- நீதி என்பது மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டும். அறமும் ஒழுக்கமும் கொண்ட நீதிச் சூழல்தான் ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டுமானம். அரசு இயற்றும் சட்டங்களைச் செயல்படுத்தும் நீதித் துறை, மக்களின் மனங்களில் அமைதியையும் அறத்தையும் தரவல்லது. ஒரு நாட்டின் குடிமக்கள் அந்த நாட்டின் சட்டங்களையும் நீதியையும் நம்பியே வாழ்கிறார்கள். ஆனால், இலங்கையில் நிலைமையே வேறு. இங்கு நீதித் துறை நீதியாகச் செயல்பட்டிருந்தால் தமிழர்கள்மீது இனப்படுகொலைகள் நடந்திருக்காது; ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்திப் போராடுகிற நிலையும் ஏற்பட்டிருக்காது.
உயிர் பிழைக்கத் தப்பியோடிய நீதிபதி
- இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான வடகிழக்கில் உள்ள முல்லைத்தீவு, இறுதிப் போர் நடந்த பகுதி. அம்மாவட்டத்துக்கு நீதிபதியாக இருந்தவர் ரி.சரவணராஜா. இவர், அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அரசியல் அழுத்தம் காரணமாகத் தீர்ப்புக்களை மாற்றச் சொல்வதாக வும் கூறிப் பதவி விலகியிருக்கிறார்.
- அது மட்டுமல்ல, தனது உயிரைப் பாதுகாக்க வெளிநாடு ஒன்றில் தஞ்சம்புகுந்துள்ளார். குருந்தூர் மலை சைவ ஆலய இடத்தில்பௌத்த விகாரை அமைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் வழங்கிய நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றியமைக்கவே இப்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
- இலங்கை அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, முன்னாள் கடற்படை அதிகாரி. போர்க் குற்றங்கள் - இனப் படுகொலைகளுடன் தொடர்புடையவராகத் தமிழர் தரப்பால் குற்றம்சுமத்தப்படும் இவர், தற்போது இலங்கை அரசில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.
- தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிக் கருத்துக்களை அள்ளி வீசுவதே அமைச்சர் என்ற பெயரில் இவர் ஆற்றுகிற பணி. இந்நிலையில், இவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் நீதிபதி சரவணராஜாவுக்கு அச்சுறுத்தலாகக் கருத்துக்களை வெளியிட்டதுதான் பிரச்சினையின் மையப் புள்ளி.
சைவ ஆலய விவகாரம்
- முல்லைத்தீவு மாவட்டத்தில், மிகவும் தொன்மைவாய்ந்த ஈழச் சைவ ஆலயம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம். அங்கு ஆதி அனாதி காலம்தொட்டே ஈழ மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் எண்முக லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- அவற்றை ஒத்த எண்முக லிங்கங்கள் தமிழ்நாட்டில்கூடக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவை ஈழத்தின் தொன்மையையும் தமிழர்களின் தொன்மையையும் காட்டும் ஆதாரங்கள் என்றும் குருந்தூர் மலை ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமானது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்று ஆய்வாளருமான சி.பத்மநாதன் சான்றாதாரங்களின் அடிப்படையில் கூறியிருக்கிறார்.
- இந்நிலையில், அங்கு கண்டுபிடிக்கப்பட்ட எண்முக லிங்கம், சிங்கள பௌத்த தொன்மைச் சான்று என்றும் அங்கு பௌத்த விகாரையை அமைப்போம் என்றும் சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவுடன் குருந்தூர் மலைக்கு வருகை தந்தார்கள். இதற்கு இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களமும் காவல் துறையும் ராணுவமும் பக்கச்சார்பான முறையில் சிங்கள இனவாதிகள் குருந்தூர் மலையில் விகாரை அமைக்கத் துணைநின்றனர். தமிழர் தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் குருந்தூர் மலையில் விகாரை அமைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. என்றபோதும் ராணுவம் - காவல் துறையின் பாதுகாப்பில் பேரினவாதிகள் அங்கே நீதிமன்றத் தடையை மீறி விகாரையை அமைத்தனர்.
