TNPSC Thervupettagam

நிலவில் புகழ் பொறித்த இந்திய விஞ்ஞானி

August 12 , 2019 1932 days 1081 0
  • இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று புகழப்படுபவர் டாக்டர் விக்ரம் ஏ. சாராபாய். குஜராத் மாநிலத்தில் ஜைன குடும்பத்தில் 1919 ஆகஸ்ட் 12 அன்று பிறந்தவர்.  
  • தந்தை அம்பாலால் சாராபாய் ஆமதாபாதில் சிறந்த தொழிலதிபர். தாயார் சரளா தேவி.  சிறுவயதில் விக்ரம் சாராபாய், "ரீட்ரீட்' என்னும் தங்கள் இல்லத்திலேயே கல்வி பயின்றார். இந்தக் கல்விக் கூடத்தின் வழி இந்தியாவில் "மாண்டிசோரி' எனும் புதிய கல்விமுறை அறிமுகம் ஆனது. தனியார் பயிற்சி வகுப்புகள் நடத்த இல்லத்திற்கே வருவார்கள். அம்பாலால் சாராபாய் இல்லக் குழந்தைகள் 8 பேருக்காக 13 ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து பயிற்றுவித்தனர். 
இளம் வயது
  • கடினமான கல்விக் கொள்கை ஏதும் இல்லை. மைதானங்களில் சைக்கிள் ஓட்டுதல், தோட்டக் குளத்தில் படகு சவாரி போன்ற இயல்பான பொழுதுபோக்குகளுடன் கூடிய எளிய கல்விமுறை.  விளையாட்டு பொம்மைகளும், அறிவார்ந்த குழந்தைப் பாடல்களும், உலக விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளும்தாம் பாடங்கள். அந்த மாநிலக் கல்வி பயின்று விஞ்ஞானி ஆன மகான் விக்ரம் சாராபாய். 
  • விக்ரம் சாராபாயின் உடல் வாகு, தலை அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பின்னாளில் அவர் உன்னதப் புகழ் பெறுவார் என்று பெற்றோரிடம் நோபல் இலக்கியவாதி ரவீந்திரநாத் தாகூர் ஒரு முறை கூறினாராம். 1-11-1935 நாளிட்ட தாகூரின் பரிந்துரைக் கடிதத்துடன் 1937-ஆம் ஆண்டு லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புனித யோவான் கல்லூரியில் சேர்ந்தார். இயற்பியலும், கணிதமும் பயின்று, 1940-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டதாரி ஆனார். 
  • இரண்டாம் உலகப் போரின்போது இந்தியா திரும்பி, பெங்களூரில் இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) சேர்ந்தார். அங்கு 1940 முதல் 1945 வரை நோபல் விஞ்ஞானி சர் சி.வி.ராமனின் மாணவர் சாராபாய். அறிவியல் கழக இதழில் இவர் எழுதிய 'அண்டக்கதிர்களின் காலாந்தரப் பதிவுகள்' (1942) என்ற ஆய்வுக் கட்டுரையே இவரை விஞ்ஞானியாக உலகுக்குப் பறைசாற்றியது. 
  • 1942-ஆம் ஆண்டு நடனக் கலைஞர் மிருணாளினியைத் திருமணம் செய்தார் சாராபாய். அறிவியலும், கலையும் இணைந்ததோர் இல்லறத்தில், மகளாக நாட்டிய மங்கை மல்லிகா, மகனாக விஞ்ஞானி கார்த்திகேய சாராபாய் தோன்றினர். இங்கிலாந்தில் கேவண்டிஷ் பரிசோதனைச் சாலையில் ஆய்வுகள் நடத்தி, 1947-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 
ஆராய்ச்சிக் கூடம்
  • சுதந்திர இந்தியாவில் 1947 நவம்பர் 11 அன்று ஆமதாபாத் மகாத்மா காந்தி அறிவியல் நிறுவனத்தில் "கர்மúக்ஷத்திரா கல்வி அறக்கட்டளை' மற்றும் "ஆமதாபாத் கல்விக் கழகம்' ஆகியவற்றுடன் இணைந்து "இயற்பியல் ஆராய்ச்சிக்கூடம்' என்ற சர்ச்சைக்கு இடம் இல்லாத அறிவியல் கோயிலைக் கட்டி எழுப்பினார். பேராசிரியர் கல்பாத்தி ராமகிருஷ்ணன் ராமநாதன் (கே.ஆர்.ராமநாதன்) அதன் முதல் இயக்குநர். 
    "காஸ்மிக் அண்டக்கதிர்' ஆராய்ச்சியில் ஈடுபட்டார் சாராபாய். அணுசக்திக் கழகத்தின் மானியத்துடன் கோட்பாட்டு இயற்பியல், வானலை இயற்பியல் போன்ற பிற துறை ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டன.
