TNPSC Thervupettagam

நீதியும் பரிவுணர்வும்

July 16 , 2024 183 days 271 0
  • சமீபத்திய உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.யு.சந்திரசூட், “நீதித் துறையில் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, காலியிடங்களை நிரப்புவது ஆகியவையே நாம் சாதிக்க வேண்டிய இலக்குகள்.
  • எனினும், நீதித் துறையை நெடுங்காலத்துக்கு உயிர்ப்போடு வைத்திருக்கப்போவது சக உயிர்கள் மீது நாம் காட்டும் உயிர் இரக்கம் சார்ந்த பரிவுணர்வையும், பரிதவித்துக்கொண்டிருக்கும் மக்களின் கூக்குரலுக்குப் பதிலளிப்பதற்கான நமது திறனையும் பொறுத்தது என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். நீதி பரிபாலனம் குறித்த இந்தப் புரிதல் ஒரு நீதிபதியின் முடிவெடுக்கும் திறனில் பரிவுணர்வின் பங்கு குறித்துச் சிந்திக்கவைக்கிறது.

பரிவுணர்வின் வரையறை:

  • பெரும்பாலும் கழிவிரக்கத்தையும் உயிர்கள் மீதான பரிவுணர்வையும் நாம் குழப்பிக்கொள்கிறோம். பரிவுணர்வு என்பது பிறருடைய எண்ணங்களை, உணர்ச்சியைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுவது. பரிவுணர்வு என்பது ஒரு வகையான கண்ணோட்டம். அது அடுத்தவர்களுடைய நிலையிலிருந்து நாம் சிந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளையும் புரிந்துகொண்டு அது எப்படி அவர்களை வடிவமைக்கிறது என்பதை உணர்ந்து காட்டப்படும் ஓர் உணர்வு.
  • உணர்வுபூர்வமான பரிவுணர்வு என்பது சில நேரம் கருணை என்றும் பொருள்படும். அது பிறர் நலனில் நாம் கொண்டுள்ள அக்கறையையும் கவனத்தையும் பொறுத்து அமைகிறது. ஆனால், அறிவின் துணைகொண்டு காட்டப்படுகிற பரிவுணர்வுக்கு முறைப்படுத்தப்பட்ட சிந்தனைத் திறனுடைய ஆற்றல் தேவைப்படுகிறது.
  • அப்போதுதான் அது சரியான, துல்லியமான பரிவுணர்வாக அமையும். மேலும், அது மற்றவர்களையும் அவர்களின் பார்வையையும் கருத்தில் கொண்டு, அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் அமைவது.
  • ஜூரிஸ்ப்ரூடென்ஸ் (Jurisprudence) என்று சொல்லப்படுகிற சட்டவியலானது, உணர்வுகளை உள்வாங்கி நீதிபதிகள் எப்படி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்த நான்கு நுணுக்கமான பார்வைகளை உள்ளடக்கியுள்ளது. முதலாம் வகை - சட்டம் என்பது தர்க்கத்தையும் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறனையும் அடிப்படையாகக் கொண்டது என்று கருதுகின்ற – உணர்ச்சியற்ற நீதிபதிகள் தொடர்பானது.
  • இரண்டாம் வகை - பாரபட்சமான நீதிபதிகள் தொடர்பானது. மூன்றாம் வகைப்பட்டவர்கள், மரபு சார்ந்த அறிவார்த்த விஷயங்களால் உந்தப்பட்ட தன்னலமற்ற நடுநிலையாளர்கள்; தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை, உணர்வுக் கடப்பாடுகளை நீதியரசர்களான பின்பு அவர்கள் தள்ளி வைக்க வேண்டும். நான்காவது வகையினர், நாம் பேசிக்கொண்டிருக்கும் தலைப்புக்கு மிக முக்கியமானவர்கள்: பரிவுணர்வுடன் கூடிய நீதிபதிகள்.
  • பரிவுணர்வுடன் நீதி பரிபாலனம் செய்வதற்கு நீதியரசர்கள் தங்களின் நுட்பமான அறிவு, அனுபவம், சட்டத் தெளிவு, நடுநிலைத் தன்மை, இவற்றைத் தாண்டி, பரிவுணர்வைப் போற்ற வேண்டும். அத்தகைய நீதிபதிகள் பரிவுணர்வுடன் கூடிய நீதி பரிபாலனத்தில் பொருத்தமற்ற கருணைக்கு இடம் கொடுத்தல் ஆகாது. அவர் நிச்சயமாகக் கருணை அடிப்படையில் சட்டம் தவிர்த்த, வேறு அடிப்படையில் வழக்குகளை முடிவுசெய்யப் போவதில்லை.
  • நீதி பரிபாலனத்தின்போது நீதிபதிகள் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டு, அவர்களின் சொந்த மனச்சோர்வுக்கும் கோபத்துக்கும் எதிர்வினையாற்றக்கூடிய வாய்ப்பு உண்டு. என்ன நடந்தது என்பதைக் காட்டிலும், ஏன் நடந்தது என்கிற வினாவுக்கு விடை தேடினால் அந்த நீதியரசர் பரிவுணர்வோடு கூடிய பார்வையை அந்த வழக்கில் செலுத்தக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும்.
  • தங்கள் தீர்ப்பு ஒருதலைப்பட்சமானதா என்பதை அறிய நீதிபதிகள் தாங்கள் வழங்கிய தீர்ப்பின் முடிவுகள் ஏற்படுத்திய விளைவுகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம்முடைய முடிவுகள் இந்த உலகத்தை எப்படி மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவது, அந்த முடிவுகள் ஏற்படுத்திய தாக்கமும் தாங்கள் எந்த நிலையில் இருந்து அந்த முடிவுகளை எடுத்தார்கள் என்பதையும் பொறுத்து அமைகிறது.
  • மக்கள் எல்லாவற்றையும் ஒரு பாரபட்சமான முன்முடிவோடுதான் அணுகுவார்கள். அது அவர்களின் வாழ்க்கையில் கடந்துவந்த அனுபவங்கள் சார்ந்தும், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அமையும். நீதிபதிகளும் இந்த நிலையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்லர்.