நீதிபதிக்கே மிரட்டல்
- இந்நிலையில், குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் தொன்மைச் சான்றுகள் காணப்படுகின்ற இடத்தில், தமிழர்கள் பொங்கல் வழிபாடு செய்யச் சென்ற வேளையில், பொங்கலுக்காக மூட்டப்பட்ட அடுப்பைச் சிங்களப் பேரினவாதிகள் சிலர், காலால் மிதித்து அணைத்த நிகழ்வு ஈழ மக்களை வெகுவாகப் பாதித்தது. தமிழர் மரபில் அடுப்பைத் தெய்வமாக வழிபடப்படுகின்ற நிலையில், இந்தச் சம்பவம் இலங்கையில் பெரும் பேசுபொருளானது. பொங்கல் வழிபாடு செய்ய முடியாத நிலையில் ஈழத் தமிழ் மக்கள் திரும்பினர். அத்துடன் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி வேண்டி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
- அங்கே அமைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறிய சட்டவிரோத விகாரை என்றும், அங்கு தமிழர்களின் வழிபாட்டு உரிமையை யாரும் தடுக்க முடியாது; காவல் துறையே பொங்கல் நிகழ்வுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு நீதிபதி உத்தரவிட்டார்.
- இதனையடுத்து, சிங்கள இனவாதியான சரத் வீரசேகர, “இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மறக்க வேண்டாம். சிங்கள மக்கள் அவருக்கு எதிராக அணிதிரள வேண்டும்” என அழைப்பு விடுத்ததுடன், முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி என்றும் முல்லைத்தீவுக்கு வேறு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மறைமுக அச்சுறுத்தல் எப்படி இருக்கும்
- எவராலும் எந்த அதிகாரத்தாலும் கட்டுப்படுத்த முடியாத சுயாதீனத்தன்மை கொண்ட நீதிபதி ஒருவருக்கு, அரசுத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் - அதுவும் சட்டத்தை இயற்றுகின்ற, சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அரசின் உயர்ந்த சபையாகிய நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இப்படி அச்சுறுத்தல் விடுக்கிறார் என்றால், நீதிபதி சரவணராஜாவுக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை உணரலாம்.
- அவருக்கான காவல் துறைப் பாதுகாப்பு அதிரடியாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் இலங்கை ராணுவத்தின் ரகசியப் புலனாய்வாளர்கள் தன்னைத் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளதாகவும் தனது பதவிவிலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா கூறியுள்ளார். மேலும், சட்டமா அதிபர் (Attorney General) தன்னைச் சந்திக்க நேரடியாக அழைத்திருந்ததாகவும் அங்கு சென்ற வேளையில் குருந்தூர் மலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் நீதிபதி சரவணராஜா கூறியிருக்கிறார்.
- இந்த நிகழ்வுகளின் காரணமாக, தாம் மிகவும் நேசித்த நீதிபதி பதவியைத் துறப்பதாக அவர் வருத்தத்துடன் பதிவுசெய்திருக்கிறார். அத்துடன் தனது உயிர் பாதுகாப்பின் பொருட்டு இலங்கையைவிட்டு வெளியேறி, வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். இலங்கையை விட்டுப் பல முக்கியஸ்தர்கள் வெளியேறிவரும் நிலையில், நீதிபதியும் இலங்கையைவிட்டு வெளியேறுவதாக இலங்கை ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி
- நேர்மையான தமிழ் நீதிபதி ஒருவருக்கு இந்த நிலை நேர்ந்திருப்பதன் வாயிலாக, இலங்கையில் நீதித் துறையின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு சரவணராஜா ஒரு சாட்சியமாக மாறியுள்ளார். அத்துடன், நீதிபதி ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண ஈழத் தமிழ் மக்களுக்கு எந்த நிலை இருக்கும் என்பது இன்னொரு முக்கியக் கேள்வி. இலங்கையின் நீதித் துறை என்பது அரசினது பேரினவாத எண்ணங்களுக்கும் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் கருவியாகவும் காவலாகவும் செயல்படுகிறது என்கிற ஈழத் தமிழர்களின் பல ஆண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
- முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணையை ஈழத் தமிழர்கள் ஏன் கோருகிறார்கள் என்பதும், சர்வதேச நீதியே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அளிக்கும் என்பதையும்கூட இந்த நிகழ்வு வெளிப்படையாகத் தெளிவாக்கியுள்ளது. இப்படியான சூழலில் இலங்கையில் நீதி என்பது மருந்துக்கும் இருக்குமா? ஒடுக்கப்பட்ட, இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அத்தகைய இலங்கையில் நீதிதான் கிடைக்குமா?
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2023)