  • 1951-ஆம் ஆண்டிலேயே குஜராத் எல்லையை ஒட்டி ராஜஸ்தானில் அபு மலையில் அண்டக்கதிர் ஆய்வுக்கூடம் நிறுவினார். முதன்முதலாக ஓசோன் படல ஆய்வு இங்கிருந்துதான் மேற்கொள்ளப்பட்டது.
    பரோடாவில் ("வதோதரா') "சாராபாய் கெமிக்கல்ஸ்' எனும் வேதிமத் தொழிற்சாலை, சாராபாய் ஆய்வு மையம், சாராபாய் பொறியியல் குழுமம், சாராபாய் கண்ணாடித் தொழிற்சாலை, கொல்கத்தாவில் "ஸ்டாண்டர்டு ஃபார்மசூட்டிக்கல்ஸ்' (மருந்தகத் தொழிற்சாலை) போன்றவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 
  • இன்று "சி.எஸ்.ஐ.ஆர்.' என்று அறியப்படும் அறிவியல், தொழில் துறை ஆய்வுக் குழுமத்தின் பேராசிரியர் எஸ்.எஸ்.பட்நாகர் மற்றும் இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் டாக்டர் ஹோமி ஜே.பாபா ஆகியோர் ஒத்துழைப்புடன் 1952-ஆம் ஆண்டு ஆமதாபாத் ஆய்வுக் கூடத்தின் சொந்தக் கட்டடத்துக்கு சர் சி.வி.ராமன் அடிக்கல் நாட்டினார்.
  • 1954-ஆம் ஆண்டு பண்டித ஜவாஹர்லால் நேரு அதைத் திறந்துவைத்தார்.
    ஆமதாபாத் நகரில் "ஆபரேஷன் ரிசர்ச் குரூப்' என்ற பெயரில் இந்தியாவிலேயே முதன்முறையாக சந்தை நிலவர ஆராய்ச்சிக் குழுமத்தினைத் தோற்றுவித்தார்.
  • "வளர்ச்சிக்கான நேரு அறக்கட்டளை', இந்திய மேலாண்மை நிறுவனம், "ஆதிரா' என்று அழைக்கப்படும் "ஆமதாபாத் ஜவுளித் தொழில் துறை ஆய்வுக் கழகம்', சூழலியல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம், பார்வையற்றோர் நலக் கழகம் போன்றவற்றின் உருவாக்கத்தில் முழுமையாகப் பங்களித்தவர்.
தர்ப்பணா நிகழ்கலைகள் கல்வியகம்
  • தம் மனைவியுடன் இணைந்து 'தர்ப்பணா நிகழ்கலைகள் கல்வியகம்' ஒன்றையும் நிறுவினார்.  திருவனந்தபுரத்தில் விண்வெளி ஆராய்ச்சி, கொல்கத்தாவில் "மாறுபடும் ஆற்றல் சைக்ளோட்ரான் திட்டம்', ஹைதராபாதில் "இந்திய மின்னணுவியல் கழகம்', ஜார்க்கண்டில் "இந்திய யுரேனியம் கழகம்' என உண்மையான தேசியச் சிந்தனையுடன் அறிவியலுக்குப் பாடுபட்ட உன்னத மனிதர் விக்ரம் சாராபாய். 
    புணே வானாய்வுக் கூடத்தின் கே.ஆர்.ராமநாதன் ஆலோசனைப்படி, 1955-ஆம் ஆண்டு காஷ்மீரில் குல்மர்க்கில் முதன்முதலாக நவீன ஆராய்ச்சி நிலையம் தோற்றுவிக்கப்பட்டது. பெரும்பாலோர் ஆன்மிகப் பயணம் செல்லும் இமய மலையில் அறிவியல் பாத யாத்திரை மேற்கொண்டார் சாராபாய். 
  • அணு ஆற்றலின் அமைதிப் பயன்பாடுகள் குறித்த நான்காவது ஐக்கிய நாடுகள் மாநாட்டின் துணைத் தலைவராகவும் செயல்பட்டவர். இந்திய அணுசக்தித் துறையின் தலைவரான பேராசிரியர் ஹோமி ஜே. பாபாவின் உதவியுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் முனைப்பான ஊக்கத்தினால் பேராசிரியர் விக்ரம் ஏ. சாராபாய் தலைமையில் 1962-ஆம் ஆண்டு "இன்கோஸ்பார்' எனும் "இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுமம்' உருவானது. 
தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம்
  • புவிகாந்த நடுக்கோட்டுப் பகுதியில், திருவனந்தபுரம் அருகில் தும்பா கடற்கரை கிராமம், வானிலை ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம். முன்னேறிய நாடுகளின் துணையுடன் அங்கு "டெர்ல்ஸ்' எனச் சுருக்கி அழைக்கப்படும் "தும்பா நிலநடுக்கோட்டு ராக்கெட் ஏவுதளம்' உதயமானது. அந்தப் பகுதியில் இருந்த மரியா மக்தலேனா தேவாலயமும், பிஷப் பெரெய்ரா வாழ்ந்த ஓட்டு வீடும் இன்று வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிட்டன. அவை இந்திய விண்வெளி அருங்காட்சியகம், மக்கள் தொடர்பு அலுவலகம் எனப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
    அறிவியல்பூர்வ மத நல்லிணக்கத்தை விரும்பியவர் டாக்டர் சாராபாய். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஆராவமுதன், இரா.மா.வாசகம், ஏ.இ.முத்துநாயகம், ஏ.வி. சிட்னிஸ், எம்.ஆர்.குருப், வி.ஆர்.கோவாரிக்கர் போன்ற தனிச் சிறப்பு மிக்கப் பலரையும் தம்முடன் இணைத்துக்கொண்டார். அதனால்தான் இந்திய விண்வெளித் துறை இன்றைக்கும் ஜாதி, மத, மொழி, இன பேதம் இன்றி அனைவருக்கும் தேவையான தகவல்களை வழங்கி வான்வெளியில் உயர்ந்து பறக்கிறது. 
  • 1963 நவம்பர் 21 அன்று இந்த ஏவுதளத்தில் இருந்து அமெரிக்க நாட்டின் 'நைக்கி அப்பாச்சி' என்கிற வானிலை ஆய்வூர்தி செலுத்தப்பட்டது. இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட முதலாவது ஏவூர்தி இது. 
  • அரை நூற்றாண்டுக்கு முன், தும்பா நிலையத்தில் உந்து எரிபொருள் துறையால் "மிருணாள்' என்ற எரிபொருள் தயாரிக்கப்பட்டது. அந்த நைட்ரோ-கிளிசரின் எரிபொருளால் இயங்கும் "ரோகிணி -75 ஆய்வூர்தி' 1969 பிப்ரவரி 21 அன்று ஏவப்பெற்றது. உள்நாட்டு பாலிவினைல் குளோரைடு எரிபொருள் நிறைத்த ஆய்வூர்தி, 1969 மார்ச் 2 அன்று "நிலைப் பரிசோதனை' செய்யப்பட்டது. 1969 டிசம்பர் 7 அன்று வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்டது. 
  • டாக்டர் சாராபாய் பிறந்த பொன்விழா ஆண்டில் 1969 ஆகஸ்ட் 15 அன்று இந்திய அணுசக்தித் துறையின் கீழ் "இஸ்ரோ' என்ற "இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்' உருவானது. திருவனந்தபுரத்தில் இவர் உருவாக்கிய "விக்ரம் சாராபாய் விண்வெளி  ஆய்வு மையம்' இன்று அனைத்துலக நாடுகளில் முன்னணி வரிசையில் நிற்கிறது. 
விருதுகள்
  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1962), பத்ம பூஷண் (1966) போன்ற விருதுகள் பெற்றவர் சாராபாய். 1971 டிசம்பர் 30 அன்று மறைவுக்குப் பிறகு, பத்ம விபூஷண் (1972) விருது வழங்கப்பட்டது. இவரது முதலாவது ஆண்டு நினைவஞ்சலியாக, இந்திய அஞ்சல் தலை 1972-இல் வெளியிடப்பட்டது. 
  • 1973-ஆம் ஆண்டு நிலவில் "அமைதிக்கடல்' பிரதேசத்தில் பெஸ்ஸல் என்னும் பெருங்குழிக்கு  "சாராபாய் பள்ளம்' என்று பன்னாட்டு வானவியல் ஒன்றியம் பெயர் சூட்டி கௌரவித்தது.
  • இன்று சந்திரயான்-1 திட்டத்தில் அவரது தலைமைச் சீடர் டாக்டர் அப்துல் கலாம் ஆலோசனையின் பேரில் நம் தேசியக் கொடி பதித்த "மிப்' என்ற நிலா மோதுகலன் சந்திரனில் சென்று விழுந்தது. ஒரே நாடு, ஒரே கொடிதான். ஆனால், அதில் வர்ணங்கள் மூன்று அல்லவா? 
  • சந்திரயான்-2 திட்டத்தின்கீழ் "விக்ரம்' எனும் கலன் சந்திரனில் மெல்லத் தரை இறங்குகிறது என்றால், நிலவின் முதல் இந்தியர் விக்ரம் சாராபாய் அல்லவா?
நன்றி: தினமணி(12-08-2019)  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்