TNPSC Thervupettagam

நிலவில் கால் பதிக்கும் கனவை நிஜமாக்கியவா்

August 24 , 2023 458 days 289 0
  • சந்திரயான்-3 விண்கலத்தின் இலக்கு, சந்திரனில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வது. இதற்காக வடிவமைத்து அனுப்பப்பட்டுள்ள தரையிறங்கும் சாதனமான லூனார் லேண்டருக்கு இடப் பட்டுள்ள பெயா் ‘விக்ரம்’. விக்ரம் என்றால் வெற்றி என்று பொருள். அது மட்டுமல்ல, இந்த ‘விக்ரம்’ என்ற சாதனையின் பின்புலத்தில் மகத்தான ஒரு விஞ்ஞானியின் தீா்க்கதரிசன முயற்சிகள் ஒளிர்கின்றன. அவா்தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை (இஸ்ரோ) நிறுவிய விக்ரம் அம்பாலால் சாராபாய்.
  • இன்று உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் வல்லமையையும் நாம் பெற்றிருக்கிறோம். தவிர கண்டம் தாண்டிச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளையும் நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்கெல்லாம் மூல காரணமானவா் தான் விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாய்.
  • குஜராத்தின் ஆமதாபாத்தில், 1919, ஆக. 12-இல், செல்வாக்கான சமணக் குடும்பத்தில் பிறந்தவா் விக்ரம் சாராபாய். அவரது தாத்தா குஜராத்தில் மருந்து உற்பத்தி ஆலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை நிறுவியவா். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் குடும்பத் தொழில்களுடன் முடங்கிவிடாமல், கணிதம், இயற்பியல் பாடங்களில் ஏற்பட்ட ஆா்வத்தால், விஞ்ஞான ஆய்வுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தார் விக்ரம்.
  • லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டிரிப்போ பட்டம் பயின்று (1940) நாடு திரும்பிய விக்ரம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பிரபல விஞ்ஞானி சா்.சிவி.ராமனின் வழிகாட்டலில் அண்டக்கதிர்கள் (Cosmic Rays) தொடா்பாக ஆராய்ச்சி நடத்தினார். 1945-இல் மீண்டும் லண்டன் சென்ற விக்ரம், ஆராய்ச்சிப் படிப்பைத் தொடா்ந்தார். வெப்ப பிரதேசங்களில் அண்டக் கதிர்களின் தாக்கம் குறித்த ஆய்வுக்காக அவா் 1947-இல் டாக்டா் பட்டம் பெற்றார்.
  • பிறகு நாடு திரும்பிய விக்ரம், தனது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் 1947, நவ. 11-இல் ஆமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory -PRL) நிறுவினார். அங்கு அண்டக் கதிர்கள் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடா்ந்தார். பின்னாளில் இந்தியா விண்வெளித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த உந்துசக்தி அளித்த மையம் இதுவே.
  • விக்ரம் சாராபாய், சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, அவா் நிறுவனங்களைக் கட்டமைப்பதில் தோ்ந்தவா். நாட்டின் முக்கியமான பல ஆய்வு நிறுவனங்கள் அவரால் தான் தொடங்கப்பட்டு, வளா்த்தெடுக்கப்பட்டன.
  • குஜராத் மாநிலத்திலுள்ள ஜவுளி ஆலைகளின் பிரச்னைகளை ஆராய்ந்து தீா்க்க ஆமதாபாத் ஜவுளித் தொழிலக ஆராய்ச்சி சங்கத்தை (VASCSC) 1947-இல் நிறுவிய விக்ரம், 1966 வரை அதை வழி நடத்தினார். இன்று குஜராத் மாநிலம் ஜவுளித் துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்த அமைப்பின் பின்புலமே காரணம்.
  • விக்ரம் தொழில் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்ததால், மேலாண்மைத் துறையில் நாம் பின்தங்கி இருப்பதை உணா்ந்தார். அவரது கூட்டு முயற்சியால் ஆமதாபாத்தில் இந்திய மேலாண்மைப் பள்ளி 1961-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குநராகவும் விக்ரம் பணியாற்றினார்.
  • கணிதம், அறிவியலில் மாணவா்களின் ஆா்வத்தை வளா்க்கவும், அறிவியல் கல்வியில் புதுமைகளைப் புகுத்தவும், விக்ரமால் சமுதாய அறிவியல் மையம் 1960-இல் ஆமதாபாத்தில் துவங்கப்பட்டது. அது தற்போது விக்ரம் சாராபாய் பெயரில் (VASCSC) அறிவியல் பணிகளை ஆற்றி வருகிறது.
  • 1942-இல் கேரளத்தைச் சோ்ந்த பரத நாட்டியக் கலைஞா் மிருணாளினியை விக்ரம் திருமணம் செய்தார். இவா்கள் இருவரும் இணைந்து ஆமதாபாத்தில் நிறுவிய ‘தா்ப்பண்’ நிகழ்த்து கலை கல்வி நிறுவனம் இன்றும் கலைகளை வளா்த்து வருகிறது.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகளின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்க்க ஆணதாபாத் ஜவுளித் தொழிலக ஆராய்ச்சி சங்கம்(ஆதிரா), ஆமதாபாத்தில் இந்திய மேலாண்மைப் பள்ளி(ஐஐஎம்-ஏ), தமிழகத்தின் கல்பாக்கத்திலுள்ள அதிவேக ஈனுலை, கொல்கத்தாவிலுள்ள மாறுபடும் ஆற்றல் முடுக்கி திட்டம், ஹைதராபாத்திலுள்ள இந்திய மின்னணுவியல் நிறுவனம், ஜார்கண்ட் மாநிலம், ஜாடுகுடாவிலுள்ள யுரேனியம் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்கள் விக்ரம் சாராபாயால் நிறுவப்பட்டவை.

