TNPSC Thervupettagam

நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி

April 29 , 2021 1366 days 569 0
  • நிறுவனங்களுக்கான வரிவிதிப்பில் உலகளாவிய ஒத்துழைப்புக்காக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனெட் எல்.யெல்லன் முன்வைத்திருக்கும் யோசனை மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.  
  • உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் இதற்கு ஒப்புக்கொண்டு, அமெரிக்க நாடாளுமன்றத்திலும் வரி விகித அதிகரிப்புக்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும்.
  • அப்படிக் கிடைத்தால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் சிதைவிலிருந்து தொடங்கிய வரிக்கொள்கைகளின் போக்கில் இனிமேல் தலைகீழ் மாற்றம் ஏற்படும்.
  • பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளையும் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் இதற்கு யெல்லன் ஒப்புக்கொள்ள வைப்பாரா?
  • தற்போது, வருமானங்களை மடைமாற்றி மக்களுக்கு உதவுவதற்கும், தொழில் நிறுவனங்கள் மூடப்படாமல் இருப்பதற்கும் அரசுகளுக்கு நிதியாதாரங்கள் தேவை. ஆனால், அவற்றின் நிதியாதாரங்கள் பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
  • இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறைகள் வரலாறு காணாத அளவை எட்டியிருக்கின்றன.

பூதாகரமான பற்றாக்குறைகள்

  • கூடுதல் வரி வசூலிப்புகள் இதுபோன்ற பெரும் பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கு உதவும்; அதனால்தான் அமெரிக்க நிர்வாகம் தற்போதைய திட்டத்தை உத்தேசித்திருக்கிறது. ஆனால், தொழில் நிறுவனங்களும் மரபிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை எதிர்ப்பார்கள்.
  • எனினும், பணக்காரர்களுக்கு அதிகமாக வரிவிதிப்பது என்ற கருத்துக்கு ஜெஃப் பெஸோஸ் போன்ற சில பணக்கார அமெரிக்கர்கள் ஆதரவளித்துள்ளனர். இதுபோன்ற உத்தேசங்கள் 2011-லிருந்து இருக்கவே செய்கின்றன.
  • அப்போது அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்த பணக்காரர்கள் பலர் பணக்காரர்கள் மீது அதிக அளவில் வரிவிதிப்பதை ஆதரித்தார்கள்.
  • 2007-2009-ல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது முதலாளித்துவ நாடுகளை வலுப்படுத்துவதற்காக வாரன் பஃபெட் இந்த யோசனையை முன்வைத்தார். அதன் விளைவாக, இந்த யோசனை பல முறை தலைகாட்டியது.
  • ஆனால், நிறுவனங்களின் வரியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக ட்ரம்ப் நிர்வாகம் அதிகபட்ச வரிவரம்பு விகிதத்தை 35%-லிருந்து 21%-ஆகக் குறைத்தது. நிறுவன வரி விகிதத்தை அதிகப்படுத்துவது ஏன் கடினம் என்பதையும், இதில் உலகளாவிய ஒப்பந்தம் தேவை என்று யெல்லன் முன்மொழிந்தது ஏன் என்பதையும் இதனால் புரிந்துகொள்ள முடியும்.

