- மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றில், பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்படும் பெரும்பாலான மனுக்களுக்கான காரணம், வருவாய்த் துறை ஆவணங்களால் எழும் சிக்கல்கள்தான்.
- ‘எங்களது பூர்வீக நிலத்தின் பத்திரம், பட்டா எனது தாத்தா பெயரில் உள்ளது. ஆனால், ஊருக்கே சம்பந்தம் இல்லாதவர் திடீரென வந்து, தன் பெயரில் பட்டா உள்ளதாகச் சொல்லி, நாங்கள் அத்துமீறி நுழைந்திருப்பதாகக் காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.
- கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால், ‘யுடிஆர் பதிவேட்டில் பட்டா மாறியுள்ளது. இதை மாற்றும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்க்கே உள்ளது’ எனச் சொல்லுகிறார்’ என்ற புலம்பல்கள் வாரந்தோறும் வழக்கமான காட்சியாகிவிட்டன.
விதவிதமான புகார்கள்
- ‘கூட்டுப் பட்டாவில் என்னுடைய பங்காளிகள் பெயர் இருக்கிறது. ஆனால், என் பெயர் இல்லை’, ‘கிராம நத்தமாக இருந்த நிலத்தைப் புன்செய் நிலமாக வருவாய்த் துறை பதிவேட்டில் மாற்றிவிட்டார்கள்’, ‘நில அளவைப் பதிவேட்டிலும், வரைபடத்திலும் உள்ள சர்வே எண் உட்பிரிவில் தவறுதலாக உள்ளது’, ‘நில அளவைப் பதிவேட்டிலும் வரைபடத்திலும் உள்ள பரப்பளவு, கிராம நிர்வாக அலுவலர் வைத்துள்ள அ.பதிவேட்டுடன் ஒத்துப்போகவில்லை’ என்று விதவிதமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அத்தனைக்கும் யுடிஆர் (‘அப்டேட்டடு ரெவின்யு ரெக்கார்டு’) பதிவேட்டில் ஏற்பட்ட பிழைகளே முக்கியக் காரணம்.
- ‘கிணற்றுக்குப் பதிலாக ஊருணி எனப் பதிவிட்டுள்ளார்கள்’ என்பது போன்ற கோரிக்கை மனுக்களும்கூட சர்வசாதாரணம். இந்தப் பிழைகளை வருவாய்த் துறை உரிய காலத்தில் சரிசெய்யவில்லை என்பதே, இன்று உரிமையியல் நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்குக் காரணம். உரிமையியல் வழக்குகள் சமயங்களில் குற்றவியல் வழக்குகளாகவும் மாறியிருக்கின்றன.
- இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தலித் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட லட்சக்கணக்கான ஏக்கர் பூமிதான, பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வழக்குகளும் தொடர் போராட்டங்களும் நடந்துவருகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் வருவாய்த் துறை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றால், முதலில் முறையான நில அளவையை மேற்கொண்டு, அது தொடர்பாகப் பதிவேடுகளைப் புதுப்பிக்க வேண்டும்.
நில அளவை புதிதல்ல
- சோழ, பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்திலேயே நில அளவை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. எனினும், 17-ம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆட்சிக் காலத்தில் நில அளவைகள் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டன. அதற்குச் சான்றாக, நில அளவை குறித்த பெரும்பாலான சொற்கள் இன்றும் பாரசீக, உருது மொழியிலேயே உள்ளதைச் சொல்ல முடியும்.
- பிரிட்டிஷார் 1894-ல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்தனர். இதனால் எஸ்டேட், குத்தகை நிலங்களை அளப்பது கட்டாயத் தேவையானது. மேலும், நில வரியை ஒழுங்குபடுத்துவதற்காக நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு, மேய்ச்சல் நிலம், வனம், நீர்நிலை, புறம்போக்கு என வகைப்படுத்தி 1923-ல் இந்தியா முழுவதும் நில அளவை செய்தனர். அப்போது மா, குழி, குண்டு, தட்டு என்று மக்கள் புழங்கிவந்த சொற்களையே நிலத்தின் அளவாகப் பதிவுசெய்தனர்.
- சுதந்திர இந்தியாவில் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டதோடு, நில உச்சவரம்புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. ஜமீன் நிலங்களை உழவடைதாரர்களுக்கு அளவை செய்து வழங்கிட 1973, 1983 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்ட், ஏக்கர், ஹெக்டேர் ஆகிய அளவீடுகளில் பதிவிடப்பட்டது. (யுடிஆர்) என்று அழைக்கப்பட்ட இந்த நில அளவையின்போது, தாசில்தாருக்குக் குடைபிடித்தவர், சர்வேயருக்குத் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தவர் பெயர்களில் பட்டாக்கள் மாற்றப்பட்டதாக வழக்குகள் நடந்தேறியுள்ளன.
