TNPSC Thervupettagam

நீங்கள் லைக் போடும் கருத்து யாருடையது

April 20 , 2023 585 days 336 0
  • சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பெரும்பாலான கருத்துகள் செயற்கையான முறையில் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதற்குத் தற்போது போதுமான ஆதாரங்கள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது, ட்விட்டரில் நடைபெற்ற உரையாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உரையாடல்களை நெறிப்படுத்திய தனிப்பட்ட சில குழுக்கள் ஜம்மு - காஷ்மீர் குறித்த ஒன்றிய அரசின் முடிவை ஆதரிக்கும் கருத்துகளை முதன்மையாக, சாமர்த்தியமாக முன்னெடுத்து இருப்பது தெரியவருகிறது.
  • சட்டப்பிரிவு 370 தொடர்பில் நேரடியாக எழுதப்பட்ட ட்விட்டர் பதிவுகளை மட்டும் தரவாக எடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு பதிவும் எத்தனை முறை மீண்டும் பகிரப்பட்டன, எவ்வளவு பேர் அந்தப் பதிவை விரும்பி இருக்கிறார்கள், அப்பதிவைப் பகிரும்போது தங்களின் கருத்துகளோடு யார் ட்வீட் செய்கிறார்கள் (quote tweets), மற்றும் ட்விட்டர் பதிவு பகிரப்பட்ட நேரம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பதிவாளரும், எவ்வளவு பதிவிட்டிருக்கிறார்கள், எது குறித்துப் பதிவிட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சிக்கான தரவுகளாகச் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்ட நேரத்தில், அன்றைய ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான நாட்களுக்கு இணையச் சேவை முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மையம் கொள்ளும் ஹேஸ்டேக்

  • வழக்கமாக, ஒரு குறிப்பிட்ட தலைப்பு ட்விட்டரில் ஹேஷ்டேக் வழியாகப் பேசுபொருளாகிறது என்றால், அந்தத் தலைப்பு குறித்த ஒரு யதார்த்தமான ஆர்வம் மக்களிடையே எழுகிறது என்று வைத்துக் கொள்ளலாம் - புகழ்பெற்ற மனிதர்கள் அந்தத் தலைப்புக் குறித்துப் பேசும்போதோ அல்லது ட்விட்டர் பயனாளர்கள் அதுகுறித்து ஒன்றாக விவாதிக்கும்போதோ அந்தத் தலைப்புப் பேசுபொருளாகிறது (டிரெண்டிங்). இத்தகைய யதார்த்தமாகப் பேசுபொருளாகும் நிகழ்வை, நிறைய நேரங்களில் செயற்கையாகவும் தோற்றுவிக்க முடியும். இந்த உத்தியைக் குறிப்பாக அரசியல் கட்சிகள் கையாள்கின்றன. தொழில்நுட்பத்தின் உதவியோடு தயாரிக்கப்படும் ‘பாட்’களின் (bot) உதவியைக் கொண்டோ அல்லது தீவிரமாக இயங்கும் பயனாளர்கள் ஒன்றுகூடியோ, ட்விட்டரின் குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைக்கலாம்.
  • இந்த நிகழ்வை விரிவாக விளக்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட ‘பகுதி / பிரிவானது’ இத்தகைய முன்னெடுப்பை நிகழ்த்துகிறது. இவை இணைய வெளியில் ஒரு குறிப்பிட்ட தலைப்பைக் ஆரம்பித்து வைத்து, அதைப் பரவலாகப் பரப்பி, அதற்கு ஏதுவான கருத்துகளோடு இந்த இணையத்தைக் கைப்பற்றும் உத்தி அங்குக் கட்டமைக்கப்படுகிறது. ஒரு சராசரியான இணையப் பயனாளருக்கு, வெளிப்படையாக இந்த உத்தி தெரியாமல் போகிறது; அவருக்கு, இணையத்தில் தொடர்ந்து பேசப்படும், முதலிடத்தில் இருக்கும் தலைப்புகள் எளிதாகப் புலப்படும் வகையிலும், மற்றவருடன் இணைந்து உரையாடும் வகையிலும் இருப்பது மட்டுமே தெரிகிறது.
  • துரதிர்ஷ்டவசமாக, ஓர் இணையப் பயனாளருக்கு, தான் ஈடுபாடு கொள்ளும் தலைப்பானது, உண்மையாகவே பெரும்பாலான மக்களின் கருத்தா அல்லது செயற்கையாக இணையத்தில் உற்பத்தி செய்யப்பட்டக் கருத்தாக்கமா என்று தெரிய வாய்ப்புகள் இல்லை. ஒரு பயனாளருக்கு ஒரே தலைப்பைச் சார்ந்து இருக்கும் பல்வேறு செய்தித் தொகுப்புகள் தங்களுடைய திரையில் இருப்பது மட்டுமே தெரியும். எனவே, இணையப் பேசுபொருள்களும், கருத்துகளும் ஒருபோதும் ஜனநாயகப்படுத்தப்பட்ட கருத்துகள் மட்டுமே அல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
  • காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த செய்திகளை எடுத்துக்கொண்டால், 2019 ஆகஸ்ட் 1 முதல் 2019 நவம்பர் 30 வரை, 112 ஹேஷ்டேக்குகள் காஷ்மீர் குறித்தனவாக ட்விட்டரில் இருந்தன. அந்த நான்கு மாதங்களில், மேற்குறிப்பிடப்பட்ட தலைப்புகள் ஒவ்வொரு நாளும், ட்விட்டர் டிரெண்டிங் அட்டவணையில் முதல் ஐந்து இடத்தில் ஏதேனும் ஓரிடத்தை ஒரு முறையேனும் பிடித்தன. மேலும், 112 ஹேஷ்டேக்குகளில், 65 ஹேஷ்டேக்குகள் அரசின் முடிவை ஆதரித்தும், பாகிஸ்தான் குறித்த விமர்சனங்களையும், காங்கிரஸ் கட்சி மற்றும் இந்த முடிவை எதிர்த்தவர்கள் குறித்த விமர்சனங்களையும் தாங்கியே இருந்தன. வெகு சில ஹேஷ்டேக்குகளே நடுநிலைத்தன்மையோடு இருந்தன.

