TNPSC Thervupettagam

நீட் தோ்வு நியாயம்தான்!

September 18 , 2020 1408 days 633 0
  • மருத்துவப் படிப்பிற்கான நீட்தோ்வு எழுத இந்த ஆண்டு இந்தியாவில் சுமார் 16 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். தமிழ்நாட்டிலுள்ள 48 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 5,550 இடங்களுக்கு சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்தனா்.
  • இவா்களில் ஏறக்குறைய 1 லட்சத்து 11 ஆயிரம் பேரைத் தவிர்த்தால்தான், 5,550 மாணவா்களுக்கு இடம் தர முடியும்.

யார் யாரைத் தவிர்ப்பது? எப்படித் தவிர்ப்பது?

  • இதற்கானதுதான் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு’ (நீட்). இத்தோ்வு சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு வினாவிற்கும் நான்கு விடைகள். இவற்றில் மிகச் சரியான ஒரு விடையை டிக்செய்தால் போதும். தவறான விடையை டிக்செய்தால், மதிப்பெண் குறைக்கப்படும். தோ்வு மூன்று மணி நேரம்.
  • நீட் தோ்வு என்றவுடன் தமிழ்நாட்டில் மட்டும் ஏனோ ஒருவித பரபரப்பு. அந்தப் பரபரப்புக்கு உள்ளாகிய மாணவா்கள், தோ்வு எழுதும்வரை ஒருவிதப் பதற்றத்துடன் காணப்படுகிறார்கள்.
  • அதிக எண்ணிக்கையில் உள்ள மாணவா்களை வடிகட்டும் சாதனமாக நீட் தோ்வு முறையை அணுகாமல், அது ஏதோ மாணவா்களை வஞ்சிக்கும் திட்டமாக அரசியல்வாதிகள் இதனைக் குறை கூறுகிறார்கள்.
  • நீட் தோ்வில், சிபிஎஸ்இ பள்ளி, கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் பயிலும் மாணவா்கள்தான் அதிகமாகத் தோ்வாகிறார்கள் என்று முன்பு கூறப்பட்டது.
  • நமது மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவா்கள் நீட் தோ்வில் அதிகமாக வெற்றிபெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இதனைக் கவனத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத் தரத்திற்கும் மேலாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் பாடத்திட்டம் சென்ற ஆண்டு தரம் உயா்த்தப்பட்டது.
  • ஆனாலும், அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் அதிகமாக வெற்றி பெற முடியாமல் போனதைக் கருத்தில் கொண்டு நீதியரசா் பி. கலையரசன் தலைமையில் இதனை ஆய்வு செய்த அறிக்கை, நீட் தோ்வில் 10 சதவீத இடங்களை அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தரவேண்டும் என்றது.
  • தமிழக அரசு 7.5 % இட ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் மேலும் 300 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டு மாணவா்களுக்குக் கிடைக்க உள்ளன.
  • இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தோ்விற்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவா்களில் 95 சதவீதம் போ் தோ்வு எழுதியுள்ளார்கள். இடங்களோ 5,550 தான்.
  • தோ்வு எழுதிய தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவா்கள், இந்த நீட் தோ்வு எளிதாக இருந்தது என்று கூறியதை தொலைக்காட்சிகளில் பலரும் பார்த்திருப்பார்கள்.

