TNPSC Thervupettagam

நிலுவை மசோதாக்கள்: மாறட்டும் அணுகுமுறை

May 2 , 2023 620 days 447 0
  • மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களின் மீது விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
  • பாஜக ஆட்சியில் இல்லாத சில மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக அந்த மாநிலத்தை ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை அண்மையில் முடித்துவைத்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா அமர்வு, ஆளுநர்களுக்கு அரசமைப்புச் சட்டக்கூறு 200ஐ மேற்கோள் காட்டிச் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளது.
  • மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தாலும், அரசுக்குத் திருப்பி அனுப்புவதாக இருந்தாலும் அதை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையை இது வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கில் மசோதாமீது முடிவெடுக்கக் காலக்கெடு விதிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு கோரிக்கைவிடுத்திருந்தது.
  • ஆனால், அப்படி எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அதேநேரம், ‘கூடிய விரைவில்’ என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதன் மூலம், மசோதாக்கள் விஷயத்தில் ஆளுநர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதை உள்வாங்கி ஆளுநர்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
  • மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியே மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் மாநில அரசுகள்-ஆளுநர்கள் இடையே எழுவதில்லை. ஆனால், பிற மாநிலங்களில், மசோதாக்கள் காரணமின்றி நிலுவையில் வைக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆளுநர்-மாநில அரசு இடையேயான மோதல்போக்கின் வெளிப்பாடாகவே இத்தகைய நிகழ்வுகளைக் கருத வேண்டியிருக்கிறது. இது அரசியல்ரீதியிலான மோதலாகவும் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  • ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவியாக இருந்தாலும், அரசமைப்புப் பதவி. மாநில அரசின் நிர்வாகத் தலைவர் ஆளுநர்தான். எனவே, அந்தப் பதவிக்குரிய மரியாதையை மாநில அரசு நிச்சயம் வழங்க வேண்டும். ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்பட அனுமதிக்கக் கூடாது.
  • அதேபோல மாநில அரசும் மத்திய அரசைப் போல மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுதான். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டங்களை இயற்றுவதைப் போலத் தங்களுடைய அதிகாரங்களுக்கு உட்பட்டு சட்டமன்றங்களில் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கும் உரிமை உண்டு. அப்படி நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களில் ஆளுநர்கள் முடிவெடுக்காமல் தள்ளிப்போடுவது மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரானது. இதுபோன்ற தருணங்களில் நீதிமன்றத்தின் தலையீடு நிச்சயம் தேவை.
  • ஆளுநரோ, மாநில அரசோ இரு தரப்பின் செயல்பாடுகளும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் அரசியல் கருத்துவேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இருக்கக் கூடாது. அதை உணர்ந்து செயல்படுவதே மாநிலத்துக்கு நன்மை பயக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்