TNPSC Thervupettagam

நிறவெறி நீங்க வேண்டும்

February 10 , 2023 549 days 258 0
  • ஜனவரி ஏழாம் தேதியன்று டென்னெஸி மாகாணத்தில் விதிமுறைகளை மீறி வேகமாகத் தன் வாகனத்தைச் செலுத்தியதற்காகப் பிடிபட்ட டயர் நிகோல்ஸ் என்ற இருபத்தொன்பது வயது ஆப்பிரிக்க -  அமெரிக்க இளைஞர் ஐந்து காவலர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கு எதிராக அந்நாட்டில் ஆங்காங்கே கண்டனப் பேரணிகள் நடைபெற்றுள்ளன.
  • அமெரிக்க அதிபர், துணை அதிபர், பல்வேறு நகரங்களின் மேயர்கள், செனட் சபை உறுப்பினர்கள் அனைவரும் இது குறித்துக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். டயர் நிகோல்ûஸத் தாக்கிய அதிகாரிகள் ஐவர் மீதும் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. எனினும், அந்த இளைஞரின் இன்னுயிருக்கு இவை யாவும் ஈடாகப் போவதில்லை. அமெரிக்க வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல.
  • கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜார்ஜ் ஃப்ளாய்டு என்ற நாற்பத்தேழு வயது ஆப்பிரிக்க - அமெரிக்கர் இதே போன்று மிகக் கொடூரமான முறையில் அமெரிக்க காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட போது மிகப்பெரிய அளவில் கலவரங்கள் வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
  • அமெரிக்க நாட்டில் உலகின் பல்வேறு இனத்தவர்களும் வாழ்கின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் 13% பேர் ஆப்பிரிக்க -அமெரிக்கர்கள் எனப்படும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது.
  • ஆயினும் அமெரிக்க காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுவாக மற்ற இனத்தவரைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் கொல்லப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறியவர்களில் பத்து லட்சம் பேருக்கு ஐந்து பேர் இவ்வித நடவடிக்கைகளுக்கு ஆளாகும் அதே சமயம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் பத்து லட்சம் பேருக்கு நாற்பத்திரண்டு பேர்  இக்கொடுமைகளுக்கு ஆளாவதாக ஒரு கணக்கீடு கூறுகிறது.
  • அதாவது, ஆசியர்களைப் போல எட்டு மடங்கு அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு ஆப்பிரிக்கப் பின்புலம் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில்,  இது போன்ற நிகழ்வுகளை வெள்ளையர்களின் ஆழ்மனதில் புதைந்திருக்கும் நிறவெறியின் வெளிப்பாடாகத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
  • மாபெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாயினும் அவர்களைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி, உரிய விசாரணையின் அடிப்படையில்  மரண தண்டனை வழங்கப்படும் என்றால் அதை யாரும் விமர்சனம் செய்யப் போவதில்லை. ஆனால், தங்களின் உள்ளத்தில் உறைந்திருக்கும் நிறவெறி உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாத அதிகாரிகளால் இப்படிப்பட்ட உயிரிழப்புகள் நேரும்பொழுதுதான் உலகமே அதனைக் கவலையுடன்  உற்று நோக்குகின்றது.
  • துப்பாக்கி வைத்துக் கொள்வது தனி மனித உரிமை என்று கூறும் அமெரிக்கா, தனது குடிமக்களில் பலர் பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டு பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய பின்னரும் அந்த உரிமையைத் தடை செய்ய முன்வரவில்லை.
  • தனி மனித உரிமைக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்ற அந்நாட்டின் அதிகாரவர்க்கம்  தங்களுடன் இணைந்து வாழும் ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு அதே முக்கியத்துவத்தை அளிக்காதது பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபை கட்டமைக்கப்பட்ட பின்பு, இவ்வுலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சமமான அந்தஸ்து இருப்பதாக ஒப்புக்கொண்ட பின்னரும், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் நடத்திய கொடுங்கோல் ஆட்சி தொடர்ந்தது. இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட உலகளாவிய பொது நிகழ்வுகளில் அந்நாடு கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
  • 1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த கறுப்பினத்தவர்க்கு சம உரிமை வழங்கப்பட்டு, நெல்சன் மண்டேலா அந்நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகே அத்தகைய தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • உலகளாவிய நடப்புகள் இவ்விதம் இருந்தாலும் உலகெங்கிலும் உள்ள வெள்ளையர்கள் பலரது மனத்தில் இன்னமும் தாங்களே பிற நிறத்தவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர்கள் என்ற எண்ணம் வெகு ஆழமாக ஊன்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற  நாடுகளில் வசிக்கும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிறவெறி சார்ந்த வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாவது இன்றளவும் தொடர்கின்றது.
  • அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் தங்கிப் பணிபுரியும் இந்தியர்கள் பலர் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் செய்திகள் வழக்கமாகிவிட்டன. 
  • தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, சுற்றுலா ஆகிய பல துறைகளில் வளர்ச்சியைக் கண்டிருக்கும் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவும், இயலுமென்றால், அந்நாட்டிலேயே தங்கி விடவும் விரும்புவோர் உலகெங்கிலும் உள்ளனர். மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து எப்படியாவது அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று அன்றாடம் பல்லாயிரக்கணக்கானவர்கள் முயற்சி செய்கின்றனர்.
  • இவ்வாறு உலகமக்கள் பலருடைய கனவு தேசமாக விளங்கும் அமெரிக்காவில் புரையோடியிருக்கும் நிறவெறி முழுவதுமாக அகற்றப்படவேண்டும். குறிப்பாக அந்நாட்டில் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு இது தொடர்பான மனவளப் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாக தங்களுடைய கடமையை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பொருளாதார - ஆயுத பலத்தின் காரணமாக உலகத்தின் உச்சியில் இருக்கின்ற அமெரிக்க தேசம் இனியேனும் தனது குடிமக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் வளர்த்தெடுக்க முனைப்புக் காட்ட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (10 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்