இஸ்ரோவின் உதயம்

  • நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, விண்வெளித் துறையில் நாடு வளர வேண்டியதன் அவசியத்தை விக்ரம் அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தினார். அவருக்கு மூத்த விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீா் பாபாவும் உறுதுணை புரிந்தார்.
  • ருஷ்யாவின் ‘ஸ்புட்னிக்’ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டதன் தொடா்ச்சியாக உலக நாடுகளில் விண்வெளித் துறை கவனம் பெற்றது.
  • ஆனால் இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு இது தேவையில்லை என்று பலா் விமா்சித்தனா். அவா்களுக்கு விக்ரம் சாராபாய் அளித்த பதில் அவரது தொலைநோக்கையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தியது:
  • “வளரும் நாடான இந்தியாவுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா? என்று சிலா் கேட்கின்றனா். அதன் பயன்பாட்டில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதாரத்தில் வளா்ந்த நாடுகள் போல புதிய நிலவுகளையும் கோள்களையும் கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கும் எண்ணம் நமக்கு இல்லை.
  • ஆனால், நாம் தேசம் என்ற அளவில் மதிப்புடன் திகழ வேண்டுமானால், உலக நாடுகளிடையே நிமிர்ந்து நிற்க வேண்டுமானால், மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வு காணும் அதிநவீனத் தொழில்நுட்பங்களில் வேறெந்த நாட்டுக்கும் சளைக்காதவா்களாக நாம் இருந்தாக வேண்டும்’’ என்றார்  விக்ரம் சாராபாய்.
  • இந்தியாவுக்கென தனித்த ராக்கெட் ஏவுதளம் வேண்டும் என்றும் விக்ரம் சாராபாய் கனவு கண்டார். அவரும் ஹோமி பாபாவும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக, அரசு அதற்கு சம்மதித்ததுடன் அதற்கான பொறுப்பை விக்ரமிடமே ஒப்படைத்தது.
  • விக்ரமின் தளாரா முயற்சியின் பலனாக, இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு 1962-நிறுவப்பட்டது.
  • அதையடுத்து, கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை (TERLS) 1963-இல் விக்ரம் அமைத்தார். நில நடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ள இந்த மையம் ராக்கெட்களை ஏவுவதற்கு மிகவும் ஏற்தாகும். இங்கு தான் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
  • 1963, நவ. 21-இல் தும்பாவில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
  • 1969-இல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (Indian Space Research Organisation-ISRO) மாற்றம் பெற்றது. அதன் வளா்ச்சிக்கும், அதில் திறம் மிகுந்த இளம் விஞ்ஞானிகள் இணையவும், அடித்தளமாக விக்ரம் செயல்பட்டார்.
  • இதனிடையே இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த ஹோமி பாபா 1966-இல் அகால மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அரசின் வேண்டுகோளை ஏற்று அதன் தலைவராகப் பொறுப்பேற்ற விக்ரம், 1971 வரை அதைத் திறம்பட வழிநடத்தினார். அப்போது அணுசக்தியை பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் நடைமுறைகளை விக்ரம் உருவாக்கினார். பல அணு உலைகள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வேண்டும் என்பது விக்ரமின் பெருங்கனவு. அவரது வழிகாட்டலில் இயங்கிய விஞ்ஞானிகள் குழு, அவரது மறைவுக்குப் பிறகு 1975-இல் முதல் இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனா்.
  • இடைவிடாத ஆய்வுப் பணிகள், புதிய விஞ்ஞானக் கட்டமைப்புகளை நிறுவுதல், இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் துடிப்புடன் இயங்கிய விக்ரம் சாராபாய், 1971, டிசம்பா் 30-இல் தனது 52-வது வயதில் காலமானார்.
  • அவருக்கு பாரத அரசு, சாந்தி ஸ்வரூப் பட்நாகா் விருது (1962), பத்மபூஷண் (1966), பத்மவிபூஷண் (1972) ஆகிய விருதுகளை அளித்து கௌரவித்தது. திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு விக்ரம் சாராபாய் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  • அண்டக்கதிர் ஆய்வில் விக்ரம் அளித்த பணிக்காக, நிலவின் அமைதிக்கடல் பகுதியிலுள்ள கருங்குழிக்கு 1973-இல் விக்ரமின் பெயா் உலக விஞ்ஞானிகளால் சூட்டப்பட்டடுள்ளது.
  • விக்ரம் சாராபாயின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரிலான லூனார் லேண்டா், ஆக. 23, 2023 அன்று மாலை 03.45 மணியளவில் நிலவில் தரையிறங்கி சரித்திரம் படைக்க இருக்கிறது. “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!”என்று பாடிய தமிழகத்தின் மகாகவி பாரதி கண்ட கனவை நனவாக்கும் நமது விஞ்ஞானிகளுக்கு ஒரு வீர வணக்கம் சொல்வோமே!

நன்றி: தினமணி (24  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்