வரிக் குறைப்பின் துவக்கம்

  • 1990-களில் சோவியத் ஒன்றியம் சிதைந்துபோனதும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள் மிக மோசமான பாதிப்பை அடைந்தன; அவற்றின் பொருளாதாரக் காயங்களை ஆற்றிக்கொள்ள அவற்றுக்கு முதலீடுகள் தேவைப்பட்டன.
  • உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவை வரி விகிதங்களை வெகுவாகக் குறைத்தன. இதனால், யார் மிகவும் குறைவாக வரி விதிப்பதென்று கடும் போட்டி ஏற்பட்டது.
  • ஐரோப்பிய நாடுகள் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மட்டுமல்லாமல் தங்கள் நாடுகளிலிருந்து முதலீடுகள் வெளியே சென்றுவிடாமல் தடுக்கவும் தங்கள் வரி விகிதத்தைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் உலகளாவிய விளைவுகள் ஏற்பட்டன.
  • நாடுகளிடம் நிதியாதாரம் உள்ளிட்ட ஆதாரங்கள் குறைந்துபோய் அரசின் சேவைத் துறைகளில் செலவுகளைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், தனியார்மயமாக்கும் நிலைக்குத் தூண்டப்பட்டன.
  • கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்றவற்றுக்கான நிதியாதாரத்துக்கு அரசுகள் திண்டாடின.
  • தனியார் துறையினர் ஏழைகளுக்குச் சேவையாற்றுவதில்லை என்றாலும், வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றையடுத்து ஒன்று என்று தனியார்மயத்துக்கு மாறினார்கள். இப்படியாக, நாடுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன.
  • நிறுவனங்கள் அதிக வரி விதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக குறைவான வரி விதிப்பு உள்ள நாட்டுக்குத் தங்கள் உற்பத்தி மையங்களை மாற்றிக்கொண்டதை உலகம் காண நேரிட்டது.
  • இதுபோன்ற செயல்பாடுகளால் அமெரிக்காவுக்கு 10 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 2009-ல் கூறினார்.
  • இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 1990-களிலிருந்து இந்தியாவும் அதன் வரி விகிதங்களைக் குறைத்திருக்கிறது. மிகச் சமீபத்தில் 2019-ல், தெற்காசிய நாடுகள் பலவற்றுக்கும் இணையாக இந்தியாவில் நிறுவன வரி விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டது.
  • இதுபோன்ற வரிக்குறைப்புகளால் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதும் ஏழைகளுக்கான திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் பாதிக்கப்படுவதும் நிகழ்கின்றன.
  • நேரடி வரிகள் குறைக்கப்படுவதால் அரசுகள் தங்கள் வருவாய் ஈட்டலுக்கு, மக்களைச் சுரண்டக்கூடிய மறைமுக வரிகளைச் சார்ந்திருப்பது அதிகரித்திருக்கிறது.
  • மதிப்புக் கூட்டப்பட்ட வரி, ஜிஎஸ்டி வரி போன்றவை அதிக வருவாய் ஈட்ட அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இது, வசதியற்றவர்களைப் பாதிப்பதோடு தொடர் விளைவில் பொருளாதார மந்தத்துக்கும் காரணமாகிறது.
  • உலகளாவிய முதலானது பெரிதும் நகர்ந்துகொண்டே இருப்பது, அது குறைந்த வரிகளைக் கொண்ட நாடுகளையும் இயக்கத்தில் இல்லாத நிறுவனங்களையும் பயன்படுத்திக்கொண்டு தனது லாபங்களையும் முதலீடுகளையும் உலகம் முழுக்க இடம்மாற்றிக்கொண்டிருக்கிறது.
  • இந்த இடம்பெயரும் தன்மை காரணமாக உலகளாவிய முதலினால் நாடுகளை ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கும்படிச் செய்ய முடிந்திருக்கிறது. ஆக, உலகளாவிய ஒத்துழைப்பு இல்லாமல் நிறுவன வரி விகிதங்களை அதிகரிக்க முடியாது.
  • இந்த ஒத்துழைப்புக்கு அமெரிக்கா மிகவும் முக்கியமானது – உலகளாவிய செல்வாக்கைப் பெற்றிருக்கும் அமெரிக்கா முதல் அடியை எடுத்து வைத்துவிட்டதால், இது நடக்கலாம்.
  • அப்படி நடந்தால் ஏற்றத்தாழ்வுகள் ஓரளவுக்குக் குறையும், மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் பெரும் முன்னேற்றம் ஏற்படும், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து முதலானது வேறு நாடுகளுக்குச் செல்வது குறைந்து வறுமை ஒழிப்பில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!

நன்றி: இந்து தமிழ் திசை (29 - 04 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்