- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநருக்கு எதிராகத் திமுக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுபோன்ற விவகாரங்களை உச்ச நீதிமன்றம் தீர்வை நோக்கி நகர்த்தும் என்கிற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என்றும் மசோதாக்கள், அரசாணைகள், கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
- ‘மசோதாக்களுக்கு அனுமதி வழங்க ஆளுநர்கள் காலதாமதம் செய்வது கவலைக்குரியது’ என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 10 அன்று கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் ‘நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன’ (Withheld) என்று குறிப்பிட்டு, நவம்பர் 13 அன்று அவற்றை அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளது.
- இதன் பிறகு, மசோதாக்கள் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘மசோதாக்கள் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என ஆளுநர் கூற முடியுமா?’, ‘உச்ச நீதிமன்றத்தை அரசுகள் அணுகும் வரை ஆளுநர்கள் மசோதாக்களை ஏன் கிடப்பில் போடுகிறார்கள்?’ என்பன போன்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. நிலுவை மசோதாக்கள் தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு சமர்ப்பித்துள்ளது. திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைக்குக் காத்திருப்பதாகக் கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- பொதுவாக, சட்ட மசோதாக்களுக்கு அரசின் நிர்வாகத் தலைவர் என்கிற வகையில் ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் பணிதான். மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது கூறு. ஆனால், இரண்டாவது முறையாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதலைக் கட்டாயமாக்கும் விதிமுறை, ‘நிராகரிக்கப்படும்’ மசோதாக்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- ஆனால், ‘நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்கிற குறிப்புகளோடு அனுப்பும் மசோதாக்களுக்குப் பொருந்தாது என்று சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். இந்தச் சூழலில், மசோதாக்கள் மீது ஆளுநர் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. நிலுவை மசோதாக்கள் விஷயத்தில் உறுதியான தீர்வை எட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆளுநர்-மாநில அரசு இடையேயான மோதலின் விளைவால் இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் உருவாகின்றன. இந்நிலையில், மசோதாக்கள் தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை ஆளுநர்களுக்கும் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கும் என நம்புவோம்.
- அந்த வழிகாட்டுதல்களால் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுக்கும் அளவுக்கு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்படுவது தடுத்து நிறுத்தப்படும் வாய்ப்பும் ஏற்படும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு மாறாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே ஆளுநர்களுக்கும் அரசுக்கும் மோதல் ஏற்படுகிறது என்னும் விமர்சனமும் களையப்பட வேண்டியதும் அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 - 11 – 2023)