TNPSC Thervupettagam

நீட் தேர்வு முடிவுகள்: வினாக்களுக்கு என்ன விடை?

June 13 , 2024 212 days 174 0
  • மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும் - முன்கூட்டியே - வெளியாகியிருக்கின்றன. இந்தத் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, நடைமுறைச் சாத்தியம் இல்லாத வகையில் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது எனப் பல அம்சங்கள் நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
  • ஹரியாணாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு பேர் முழு மதிப்பெண்கள் (720) பெற்றுள்ளனர். இதே மையத்தில் தேர்வு எழுதிய இருவர், முறையே 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வைப் பொறுத்தவரை, ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் இத்தகைய மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமே இல்லாதது. ஒரு தவறான பதிலுக்கான பாதக (negative) மதிப்பெண் ஒன்று என்கிற அடிப்படையில் பார்த்தாலும் 715தான் பெற முடியும். மருத்துவக் கனவில் இருக்கும் மாணவர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
  • சர்ச்சைகள் வெடித்த நிலையில், மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தைக் கணக்கில் கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால்தான் இம்மாதிரியான மதிப்பெண்கள் வந்ததாக, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை விளக்கம் அளித்திருக்கிறது. ஆறு மையங்களில் தேர்வு எழுதிய 1,500 பேர் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை மாணவர்களுக்கு எவ்வளவு மணித் துளிகள் தாமதத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் கருணையாக அளிக்கப்பட்டன என்று தேசியத் தேர்வு முகமை தெளிவாக எதையும் சொல்லவில்லை. எனவேதான், அந்த அமைப்பின் வாதம் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
  • கடந்த ஆண்டு தேர்வில் 555 மதிப்பெண் பெற்ற மாணவரின் தரவரிசை தோராயமாக 60 ஆயிரம் என்றால், இந்த ஆண்டு அது ஒரு லட்சத்தைத் தாண்டும் வகையில் இந்தத் தேர்வு முடிவுகள் இருக்கின்றன. நியாயமான முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது இதன் வழி நிரூபணமாகிறது. வினாத்தாள்கள் முன்கூட்டியே விற்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
  • வேறு சில பிரச்சினைகளும் கவலையளிக்கின்றன. உண்மையில் ஜூன் 14 அன்றுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றே நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
  • இந்தியாவில் நடத்தப்படும் மிக முக்கியமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்று. ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். இந்த ஆண்டு 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். இதற்காக ஊண் உறக்கமில்லாமல் தயாராகும் மாணவர்கள் ஏராளம். நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள் எந்த விதமான நகை அணிவதற்கும் அனுமதி இல்லை. ஆனால், தேர்வை நடத்துபவர்கள் அஜாக்கிரதையுடன் நடந்துகொள்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுவாக எழுகிறது. தன்னாட்சிமிக்க இந்த அமைப்பு தன் செயல்பாடுகளைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியதும், வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதும் மிக அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்