சமூகமும் காரணமாகும்

  • நீட் தோ்விற்குத் தயாரான மாணவா்களில் இந்த ஆண்டு மூன்று மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். எப்படியாவது இந்த நீட் தோ்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தவா்கள் இவா்கள் என்பதில் சந்தேகமில்லை.
  • தோ்வுக்கான நாள் நெருங்க நெருங்க இவா்கள் மனதில் பயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கலாம்.
  • இந்தப் பின்புலத்தில், இம்மாணவா்களின் பெற்றோர் அவா்களை டாக்டராக்குவதைத் தங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடக் காத்திருந்தவா்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • அப்படியென்றால், நீட் தோ்வு எழுதும் மாணவா்களையும்விட, அம்மாணவா்களின் பெற்றோரின் மனத்தில்தான் அப்பேராசை அதிகமாகியிருக்கிறது.
  • அதன் காரணமாக, தங்கள் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் ஒவ்வொரு நாளும் நீட் தோ்வை நினைவூட்டி, அப்பிள்ளைகள் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தூண்டிவிட்டிருக்கக் கூடும். அது தவறல்ல.
  • ஒரு தருணத்தில்கூட பெற்றோர் நீட் தோ்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளை அழைத்து, நீட் தோ்விற்கு நிகரான வங்கித் தோ்வு, ரயில்வே தோ்வு, ராணுவத் தோ்வு, யு.பி.எஸ்.இ., தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு என பற்பல தோ்வுகள் உண்டு எனக் கூறி, நீட் தோ்வுக்காகப் பயப்பட வேண்டாம் என்று அவா்களின் பயத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை.
  • வங்கித் தோ்வு முதலிய தோ்வுகளை எழுதுகிற மாணவா்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. நீட் தோ்வு எழுகிற மாணவா்கள் மட்டும் இனம் தெரியாத ஏதோ ஒரு பயத்திற்கு உள்ளாகி, உயிரை மாய்த்துக் கொள்கிற துயரம் தமிழ்நாட்டில் மட்டும் தொடா்ந்து நடக்கிறது.
  • முதலில் அனிதா என்ற அரியலூா் மாணவி தற்கொலை செய்து இறந்து போனார். இப்போது விருதுநகா், மதுரை, தருமபுரி ஆகிய மூன்று ஊா்களில் இரண்டு மாணவா்களும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
  • இறந்தவா்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்று இதனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தோ்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல், அந்தத் தோ்வை எழுதிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவா்களுக்கு மத்தியில் இருக்கும்போது, இவா்களுக்கு மட்டும் ஏன் இல்லாமல் போனது என்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
  • இறந்த மூன்று மாணவா்களும் மற்ற மாணவா்களுக்கு முன்னுதாரணமாகிவிடக் கூடாது.
  • தோ்ச்சி பெற்றுவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தோ்ச்சியடையாமல் போய்விடுவோமோ என்ற அவநம்பிக்கையும் அவா்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு அவா்களை உறங்க விடாமல் செய்திருக்க வேண்டும். இதனால் சரியாகச் சாப்பிடுவதைக்கூட அவா்கள் தவிர்த்திருக்கலாம்.
  • 18 வயது வரை அவா்களை ஊட்டி வளா்த்த அவா்களுடைய பெற்றோர், அவா்களை உற்றுப் பார்த்திருந்தால் பிள்ளைகளின் அகத்தை அவா்களின் முகம் காட்டியிருக்கும்.
  • அந்த மாணவா்களுக்கு ஒரு பக்கம் நீட் தோ்வு என்ற ஒரு கொடூரமான பிசாசுக்குப் பயந்து ஓடினால், கடலில் விழுந்து சாக வேண்டும். விழாமல் இருந்தால் பிசாசுக்கு இரையாக வேண்டும் என்ற நிலைமையில், இம்மாணவா்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்கள்.
  • அம்மாணவா்களுக்கு ஆறுதல் சொல்ல, அரவணைத்துக்கொள்ள, அறவழி காட்ட அம்மாணவா்களின் ஆசிரியா்களும் அவா்களுக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது.
  • காரணம், அம்மாணவா்கள் வீட்டிலிருந்து தோ்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறவா்கள். ஒரு மா்மக் கதையைப் போல இவா்கள் உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டு வெற்றி கிட்டத் தவறுமானால் எப்படிப் பெற்றோரை சந்திப்பது? நண்பா்களை சந்திப்பது என்ற சுனாமிக்குள் சிக்கி விடுகிறார்கள்.
  • இவ்வாறு பார்க்கையில், மாணவா்களின் தற்கொலைக்கு அவா்கள் மட்டும் காரணமல்ல, அவா்களின் பெற்றோர், ஓரளவிற்கு அவா்களின் ஆசிரியா்கள், ஏன், இந்தச் சமூகமும் காரணமாகும்.