இது டிரெண்டிங் காலம்!

  • இதில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தின் முதல் 15 நாட்களில், 48 ஹேஷ்டேக்குகளில் 31 ஹேஷ்டேக்குகள், அந்தஸ்து நீக்கத்துக்கு ஆதரவான சார்பையே கொண்டிருந்தன. மொத்த ட்விட்டுகளில் 40.5% பதிவுகள் இந்த 31 ஹேஷ்டேக்குகளைக் கொண்டே பதிவேற்றப்பட்டன. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றுமுதல் ஐந்தாம் தேதிவரை, 26 ஹேஷ்டேக்குகளில் 16 ஹேஷ்டேக்குகள் அரசின் முடிவுக்கு ஆதரவாகவும், நான்கு முடிவுகள் எதிராகவும் இருந்தன. அந்தஸ்து நீக்கம் செய்யப்பட நாளில், 18 ஹேஷ்டேக்குகளில் 12 ஹேஷ்டேக்குகள் ஆதரவாகவும், ஒரே ஒரு ஹேஷ்டேக் மட்டும் எதிராகவும் இருப்பதைக் காண முடிந்தது.
  • அதே நாளில் (5 ஆகஸ்ட் 2019), டிரெண்டிங் பட்டியலில், தகுதி நீக்கத்துக்கு ஆதரவான ஏதேனும் ஒரு ஹேஷ்டேக் முதல் ஐந்து இடங்களில் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டே இருந்தது. நடுநிலையான ஒரே ஒரு ஹேஷ்டேக் (#Article370), வெறும் 6 மணி நேரத்துக்கு டிரெண்டிங் அட்டவணையில் இடம்பெற்றிருந்தது.
  • ஆகஸ்ட் 5 முதல் 7 வரை 87,000 பயனாளர்கள், அந்த முடிவுக்கு ஆதரவான 12 ஹேஷ்டேக்குகளில் 187.4 ஆயிரம் ட்வீட்களைப் பதிவேற்றியிருந்தனர். சராசரியாக ஒரு பயனாளர் இரண்டு ட்வீட்களைப் பதிவுசெய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். ஒரு யதார்த்தமான பொதுத் தளமாக இது வெளியே இருந்து தோன்றினாலும், தரவுகளைக் கருத்தில் கொள்ளும்போது வேறு ஒரு நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
  • மேற்குறிப்பிடப்பட்ட ட்வீட் பதிவுகளில், 25% (கிட்டத்தட்ட 46.8 ஆயிரம் பதிவுகள்) வெறும் 3,134 பயனாளர்களிடமிருந்தே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களையே நாம் தனித்த குழு என்று கருதுகிறோம் - இணைய வெளியில் தங்களுக்குச் சாதகமான செய்திகளை உருவாக்கி, அதனை இணைய வெளி முழுவதும் பரப்பி, அதனைப் பரவலாக நிரப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

