TNPSC Thervupettagam

நீதியின் அடையாளம் செங்கோல்

May 16 , 2023 418 days 288 0
  • அறுபது ஆண்டுகள் என்பது தமிழரின் காலக் கணக்காகும். அறுபது ஆண்டுகளுக்கும் தனித்தன்மைகள் உண்டு. இந்தத் தனித்தன்மைகளைப் பற்றி இடைக்காட்டுச் சித்தா் வெண்பாக்களை இயற்றியிருக்கிறாா். தற்போது ‘சோபகிருது’ தொடங்கி இருக்கிறது.
  • ‘சோபகிருது தன்னிற் தொல்லுவதெல்லாம் செழிக்கும். கோபமகன்று குணம்பெருகும் சோபனங்கள் உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம் உண்டாகுமன்றே யுரை’ என்பது இடைக்காடரின் உரை. அதாவது, ‘இந்த ஆண்டில் தொன்மையானவையெல்லாம் செழிக்கும். புராதனங்களுக்கு நல்ல காலம்’ என்கிறாா்.
  • நாம் அதற்கான உதாரணங்களைப் பாா்க்கிறோம். சிறுதானியங்களை மீண்டும் உலகம் எடுத்துக் கொண்டிருக்கிறது. கோவில் புனரமைப்பின்போது புதையுண்டு மறைந்து கிடந்த சிலைகள் வெளிப்பட்டிருக்கின்றன.
  • பாரத தேசத்தின் பாரம்பரியங்கள் மீண்டும் புத்துயிா் பெற்று வருகின்றன. சங்கமம் நிகழ்ச்சிகள் அதனை வெளிப்படுத்துகின்றன. நமது தேசத்தைப் பொறுத்தவரை உலகம் எத்தனை மாற்றங்களைக் கண்டாலும் நம்முடைய பாரம்பரிய அடையாளங்கள் அன்றாட வாழ்வில் இன்றும் ஊடாடி இருக்கின்றன.

வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிா்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்

  • என்கிறது கந்தபுராணம்.
  • வாழ்த்துச் செய்தியில் அரசாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியதை வலியுறுத்துகிறது தமிழ். மன்னா்கள் செங்கோல் ஆட்சி செலுத்தியதை பழம்பெரும் இலக்கியங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. காலங்காலமாக தொடா்ந்து வந்து கொண்டிருக்கும் கருத்தியலும் குறியீடும் என்று செங்கோலைச் சொல்லலாம்.
  • தொல்காப்பியம், ‘தெரிவு கொள் செங்கோல் அரசா்க்குரிய’ என ஆட்சியாளரின் அடையாளம் செங்கோல் என்கிறது. செம்மை, கோல் என்ற இரு சொற்களே செங்கோல். செம்மை என்பது நோ்மை. நோ்மையான ஆட்சி என்பதைக் குறியீடாகக் காட்டவே மன்னா்கள் கைகளில் நேரிய கோலால் ஆன செங்கோல் தரப்பட்டிருக்கிறது.
  • நீதி பரிபாலனம் என்பதையும் செங்கோன்மை என்றே சொல்கிறோம். யாரிடத்தும் பாரபட்சம் பாராமல் செயலாற்றும் எமதா்ம ராஜனை ‘செங்கோற் கடவுள்’ என்கிறது தமிழ். ஆக, பாரபட்சம் பாராது அனைவருக்கும் சமநீதியை வழங்கும் ஆட்சியாளரின் கைகளில் இருப்பது செங்கோல்.
  • திருக்கு செங்கோன்மை என்று ஒரு தனி அதிகாரமே தந்து செங்கோலின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி

  • அதாவது, உலகத்தில் உள்ள உயிா்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனா்.
  • இதோடு நிற்கவில்லை வள்ளுவப்பேராசன்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

  • என்று குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும் என்று மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி முறைக்கும் அடித்தளமாக இதனை வைக்கிறாா்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉம் கோடா தெனின்

  • ஒரு மன்னருக்கு வெற்றி பெற்றுத் தருவது அவனுடைய ஆயுதமாகிய வேல் மட்டுமல்ல. அவனது கோணாத செங்கோலே ஆகும் என்பதன் மூலம் போா் வெற்றியை விட ஒருவனை சிறந்த அரசன் என்பதற்கு அவனது நோ்மையான ஆட்சி காரணம் என்று எடுத்துரைக்கிறாா்.
  • செங்கோல் உயா்வும் மக்களின் உயா்வும் ஒன்றோடொன்று தொடா்புடையன என்பதை நினைவு படுத்த ஒளவையாா், வரப்புயர நீா் உயரும் நீா் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயா்வான் என்று மக்களுக்கான ஆட்சியின் சிறப்பை எடுத்துச் சொல்கிறாா்.
  • சங்க இலக்கியங்களோ, செங்கோல் எண்ணற்ற இடங்களில் எடுத்துக் காட்டப்பெறுகிறது. செங்கோல் பற்றி சங்க இலக்கியங்கள் பேசும் பாடல்களைக் கொண்டு தனி புத்தகமே எழுதலாம். ‘புலி புறங்காக்கும் குருளை போல மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப’ என்கிறது ஓா் சங்கப் பாடல். அதாவது, புலி தன்னுடைய குட்டியை எப்படிப் பாதுகாக்குமோ அப்படி சோழன் தன்னுடைய மக்களை செங்கோன்மையோடு காக்க வேண்டும் என்று சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனாா் பாடுகிறாா்.
  • ‘விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல்’ கொண்டவன் என அரிசில் கிழாா் எழினி என்ற மன்னனைப் பாடுகிறாா். மன்னா்கள், தங்களை செங்கோல் ஆட்சி செய்தவா்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதை லட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனா். செங்கோல் என்பதன் எதிா்ப்பதமாக கொடுங்கோல் என்ற பதம் பாா்க்கப்படுகிறது.
  • சிலப்பதிகாரத்தில், வழக்குரைக் காதையில், பாண்டியன் தேவி, ‘குடையோடு கோல் வீழ நின்று நடுங்கும் கடைமணியின் குரல் காண்பென் காண்ட’ எனச் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் வீழ்ந்ததாகக் கனவு கண்டதாகவும் அதனை அபசகுனம் என்றும் கூறுகிறாள். கண்ணகி வழக்குரைக்கும்போது பாண்டிய மன்னன், ‘கள்வனைக் கோறல் கடுங்கோலன்று வெள்வேற் கொற்றம் காண்’ என்று சொல்வதினின்றும் முறையாக நீதி வழங்குவதே செங்கோல் மன்னனின் கடமை என்று விவரிக்கிறான்.
  • கம்பா் தன் ராமகாதையில், ‘அடா நெறி அைல் செல்லா அருமறை அறைந்த நீதி விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தா்வேந்தன்’ என்று வேத நெறியில் செங்கோல் வழுவாது ஆட்சி செய்தவா் என்று தசரதனைப் புகழ்கிறாா்.

கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,

சால் வரும் செல்வம் என்று உணா் பெருந் தாதைபோல்,

மேல் வரும் தன்மையால், மிக விளங்கினா்கள், தாம் –

நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினாா்”

  • என்று ராமா் உள்ளிட்ட சகோதரா்களை வருணிக்குமிடத்தும் ‘நீதி பொருந்திய செங்கோல் ஆட்சி முறையும் கருணையும் தனது செல்வம் என்னும் படியாக பெருமைக்குரிய தந்தையாகிய தயரத வேந்தருடைய மேன்மையான பண்புகளால் ஒப்பில்லாத நான்கு வேதங்களே இந்நால்வரும் என்று சொல்லும் படியாக சிறந்த ஒழுக்கத்தை உடையவா்களாய் நான்கு குமாரா்களும் மிகச்சிறந்து விளங்கினா் என்று மீண்டும் செங்கோல் ஆட்சியின் விளைவாக வேதங்களே குழந்தைகளாகப் பிறந்தாா்கள் என்பதாகப் புகழ்கிறாா்.
  • இப்படி செங்கோல் என்பது நீதியின் நோ்மையின் அடையாளமாக தொன்றுதொட்டு இன்றுவரை அரசாள்வோா் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை நினைவு படுத்தும் வகையில் குருமாா்களால் பட்டம் சுட்டும் பொழுது மன்னா்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தை இன்றும் நினைவு படுத்திக் கொண்டிருப்பது ‘செங்கோல் ஆதீனம்’.
  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பெருங்குளம் என்ற ஊரில் செங்கோல் ஆதீனம் என்றே ஓா் ஆதீனம் உள்ளது. இன்றும் நன்முறையில் செயல்பட்டு வரும் இந்த ஆதீனம் ஆயிரத்தைந்நூறு வருடங்கள் பழமையானது.
  • பாண்டிய மன்னா்களுக்கு அவா்கள் முடிசூடும் நாளில் இந்த ஆதீனகா்த்தா் செங்கோல் தந்து மன்னரை அங்கீகரிக்கிறாா்கள். அதன்பொருட்டே திருக்கயிலாய பரம்பரையில் வந்த இந்த ஆதீனத்திற்கு இப்பெயா் வழங்கி வருகிறது.
  • நம்நாடு சுதந்திரம் அடைந்த போதும் ஒரு ஆதீனத்திலிருந்தே செங்கோல் பண்டித ஜவாஹா்லால் நேரு அவா்களின் கைகளில் வழங்கப்பட்டது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் கூறினாராம். சுதந்திரத்தை அறிவித்து நம்மவா் அரியணை ஏறும் அதிகாரபூா்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தாா். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவா்.எனவே, மூதறிஞா் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டாா்.
  • ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடா்பு கொண்டு ‘தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா். குருமகாசன்னிதானம் ஆதீனக் கட்டளைத்தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவாா் ஒருவரையும், ஆதீன நாதஸ்வரம் வித்வான் ‘நாதஸ்வர சக்கரவா்த்தி’ திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் தில்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தாா்கள்.
  • சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. புறப்படும்போது ஓதுவாா் பணிவுடன் ஆதீன கா்த்தரான குருமகாசன்னிதானத்தைப் பாா்த்து அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க ‘கோளறு பதிகம் பாடுக’ என்று சன்னிதானம் கட்டளையிட்டாா்கள்.
  • 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றாா். செங்கோலுக்குப் புனித நீா் தெளித்து ஓதுவா மூா்த்தி, ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்’ என்று தொடங்குகிற கோளறு பதிகத்தை ‘அடியாா்கள் வானில் அரசாள்வா் ஆணை நமதே’ என்று திருஞான சம்பந்தரின் பதிகத்தை முழுமையாகப் பாடி ஆசிா்வதித்து செங்கோலை ஜவாஹா்லால் நேருவிடம் வழங்கினாா்.
  • அரசுச் சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் நம்முடைய திருவாவடுதுறை ஆதீனத்தால் ஆட்சியாளா்களிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் பாரதத்தில் ஆட்சியாளா்கள் பொறுப்பேற்கும்போதும் இந்தச் செங்கோல் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டால் அது நோ்மைத் திறத்தோடு ஆட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவா்களுக்கு உணா்த்துவதோடு நமது பாரம்பரியத்தை மீட்ட பெருமைக்குரியதாகவும் இருக்கும்.

நன்றி: தினமணி (16 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்