TNPSC Thervupettagam

நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுப்பது அவசியம் ஏன்

August 25 , 2023 319 days 182 0
  • நன்னெறி வகுப்புகள் என்று அழைக்கப்படும் நீதி போதனை வகுப்புகள் இப்போது பள்ளிகளில் நடத்தப்படுவதே இல்லை. இந்தப் பெயர்கள் எல்லாம் இன்றைய பள்ளி மாணவர்களுக்குப் புதிதாக இருக்கக்கூடும்.
  • பெற்றோர்களிடமிருந்து கதைகள் கேட்டு வளர்ந்த தலைமுறையிடமிருந்து சற்று வேறுபட்டவர்களாக இன்றைய தலைமுறையினர் வளர்ந்துவருகிறார்கள். இவர்கள் கேட்கும், பார்க்கும் கதைகள் அனைத்தும் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. இந்த ஊடகங்கள் பெரும்பான்மையாக அழுக்குகளைச் சொல்லிக்கொடுப்பவையாக இருக்கின்றன. இந்தச் சூழலில்தான் நாம் மறந்துபோன நீதி போதனை கதைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையையும் அவசியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது நாங்குநேரி சம்பவம்.

கதைகளின் வழியே அறம் போதித்தல்

  • நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
  • வாரத்தில் ஒரு பாடவேளையில் நீதிக் கருத்துகளை வெளிப்படுத்தும் கதைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கூறி நீதியின் தன்மையையும், நீதியின் வழி நடந்தவருக்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்கிச் சொல்வார். கதைகளைக் கூறி முடித்த பின்னர் மாணவர்களிடம் கதையில் இடம்பெற்ற கதைமாந்தர்களை ஆசிரியர் விவாதப் பொருளாக்குவார். இந்தக் கதையில் வருபவரில் யார் நல்லவர், யார் தீயவர் என கேள்வி எழுப்பி மாணவர்கள் அறம் குறித்து சிந்திக்கத் தூண்டுவார்.
  • ஒரு புறா பறந்துவந்து அச்சத்தோடு சிபி மன்னனின் மேல் அமர்கிறது. அந்தப் புறாவிடம் உன் அச்சத்திற்கு என்ன காரணம்?” என மன்னன் கேட்டுக்கொண்டிருக்கையில், பருந்து ஒன்று சிபி மன்னன் அருகில் வந்து பசியோடு அமர்ந்தது. மன்னா! அந்தப் புறா எனக்குச் சொந்தமானது. என் பசிக்கு அதுதான் இரை.அதை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்எனக் கூறியது. மன்னன் குழப்பத்தில் ஆழ்ந்தான். புறா அச்சம் அதிகமாகிப் படபடத்தது. மன்னா, பசி என்னைக் கொல்கிறது. என் இரையை என்னிடம் தந்துவிடுங்கள்என்றது பருந்து. பருந்தின் பசியைப் போக்க நினைத்த மன்னன், புறாவின் எடைக்கு நிகராகத் தன் தசையைப் பருந்துக்குக் கொடுத்துப் புறாவின் உயிரை மீட்க முடிவுசெய்தான்.
  • தராசின் ஒரு புறத்தில் மன்னனின் உடலிருந்து வெட்டப்பட்ட சதையும் மறுபுறத்தில் புறாவும் ஏற்றப்பட்டன. புறாவின் எடையைச் சமமாக்க முடியவில்லை. என்ன செய்வது? மன்னன் திகைத்துப் போகிறான். இப்போது தானே தராசில் ஏறி நிற்கிறான். புறாவின் எடைக்கு மன்னனின் எடை சமமாகிறது. எதிரே நின்றுகொண்டிருந்த பருந்து இந்தக் காட்சியைப் பசியோடு பார்த்துக்கொண்டு இருக்கிறது.
  • இந்தத் தருணத்தில், தாங்கள் பறவையின் வடிவில் வந்த கடவுகள்கள் என்பதை அந்தப் புறாவும், பருந்தும் வெளிப்படுத்துகின்றன. சிறு பறவையின் மீது கொண்ட இரக்கத்தால் தன்னுயிரையே இழக்கத் துணிந்த மன்னனின் மேன்மை குணத்தை அவை போற்றுகின்றன.
  • ஒரு புறாவிற்காக ஒரு மன்னன் தன் இன்னுயிரையே தர முன்வருகிறான் என்ற அறத்தை முன்னுருத்தி இதுபோல் மாணவர்களும் தங்கள் வாழ்வில் எந்த உயிருக்கும் தீங்கிழைக்காதவர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தையும் சிந்தனையையும் இதுபோன்ற கதைகள் வார்த்தெடுத்தன.
  • இப்படி அறம் பேசும் கதைகள் தமிழ்ப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஆயிரக் கணக்கில் உள்ளன.

