- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனைக் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதும் இந்த வழக்கை அது அணுகிவரும் முறையும் விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளும் தன்மை அதற்கு இல்லை என்பதையே உணர்த்துகின்றன.
- நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்ட இந்த வழக்கில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பானது, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் மேன்மையையும் காப்பதாக இல்லை.
- பூஷன் மக்கள் நலப் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தில் பல முறை வாதாடியவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கான ‘அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்’-ஆக அங்கீகரிக்கப்பட்டவர்.
- சட்ட அறிவோடு நீண்ட தொழில் அனுபவமும் நற்பெயரும் கொண்ட, உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளைக் கொண்ட இந்த வழக்கறிஞர்களும்கூட நீதித் துறையை விமர்சிக்க முடியாது என்றால், வேறு யார்தான் வாய் திறப்பார்கள்?
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பில் பிரசாந்த் பூஷன் இட்ட முதல் ட்விட்டர் பதிவில், இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஒரு விலையுயர்ந்த பைக் மீது அமர்ந்திருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்திருந்தார்.
- குடிமக்களுக்கு நீதிமன்றப் பாதை அடைக்கப்பட்டதாகச் சுட்டும் அந்தப் பதிவு எந்த விதத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கிறது, எந்த விதத்தில் அதன் அதிகாரத்தைக் கீழிறக்குகிறது, எந்த விதத்தில் அதன் செயல்பாடுகளில் குறுக்கிடுகிறது என்று தெரியவில்லை.
- இரண்டாவது ட்விட்டர் பதிவில், பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். குறிப்பாக, கடந்த ஆறு ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை போன்ற ஒரு சூழல் நிலவுவதன் வழி ஜனநாயகம் நெரிக்கப்பட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாகக் கடைசியாக வீற்றிருந்த நால்வரே காரணம் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
- இது ஒரு அரசியல்ரீதியிலான கருத்து. மேற்குறிப்பிட்ட நீதிபதிகள் மீது சில முன்னாள் நீதிபதிகளும் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- முன்னாள் நீதிபதி ஒருவர், தனது அதிகாரத்தைத் தவறாகக் கையிலெடுத்துக்கொண்டார் என்றும், தனக்குச் சாதகமான தீர்ப்பு வரும் வகையில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்றும் அவரது சகாக்களாலேயே குற்றம்சாட்டப்பட்டதைவிடவும் நீதித் துறையின் செயல்பாடு குறித்த பூஷனின் விமர்சனம் கடுமையானதல்ல.
நன்றி: தி இந்து (24-08-2020)