இணையவழிப் பிரச்சாரங்கள்

  • ட்வீட் பதிவுகள் மீண்டும் பகிரப்படுவது (retweet) நமக்கு வேறு ஒரு செய்தியையும் உணர்த்துகிறது. மொத்த 649.4 ஆயிரம் பங்குபெறும் பயனாளர்களில், 236.4 ஆயிரம் பயனாளர்கள், மேற்சொன்ன செய்திக்கு ஒப்பான பதிவுகளையே மீண்டும் பகிர்ந்திருக்கிறார்கள்; அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட 3,134 பயனாளர்களை உள்ளடக்கிய தனித்த குழு பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளையே பயன்படுத்தியும் இருக்கிறார்கள்.
  • இந்த 3,134 பயனாளர்கள், மொத்த விருப்பக்குறிகளில் 35.9%ஐ பெற்றிருக்கிறார்கள். மேலும், மொத்த மறுமொழிகளில் 41.7% இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன (இது, இரண்டு பயனாளர்களுக்கு இடையேயான நேரடியான உரையாடலின் நிகர் மதிப்பாக எடுத்துக்கொள்ளலாம்). ‘#ஆப்பரேஷன்காஷ்மீர்’ (#OperationKashmir) எனும் ஹேஷ்டேக், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டது.
  • இந்த ஹேஷ்டேக்கைப் பகிர்ந்த பயனாளர்களில் 55.1% பேர், 2019 ஆகஸ்டு 5 அன்று அந்தஸ்து நீக்கத்துக்கு ஆதரவான இணையவழி பிரச்சாரங்களில் தம்மை இணைத்துக்கொண்டனர். எனவே, இந்தத் தனித்த குழுவின் பயனாளர்கள் அனைவரும் இணைந்து, ஒரு குறிப்பிட்ட பேசுபொருள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுவதை உறுதிசெய்கிறார்கள் என்பதை உறுதிசெய்யலாம். இந்தப் பயனாளர்கள் அனைவரும் ‘தொழில் முறை’யாக இந்தப் பேசுபொருள்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதனை முடிவுசெய்யும் நோக்கில், மொத்தமாக ட்வீட் பதிவுகளைப் பதிவேற்றுகிறார்கள் என்பதனையும் அறிந்துகொள்ளலாம்.

ஆக்கப்பூர்வம் ஆகுமா தகவல்தொடர்பு?

  • ஆக்கப்பூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கான கருவிகளாகச் சமூக வலைத்தளங்களின் பங்கானது சற்றுச் சிக்கலானதாக இருக்கின்றது. ஆயினும், காஷ்மீர் போன்ற தலைப்புகளில், தரவுகள் யாவுமே சர்ச்சைகள் சூழ்ந்தே இருக்கின்றன என்பதால் ஒட்டுமொத்த விவாதத்தையும் நிலைகுலைய வைக்க முடியும். மேலும், உணர்ச்சிகரமான அரசியல்ரீதியான தகவல் பரிமாற்றங்களுக்கு நடுவில், மக்களின் மனதில் இதுதான் கள நிலவரம் என்கிற பொதுவான பார்வையும், உணர்வும் சென்று சேர்வதைத் திட்டமிட்டு இயங்கும் குழுக்கள் பரப்பும் கருத்துக்களின் மூலம் காலி செய்ய முடியும்.
  • ஒரு தனித்த குழுவின் கருத்துக்கள் மைய நீரோட்டத்தில் முதன்மையான இடம்பெறும்போது, களத்தில் இருக்கும் மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களுக்கு அங்கு இடம் கிடைக்காமல் நசுக்கப்படுகின்றன. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இணையத்தைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்ட அந்தச் செயற்கையான கருத்தாக்கத்திடமே, மக்களின் யதார்த்த வாழ்வைக் கையாளும் சக்தி இருக்கிறது - அது தற்போது, மக்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை உரிமையைக்கூட அவர்களிடமிருந்து பறித்திருக்கிறது.
  • வேகமாக வளர்ந்துவரும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் தீவிர செயல்திறனின் காரணமாக, செயற்கையாக உருவாக்கப்படும் கருத்தாக்கங்கள் அதிகரித்துவருகின்றன. இவை சமகாலத்தில் இயங்கும் பலதரப்பட்ட தரப்பைத் திருப்திப்படுத்தும் வகையில் தரவுகளைத் திரிப்பதோடு மட்டுமல்லாமல், மாறிவரும் சமூகத்தின் உணர்வெழுச்சிகளுக்கும் ஏற்றவாறு தன்னை உருமாற்றிக்கொள்கிறது.
  • இப்படித் தரவுகளை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டால், அதன் உண்மைத்தன்மையை அறிவைக் கொண்டோ, அடிப்படைக் காரணங்களைக் கொண்டோ நிறுவ இயலாது. பெருமளவில் சூழும் கருத்துகளுக்கு நடுவே, நாம் தரவுகளின் அடிப்படையிலான உண்மை எது என்பதை அறிய பகுத்தறிவு, அடிப்படையான ஆதாரங்கள் ஆகியவற்றில் அக்கறை காட்ட வேண்டியது இன்றியமையாதது ஆகிறது.

நன்றி: அருஞ்சொல் (20 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்