தொலைந்துபோன நீதி போதனை

  • ஆனால், வகுப்பறைக்குள் இன்றைக்கு என்ன நிகழ்கிறது? ஆசிரியரின் கவனமும் மாணவரின் கவனமும் முற்றிலுமாக மதிப்பெண்களை நோக்கியே இருக்கின்றன. பெற்றோர், மாணவர், ஆசிரியர், சமூகம் என்கிற அந்த நாற்கரத்தை மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு இழைகளே இறுகச் சுற்றிவைத்திருக்கின்றன. எல்லோர் கனவுகளும் இந்த இரண்டிற்குள்ளயே அடங்கிப்போகின்றன.
  • ஒரு நாளைக்கு எட்டுப் பாடவேளைகளில் பெரும் பகுதியைக்  கணிதம், அறிவியல் பாடங்களே ஆக்கிரமிப்புச் செய்துகொள்கின்றன. படிபடி என்கிற ஒற்றை வசனத்தைத் தவிர வேறு எதுவும் மாணவன் காதுகளுக்குள் விழாமல் பார்த்துக்கொள்கிற பள்ளிகள்தான் ஏராளம்.
  • நீதியைப் போதிக்கும் வகுப்புகளுக்கும் அறம் செய விரும்பு என ஆத்திசூடியைச் சொல்லிக் கொடுக்கும் தமிழ் வகுப்புகளுக்கும் நேரங்கள் வழங்கப்படுவதில்லை. அவற்றை பயனற்ற நேரங்களாக பார்க்கும் போக்கு நம் சமூகத்திடையே அதிகரித்திருக்கிறது. இதன் விளைவை தான் நாம் நாங்குநேரியில் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.
  • கதைகளின் வழியாகவோ, நேரடியாகவோ அறம் பேசுகிற வகுப்பறையும் இல்லை, ஆசிரியர்களும் இல்லை, தாத்தா பாட்டிகளும் இன்றைக்கில்லை. மாணவர்களின் செவிகளில் சென்று சேராத சொற்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தல் அதில் அறம் என்ற சொல்தான் முதன்மை வகிக்கும்.

செய்ய வேண்டியவை என்ன?

  • நாங்குநேரி சம்பவத்தை ஒட்டி தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆசிரியர்களே நீதிக் கதைகளை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்என்பதை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
  • பள்ளியில் நீதிக்கதை சொல்ல வேண்டும் என்றால் அது தமிழாசிரியர்களின் பொறுப்பு எனக் கருதுகிற சூழல் வகுப்பறைக்குள் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கதை சொல்லுங்க ஆசிரியரேஎன்று இன்றைய கணித ஆசிரியரிடமோ, அறிவியல் ஆசிரியரிடமோ மாணவர்கள் கேட்க முடியாது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பாடம் தவிர்த்து எந்த நீதிக் கதைகளையும் சொல்லவும் வாய்ப்பில்லை.
  • தற்போதைய சூழலில், நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுத்து வாரத்தில் ஒரு கதையையாவது மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதைப் பள்ளிகள் உறுதிபடுத்துவது அவசியம். மாணவர்களின் உள்ளங்களில் மண்டிக் கிடக்கும் சாதிய வன்மம், ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை அறுத்தெரியும் ஆயுதமாக நீதிக்கதைகள் மட்டுமே இருக்கும்.
  • நீதிக் கதை என்பது பள்ளியில் போதிக்கப்பட வேண்டியது என்று எண்ணாமல் ஊடகங்கள், சமூகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் சேர்ந்து மாணவர்களுக்குச் சொல்லும் கதைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீதியை அமைத்துக் கூற வேண்டும். நாம் தேடும் சூழல் சார்ந்த நீதியில் கதைகள் கிடைக்கவில்லை என்றால், நாம் எண்ணும் சூழலுக்கு ஏற்ப நாமே நீதிக் கதைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
  • மாணவர் நலன் சார்ந்து கல்வியில் பல திட்டங்களையும் மாறுதல்களையும் கொண்டு வருகிற அரசு, இதுபோன்ற விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி நீதிக் கதைகளின் வழி மாணவர்களிடம் சமூகநீதியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (25– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்