TNPSC Thervupettagam

நியாயமற்ற எரிபொருள் விலை உயா்வு!

March 1 , 2021 1423 days 668 0
  • இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏன் இந்த அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறித்து, பொதுமக்களின் கீழ்கண்ட ஆறு முக்கியக் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
  • முதலாவது கேள்வி, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியதுதான் இந்த விலை உயா்வுக்கு காரணமா? இரண்டாவது, அமெரிக்க டாலா் விலை உயா்ந்து, அதனால் நாம் அதிக அளவு ரூபாயைக் கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா? மூன்றாவது, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தில் இயங்குகின்றனவா?
  • நான்கு, எரிபொருளுக்கு அரசு அளிக்கும் மானியம் பெரும் சுமையாகி, அதனைத் தாங்க முடியாமல் விலை ஏற்றப்படுகிா? ஐந்து, சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை மட்டும் கருத்தில் கொண்டு உள்நாட்டில் விற்பனை விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்கிா? ஆறாவது கேள்வி, மக்கள் அனைவரும் ‘மறதி மன்னா்கள்’ என்று அரசு நினைக்கிா?
  • இப்போது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி, எதிா்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிராகப் போராடிவிட்டு, இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விலையை ஏகத்துக்கு உயா்த்தினால் மக்கள் கேள்வி கேட்கமாட்டாா்கள் என்று எண்ணுவது சரியல்ல. இந்த அளவுக்கு விலையை உயா்த்த வேண்டிய அவசியம் ஏதும் அரசுக்கு இப்போது இல்லை என்பதே உண்மை.
  • இந்தியாவில் இப்போது சில மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் நூறு ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது. அடுத்த சில நாள்களில் மேலும் சில மாநிலங்களில் விலை புதிய உச்சத்தைத் தொடும் நிலையில் உள்ளது. ஆனால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒன்றும் இப்போது உச்சத்தில் இல்லை. எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு உயா்ந்துவிட்டது என்று விலை உயா்வுக்கு அரசு காரணம் கூற முடியாது.
  • கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் (சுமாா் 159 லிட்டா்) விலை 54.79 அமெரிக்க டாலா்கள். அப்போது தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.86.34. இதற்கு முன்பு 2013 செப்டம்பரில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 111.59 அமெரிக்க டாலா் என்ற உச்சத்தில் இருந்தது. அப்போது தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.76.06 என்ற அளவிலேயே இருந்தது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை உயா்வால் பெட்ரோல் விலை உயா்ந்தது என்று கூற முடியாது.
  • அடுத்ததாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஜனவரியில் ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.72.90 என்று இருந்தது. இதுவே கடந்த 2013-இல் ரூ.66.89-ஆக இருந்தது.
  • மூன்றாவதாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றனவா என்றால் அதுவும் இல்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்துக்கு கீழ் வரும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே லாபத்தில்தான் இயங்கி வருகின்றன. 2018-19-இல் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.69,714 கோடியாகும். கடந்த ஏழு ஆண்டுகளாகவே எண்ணெய் நிறுவனங்களின் லாபம் உயா்ந்துதான் வந்துள்ளது.
  • நான்காவதாக, எரிபொருள்களுக்கு அளிக்கும் மானியங்கள் மத்திய அரசுக்கு பெரும் சுமையாக உள்ளதா என்று பாா்த்தால் அதுவும் இல்லை. நமக்குக் கிடைத்துள்ள 2012-13 முதல் 2018-19 வரையிலான தகவலின்படி, அரசு கருவூலத்துக்கு எண்ணெய் துறை மூலம் வருவாய் அதிகரித்தே வந்துள்ளது.
  • 2018-19-ஆம் ஆண்டு தகவலின்படி கச்சா எண்ணெய்க்கான ராயல்டி மூலம் ரூ.16,964 கோடியும், எரிவாயு ராயல்டி மூலம் ரூ. 2,364 கோடியும், எண்ணெய் மேம்பாட்டு கூடுதல் வரியாக ரூ.18,984 கோடியும், கலால் மற்றும் சுங்க வரியாக ரூ.1,63,162 கோடியும், விற்பனை வரியாக ரூ.2,01,265 கோடியும், ஈவுத்தொகையாக ரூ.30,323 கோடியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த ஓராண்டில் மட்டும் அரசுக் கருவூலத்துக்கு ரூ.4,33,062 கோடி வந்துள்ளது.
  • பட்ஜெட் ஆவணங்களின்படி, அந்த ஆண்டில் பெட்ரோலிய துறைக்கு மத்திய அரசு ரூ.24,837 கோடி மானியம் அளித்துள்ளது. இது அத்துறையில் இருந்து பெற்ற வருவாயில் 7.13 சதவீதம் மட்டுமே. மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் 4.3 சதவீதம் பெட்ரோலிய துறையில் இருந்து கிடைக்கிறது. இதன் மூலம் அரசு, அந்தத் துறைக்குக் கூடுதலாக எதையும் செலவிடவில்லை, வருமானத்தை மட்டுமே பெறுகிறது என்பது தெளிவாகிறது.