- இந்தக் குறைபாடுகளை நீக்க அரசுத் தரப்பில் 1984 முதல் 1988 வரை கெடு கொடுத்தார்கள். எனினும், மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக இருந்ததால் பெரிய அளவில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதன் விளைவு, இன்றைக்கு லட்சக்கணக்கான வழக்குகளாகவும் சமூகப் பிணக்குகளாகவும் தொடர்கின்றன.
- கடந்த 30 ஆண்டுகளில் நீர்நிலைகள், ஆறு, ஓடை, புறம்போக்கு, வண்டிப்பாதை, மேய்ச்சல் தரிசுகளை அரசே மாற்றம் செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் கிராமங்கள்கூட அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றங்கள் கண்டுள்ளன. பல ஊர்களில் சிறுவர்கள் விளையாடிய மந்தைவெளி, குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் வருவாய்த் துறைப் பதிவேட்டில் தனிப் பதிவேடுகளாக இருக்கின்றனவே தவிர, உட்பிரிவு செய்து அவை வரைபடத்தில் ஏற்றம் செய்யப்படவில்லை. இதனாலும்கூட பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.
பஞ்சமி நிலம் எவ்வளவு?
- மத்திய அரசு 1992-ல் வெளியிட்டுள்ள வளர்ச்சி விகிதாச்சாரக் கணக்கு அறிக்கையில், ‘இந்திய மக்கள்தொகையில் 70% விவசாயத்தைச் சார்ந்தே வாழ்க்கையை நடத்துகிறார்கள். 41.63 % மக்களுக்கு முற்றிலுமாக வீடு இல்லை, 50 % நிலம் இல்லாதவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் நாடோடிகளாக உள்ள குழுக்களின் சதவீதத்தைக் கணக்கிட முடியவில்லை என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.
- நிலமற்ற ஏழைகளுக்குத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பஞ்சமி மற்றும் பூமிதான நிலங்களை வழங்க வேண்டுமென்றால், நில அளவை செய்ய வேண்டியது அவசியம்.
- பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நில அளவை மேற்கொள்ளப்பட்டபோது, இந்தியா முழுவதும் 6.35 கோடி ஹெக்டேர் நிலத்தை ‘பயன்பாடு இல்லாத நிலம்’ எனப் பதிவிட்டு, அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த நிலங்கள் தற்போது பெருமுதலாளிகளின் கைகளில் உள்ளன. பினாமி சொத்துகளின் பிறப்பிடம் பெரும்பாலும் அறநிலையத் துறை சொத்துகளே.
- கோயில் நிலத்தின் உழவடைதாரருக்கும் அறநிலையத் துறை பதிவேட்டில் உள்ள குத்தகைதாரருக்கும் சம்பந்தமே இருக்காது.
- ‘நில உச்சவரம்புச் சட்டத்தின்படி தனிநபர் 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த நடைமுறையை ஓரளவுக்கு நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் கேரளம், வங்கம், ஜம்மு காஷ்மீர் மட்டுமே. மற்ற மாநிலங்களில் இவை பெரிதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- பெரும்பாலும் பினாமிகளின் பெயர்களிலேயே இந்தச் சொத்துகள் மூழ்கிக் கிடக்கின்றன. ஒற்றைச் சாளர முறையில் தொழில் தொடங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட அரசு நிலங்களும்கூட பினாமியாக உள்ளன. இதைத் தடுக்க 1989-ல் இயற்றப்பட்ட பினாமி சொத்துத் தடுப்புச் சட்டம், இதுநாள் வரையில் யார் மீதும் பாயாததற்குக் காரணம் என்ன?’ என்று கேள்வி எழுப்புகிறார் நில உரிமைச் செயல்பாட்டாளரான கருத்தமலை செல்வராசு. ‘இந்த நிலங்களை எல்லாம் கண்டுபிடித்து, நிலமற்றவர்களுக்கு வழங்க வேண்டுமானால், மீண்டும் நில அளவை செய்ய வேண்டும்’ என்கிறார் அவர்.
- ‘நிலமற்றவர்களுக்கு நிலம் வேண்டும்’ என்ற தங்களது பல்லாண்டு காலக் கோரிக்கையை முன்வைத்து 2012-ல் லட்சம் பேர் திரண்டு, குவாலியரிலிருந்து டெல்லிக்கு நெடும் பயணம் மேற்கொண்டனர். அந்த நெடும் பயணம் காட்சிப்பதிவாக காலவோட்டத்தில் கரைந்துபோயிருக்கலாம். ஆனால், எளிய மக்களின் சுடும் மூச்சு நெருப்பாக மாறும் தன்மை கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17-02-2020)