கியம். அதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.
- விநியோகச் சங்கிலியில் நிறையப் புகார்கள் எளிய மக்களிடமிருந்து வருகின்றன. கடைகளுக்குப் போதுமான அளவு பொருட்களை அனுப்பாமல், கடைக்காரர்கள் மூலம் சமாளிக்கச் சொல்வது, போலியான கணக்குகளில் அரிசியைப் பதுக்கிக் கள்ளச்சந்தையில் விற்பது, மின்னணுத் தராசுகள் அளிக்கப்பட்டிருந்தாலும்கூட சாமர்த்தியமாக எடை மோசடியில் ஈடுபடுவது என்பதான புகார்களை மக்களிடமிருந்து கேட்க முடிகிறது.
பசியால் வாடவிடக் கூடாது
- குடும்ப அட்டை இல்லாதவர்கள், அதைத் தவறவிட்டவர்களும்கூட ஆதார் அட்டை போன்ற ஏனைய சான்றுகளைக் காட்டி, அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறது அரசு.
- இதற்கென வழக்கத்தைவிட கூடுதல் ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், வீதிகளில் அரிசி கேட்டுக் கையேந்தி வருவோர் இப்போது மீண்டும் தென்படத் தொடங்கியிருக்கிறார்கள்; சமூகநீதிப் பார்வையாலும் அரிசி அரசியலாலும் நெடுங்காலப் பயணத்தில் தமிழ்நாடு ஒழித்த முறைமை இது.
- ஊரடங்கின் விளைவாக அன்றாடப் பிழைப்பில் இருப்பவர்கள் வருமானத்தை இழந்திருந்தாலும் அரசின் உதவிகள் முழுமையாகச் சென்றடையும்பட்சத்தில் வீதிகளில் இப்படி அரிசி கேட்டு வருபவர்களைக் காண முடியாது.
- தமிழ்நாடு அரசு இது தொடர்பில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- அதேபோல, அரசு ஒதுக்கியுள்ள உதவிகள் போதுமானவை அல்ல என்ற உண்மைக்கும் அது முகம் கொடுக்க வேண்டும். மத்திய தர வர்க்கத்தின் கீழ்த்தட்டில் இருப்பவர்களில் கணிசமான ஒரு பகுதியினரையும் வறுமைக்குள் தள்ளியிருக்கிறது கரோனா. இதனால், கடந்த மாதம் ரேஷன் அரிசி வாங்காதவர்களும்கூட, இம்மாதம் முதல் அரிசி கேட்டுக் கடைகளில் நிற்கிறார்கள்.
- எளியோரின் தேவை அறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் ஒருவரையும் பசியால் வாடவிடக் கூடாது நாம்!
நன்றி: தி இந்து (07-05-2020)