நிலம் கையகப்படுத்துவதில் நிகழ்த்தப்படும் அநீதி
- ‘நிலச் சீர்திருத்தம்’, ‘நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது’ என்கிற முழக்கங்கள் எல்லாம் இன்றைக்கு அர்த்தமிழந்துவருகின்றன. அநேகமாக நாடு முழுவதுமே ‘நிலச் சீர்திருத்தம்’ என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லாததாகவே ஆகிவிட்டது. மாறாக, ‘நிலக்குவியல்’ என்னும் அவலம்தான் மீண்டும் அரங்கேறிவருகிறது. என்ன நடக்கிறது?
மாறிய நிலவரம்:
- ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்கிற முழக்கம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்திருந்த முழக்கம். தெலங்கானா புரட்சி, பழங்குடிகளின் நில வெளியேற்றத்துக்கு எதிரான போராட்டங்கள், வினோபா பாவேவின் பூமிதான இயக்கம் போன்றவை எல்லாம் இதன் விளைவுகள்தான்.
- விடுதலைக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் நிலச் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில், தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் 1961 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 தர (Standard) ஏக்கர் என்று உச்சவரம்பு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஏராளமான விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருந்ததால், மிச்ச நிலங்களைப் பெரிதாக எடுக்க முடியவில்லை.
- மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் 1971, 72, 73 ஆண்டுகளில் நிலச் சீர்திருத்தத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில், 15 தர ஏக்கர் என்று உச்சவரம்பு குறைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கெனவே, 1961ஆம் ஆண்டு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த பல விதிவிலக்குகளும் ரத்துசெய்யப்பட்டன. இச்சட்டத்தின் நோக்கம், உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது, அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆனால், 2024 வரை உபரி என்று அறிவிக்கப்பட்டது 2,08,442 ஏக்கர் மட்டுமே. இதில், வழங்கப்பட்ட நிலம் 1,90,723 ஏக்கர். பயனாளிகள் எண்ணிக்கை 1,50,935 பேர். கடைசியாக நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டது 2011-12இல் 635 ஏக்கர். அதற்குப் பிறகு, நிலச் சீர்திருத்தத் துறைக்கென்று இருந்த தனி அலுவலகம், தனி அதிகாரிகள் எல்லாம் இப்போது இல்லை. ஒரே ஒரு ஆணையர், ஒரு அலுவலகம் மட்டுமே சென்னையில் உள்ளது.
அரசு இயந்திரத்தின் அலட்சியம்:
- கடந்த செப்டம்பர் மாதம் உபரி நிலம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் தலையிட நேர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம் தும்பலப்பட்டி என்கிற கிராமத்தில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் 37 குடும்பங்களுக்கு 37 ஏக்கர் உபரி நிலம் 1980ஆம் ஆண்டு நிலஒப்படைப்பு வழங்கப்பட்டுள்ளது. நிலப்பிரபு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நீண்டகாலம் நடைபெற்று, 2021ஆம் ஆண்டு உபரி நிலம்தான் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நிலஒப்படைப்பை ரத்து செய்வதாக அரசால் அறிவிக்கப்பட்டது. ஒப்படைப்பு பெற்றவர்கள் விவசாயம் செய்யவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.
- உபரி நிலமா, இல்லையா, அரசு எடுத்துக்கொண்டது சரியா என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், ஒப்படைப்பு பெற்றவர்கள் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? பிறகு, நில ஒப்படைப்பு பெற்றவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அரசின் ரத்து உத்தரவுக்குத் தடை பெற்றனர். விவசாயம் செய்ய முடியாமல் போனதற்கு வறட்சி, பாசன வசதி இல்லாதது, முதலீட்டுக்கு உரிய பணம் இல்லாதது எனப் பல காரணங்கள் இருக்கலாம்; அதனால், ஒப்படைப்பு ரத்து என்பது ஏற்கத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
- இதுபோன்ற பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற விருப்பம் அரசுக்கு இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. அரசியல் உறுதிப்பாடும், நிலம் வழங்க வேண்டும் என்கிற நோக்கமும் இருந்திருந்தால் இத்தகைய வழக்குகளை எப்போதோ முடித்திருக்க முடியும்.
- அதிகாரிகளின் அலட்சியம், அரசு வழக்கறிஞர்களின் அக்கறையின்மை, நிலத்தை உரிமை கொண்டாடுபவர்களின் செல்வாக்குக்குத் தங்களை உட்படுத்திக்கொள்வது போன்ற காரணங்களால் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
- இதே காலக்கட்டத்தில், கொடுத்த நிலத்தின் அளவைவிட அரசு பறித்த நிலத்தின் அளவு பல மடங்கு என்பதில் சந்தேகமில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ), நிலவங்கி (Land Bank), சிட்கோ, சிப்காட், தேசிய நெடுஞ்சாலைகள், பரந்தூர் பசுமை விமான நிலையம் எனப் பல்வேறு பெயர்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் அரசால் கட்டாயப்படுத்தி பறிக்கப்படுகிறது. மிகமிகக் குறைவாக நிலம் வைத்துள்ள பட்டியல் சாதியினர், பழங்குடியினரும் இதில் தப்பவில்லை.