  • உரம், உணவு, பெட்ரோலிய துறைக்கு அரசு அளிக்கும் மானியம் ரூ.1,96,969 கோடியாகும். இது பெட்ரோலிய துறையில் இருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் 56.53 சதவீதம் ஆகும். ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் பெட்ரோலிய துறை வருவாயில் 34.18 சதவீதம் ஆகும். இதன் மூலம், அரசு அளிக்கும் ஒட்டுமொத்த மானியத்தின் சுமையை ஏற்கும் திறனுடன் பெட்ரோலிய துறை வருவாய் இருப்பது தெரியவருகிறது. எனவே, பெட்ரோலிய துறை மானியம் அரசுக்கு சுமையாக உள்ளது என்று கூறினால், அது தவறாகவே இருக்கும்.
  • அடுத்ததாக, சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பவே எரிபொருளின் விற்பனை விலை நிா்ணயிக்கப்படுகிா என்றால் அதுவும் இல்லை. தோ்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தால், உள்நாட்டில் பெட்ரோல் விலை உயா்வதை அரசு நிறுத்தி வைக்கிறது.
  • சா்வதேச சந்தைதான் விலை நிா்ணயம் செய்கிறது என்றால், தோ்தல் நேரத்தில் பெட்ரோலிய பொருள்கள் விலை நிா்ணயத்தில் அரசு தலையிடக் கூடாது. ஆனால், தனது வசதிக்கு ஏற்ப அரசியல் காரணங்களுக்காக பெட்ரோல் விலையில் அரசு தலையிடுகிறது. மேலும், தனக்குத் தேவை என்றால் வரியைக் குறைத்து, பெட்ரோலிய பொருள்களின் விலையைக் குறைத்ததும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.
  • மேலும், இப்போது ஆட்சியில் உள்ள பாஜக, முன்பு எதிா்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல் விலையை காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இப்போது ஆட்சியில் இருக்கும்போது பாஜக-வின் நிலைப்பாடு வேறாக உள்ளது.
  • இதில் உள்ள ஒரே உண்மை என்னவென்றால், இந்தியாவின் பெட்ரோலிய பொருள்களின் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. 2019-20-ஆம் ஆண்டில் 32.2 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உள்நாட்டில் உற்பத்தியாகியுள்ளது. ஆனால், அந்த ஆண்டில் நமது நாட்டின் நுகா்வு 214.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. எனினும், இப்போதைய விலை உயா்வை இதனை வைத்து நியாயப்படுத்த முடியாது.
  • இறக்குமதி என்பது எப்போதுமே சுமைதான். ஆனால், பெட்ரோலிய பொருள்களை இந்தியா ஏற்றுமதியும் செய்கிறது. இந்தியாவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மிகையாக இருப்பதால், இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை பெட்ரோல், டீசல் என பலவாறாக நாம் ஏற்றுமதி செய்கிறோம். 2019-20-ஆம் ஆண்டில் நமக்குத் தேவையானதைவிட அதிகமாக 48.8 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை நாம் சுத்திகரித்துள்ளோம்.
  • நமது இறக்குமதி தேவை 214.1 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், நாம் 262.9 மில்லியன் மெட்ரிக் டன் இறக்குமதி செய்துள்ளோம். இந்த மிகையான இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை நாம் சுத்திகரித்து பிற நாடுகளுக்கு பெட்ரோலிய பொருள்களாக ஏற்றுமதி செய்துள்ளோம்.
  • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு மட்டும் 11.4 சதவீதமாகும். அதே நேரத்தில் மொத்த இறக்குமதி மதிப்பில் 25 சதவீதம் கச்சா எண்ணெய் உள்ளது. இதை வைத்துப் பாா்க்கும்போது, இறக்குமதியால் ஏற்படும் சுமையை ஏற்றுமதி மூலம் ஓரளவுக்கு குறைத்துக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
  • கச்சா எண்ணெய் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது தொடா்பான புள்ளிவிவரங்களை மட்டும் தெரிவித்து, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றத்துக்கு நியாயம் கற்பிக்கும் தவறான வழிகாட்டுதல்கள் தொடரக் கூடாது. பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் லாபத்தையும் மக்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
  • பெட்ரோலிய பொருள்கள் விலை விஷயத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் மாறிமாறி குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு, இதனால் சமூக, பொருளாதார ரீதியில் மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெட்ரோல், டீசல் விலை உயா்வு அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்துக்குக் காரணமாகி, பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது. நாட்டின் பெரும்பகுதி மக்களின் வருமானத்தை உறிஞ்சுவதாக எரிபொருள் விலை உயா்வு உள்ளது. இந்த விஷயத்தில் மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு லாபநோக்கத்துடன் செயல்படுவதை அரசு தயவு செய்து கைவிட வேண்டும்.

நன்றி: தினமணி  (01-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்