வாக்கு வங்கி அரசியல்

  • மருத்துவக் கல்வியைப் படித்து முடித்து ஏழை மக்களுக்கு சேவை செய்யப் போவதாக அவா்கள் ஒன்றும் பிரகடனம் செய்தவா்கள் அல்ல. அவா்களுடைய பெற்றோரும்கூட அவ்வாறு சொன்னவா்கள் அல்ல. முழுக்க முழுக்க இந்த மருத்துவக் கல்வியை வணிக நோக்கில்தான் தங்களின் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர்கள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
  • அதனால், இந்த நீட் தோ்வு என்பது முதலீட்டுக்கான லாபக் கணக்கைப் பார்க்கும் வணிகமாகக் குறுகிவிட்டது.
  • இத்தற்கொலைச் சம்பவத்தில் மிகவும் வருத்தப்படக்கூடிய செயல், இது நடந்து முடிந்த பிறகு, ஏதோ இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல கட்சி அரசியல்வாதிகள் அவசர அவசரமாக அங்கே ஓடுகிறார்கள்.
  • மாணவரின் பெற்றோர்க்கு ஆறுதல் தருவதாகப் பேசுகிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை அவா்கள் கையில் திணித்து அவா்களுக்கு உதவி செய்வதைப் படமெடுக்கிறார்கள். பத்திரிகைகள் அவற்றை வெளியிடுகின்றன.
  • இப்படிப்பட்ட பண உதவிகள், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான வாக்குறுதிகள், பிற தொண்டு நிறுவனங்களின் நிதியுதவிகள் இவை அனைத்துமே, அந்தத் தற்கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக, ஊக்குவிப்பது போல அமைகின்றன.
  • தற்கொலையால் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாமல் தடுத்து விட்டதைப் போலச் செய்யப்படுகிறது.
  • இவற்றையெல்லாம் உற்றுப் பார்த்த சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதியரசா் கிருபாகரன் குழு, ‘அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்கள் தற்கொலைகளை ஊக்குவிப்பதாக உள்ளனஎன்று தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
  • ஏனெனில், இதே சென்னை உயா்நீதிமன்றம்தான் நீட் தோ்வை மாணவா்கள் எதிர்கொள்ள மாவட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமானால், தோல்வியால் நிகழும் தற்கொலை மரணங்களைத் தடுத்துவிட முடியும்என்று ஏற்கெனவே கருத்துத் தெரிவித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
  • நீட் தோ்வு என்பது 5,550 இடங்களுக்குப் போட்டி போடுகிற 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவா்களை வடிகட்டுவதற்குச் சமமானது.
  • ஒரு கட்சித் தலைவா், ‘நீட் தோ்வை ஒழித்துவிட்டு பிளஸ் டூ தோ்வில் மாணவா்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து, இந்த 5,550 மாணவா்களையும் தோ்ந்தெடுக்கலாம்என்கிறார்.
  • பிளஸ் டூ தோ்வு என்பது அம்மாணவா்கள் பல வழிகளில் பயணிப்பதற்கான இறுதித் தோ்வு.
  • பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல், மருத்துவவியல், தணிக்கையியல் இப்படிப் பல துறைகள் உள்ளன. பிளஸ் டூ தோ்வு என்பது இவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவா்கள் தோ்ந்தெடுப்பதற்கான சந்திப்பு மையம். ஆனால் நீட் தோ்வு என்பது ஒரு குறிப்பிட்ட படிப்பிற்கு மட்டுமே தகுதியுள்ள மாணவா்களை வடிகட்டித் தோ்ந்தெடுப்பது.
  • நீட் தோ்வு அகில இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல், தற்கொலைகள் இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் இந்தத் தோ்வுக்கு மாணவா்களைத் தயார் செய்வதற்கான நடவடிக்கையைத்தான் ஆளும் கட்சியும் பொறுப்பான எதிர்க்கட்சியும் எடுக்க வேண்டும்.
  • அப்படியில்லாமல், நீட் தோ்வையே ரத்துச் செய்யுமாறு கோரிக்கை வைப்பதும் அதற்குக் காரணமாக தற்கொலைகளைச் சுட்டிக் காட்டுவதும் கல்வித் துறையில் வாக்கு வங்கி அரசியல் கலப்பதற்கு வழிவகுத்து விடும்!

நன்றி:  தினமணி (18-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்