- பட்டியல் சாதி மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் அம்மக்கள் கையில் இல்லை. அதை மீட்டு மீண்டும் பட்டியல் சாதி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்புகள், பல்வேறு அரசு ஆணைகள் இருந்தும் இதுவரை நிலம் மீட்கப்படவில்லை. பஞ்சமி நிலத்தை மீட்டு மீண்டும் ‘பஞ்சமர்கள்’ என்று ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி மக்களிடம் ஒப்படைக்க, 8.10.2015 அரசாணை நிலை எண் 357 மூலம் ஓர் உயர்நிலைக் குழு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
- அந்தக் குழு 2.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை அடையாளம் கண்டிருப்பதாகச் செய்தி வெளியானது. ஆனால், 2.5 ஏக்கர்கூட பட்டியல் சாதி மக்களுக்கு மீண்டும் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குற்றம்சாட்டி, அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவதில் காட்டும் தீவிரத்தில் ஒரு சதவீதம்கூட, பஞ்சமி நில அபகரிப்பாளர்களை வெளியேற்றுவதில் இந்த ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை. அரசு பல்வேறு காரணங்களைக் கூறி நல்ல விவசாய நிலங்களைப் பறிப்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவது மட்டுமல்லாமல், வேளாண் உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் காலம் திரும்புகிறதா?
- ‘நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் சட்டம் 2013’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதற்குமான சட்டமாகக் கருதப்படுகிறது. ஆனால், பல மாநில அரசாங்கங்கள், இந்த மத்திய சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி, நிலத்தைக் கையகப்படுத்துவது விவசாயிகளுக்கும், அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் துரோகம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894’ நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்தது. இந்தச் சட்டம் ஆட்சியாளர்களுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது என்பதனால்தான் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
- உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் ‘தொழிற் சாலைகளுக்கு நில எடுப்புச் சட்டம் 1997’ஐப் பயன்படுத்தித்தான் அனைத்துத் திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்தில் நில உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கலாமே தவிர, அதை அரசு ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், 2013ஆம் ஆண்டு சட்டத்தில் பெரும்பான்மையான நில உரிமையாளர்கள் நிலம் தர மறுப்பு தெரிவித்தால், அதை ஏற்று அரசு திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.
- கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு இச்சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. என்ன நோக்கத்துக்காக நிலம் எடுக்கப்பட்டதோ, அதற்குப் பயன்படுத்தாமல் போனால் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் மறுவாழ்வுக்கான திட்டங்கள் இதில் உண்டு. இவை எதுவும் 1997ஆம் ஆண்டு சட்டத்தில் இல்லை. விவசாயி களுக்கும் மக்களுக்கும் ஓரளவு சாதகமான சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு, ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி நிலவெளியேற்றம் செய்வது விவசாயிகள் மீது தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதல் ஆகும்.
- பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதில் ஒரு வரன்முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். பல லட்சம் ஏக்கர் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம், விவசாயத்துக்கு லாயக்கற்ற நிலம் போன்றவற்றைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம், நஞ்சை நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவதை அரசு தடை செய்ய வேண்டும்.
- வேறுவழியே இல்லை என்கிற நிலையில், நிலத்தைக் கையகப்படுத்தும்போது சந்தை மதிப்பில் கூடுதல் இழப்பீடு வழங்குவதன் மூலம் நிலத்தை இழப்பவர்களின் மறுவாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அல்லது, அத்திட்டத்தில் நிலம் இழப்பவர்களைப் பங்குதாரராகச் சேர்த்து நிரந்தரமான வருமானத்துக்கு வழிசெய்ய வேண்டும்.
- நில உரிமையாளர்களின் ஒப்புதல் என்பது கட்டாயம். மாறாக, காவல் துறையைப் பயன்படுத்தி மிரட்டுவது, பொய்வழக்கு போடுவது, வருவாய்த் துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்துவது, வலுக்கட்டாயமாக நிலத்தைக் கையகப்படுத்துவது போன்ற செயல்கள் ஏற்புடையவை அல்ல. விவசாயிகளின் ‘நில உரிமை’ மதிக்கப்பட வேண்டும். அதுவே அவர்களின் அடையாளமாகவும், ஒரே சொத்தாகவும் இருக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)