பரிவுணர்வின் அடிப்படை:

  • “பரிவுணர்வு என்பது வாழ்வின் மிக முக்கியமான கூறு. அதுதான் அடுத்தவர்களின் துயரத்தை எண்ணிப் பார்க்கவைக்கிறது” என்கிறார் தலாய் லாமா. “மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஓர் உருவ அமைப்பு, சிந்திக்கும் திறன், உணர்வுகள் உள்ளன. நாம் பிறப்பால் ஒத்தவர்களாக இருக்கிறோம். இறப்பிலும் அப்படித்தான். நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே தேவையானதாக இருக்கிறது.
  • வருத்தங்களையும் வலிகளையும் நாம் வேண்டுவதில்லை. இந்தப் படிநிலையில் இருந்து பார்த்தால், நம்மிடையே வேறுபாடுகளாக அமைந்த ‘நான் திபெத்தியன். நான் வேறு நிறத்தில் இருக்கிறேன்.
  • என்னுடைய மதம் வேறு; நான் வளர்ந்த கலாச்சாரப் பின்னணி வேறு’ என்பது குறித்துச் சிந்திக்காமல் மனிதர்களாகிய நம்முடைய ஒத்த உணர்வுகளை, அனைவரும் உணர்வு உடையவர்களாக, என்னிலிருந்து வேறுபடாதவர்களாகப் பார்க்கிறேன். ஒருவருக்கு ஒருவர் இப்படிப் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்வது, உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதையும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதையும் மிக சுலபமாக்கிவிடுகிறது” என்கிறார் தலாய் லாமா.
  • பரிவுணர்வு என்கிற வார்த்தையைப் புரிந்துகொள்ள இதைவிட மிக எளிதான ஒரு வழி எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு தனி மனிதனும் பரிவுணர்வு என்கிற இயல்பைத் தன்னகத்தே பெற்றிருக்காத வரையில், அவர் ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியாது. ஒரு நல்ல மனிதனாக என்ன நம்மிடம் இருக்கிறதோ அதுதான் ஒரு நீதிபதியாகவும் பிரதிபலிக்கும்.
  • நம்மைவிட வேறுபட்டுப் பல்வேறு விதமாக ஒடுக்கப்பட்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நமக்குத் தெரிவதே இல்லை. எனக்கு வழங்கப்பட்டிருக்கிற சிறப்புச் சலுகைகள் என் கண்ணை மறைக்கும். தாமஸ் நாகல் தனது ‘What is it to be a Bat?’ என்கிற கட்டுரையில் கூறியது இங்கு நினைவுக்கு வருகிறது.
  • ‘நீங்கள் மற்றொரு நபராக இருப்பது எப்படி என்பதை அறிய எந்த வழியும் இல்லை. ஆனாலும் நாம் முயற்சி செய்யாமல் இருப்பதைவிடப் பரிவுணர்வுடன் இருக்க முயல்வது சிறந்தது. ஏனெனில், நாம் அன்றாடம் நம்முடைய வாழ்விலும் வேலையிலும் மனிதர்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அப்படி ஒடுக்கப்பட்டவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறபோது, அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிற முரண்தான் அந்தப் புரிதலின் மிக நுணுக்கமான படிநிலை.
  • அவர்களை முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியாது; உண்மையாகவும் புரிந்துகொள்ள முடியாது. நம்மோடு பணியாற்றுகிற சக ஊழியரின் பார்வையை, விருப்பத்தைப் புரிந்துகொள்வதில் நிலவும் முரண்பாடு, நேராக நடக்கிற மனிதர்களுக்கும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிற வௌவாலின் பார்வைக்கும் இருக்கிற முரண்பாட்டைவிடச் சிறியதாக இருக்கலாம். ஆனால், அந்த இடைவெளி இடைவெளிதான்.’
  • இந்த இடைவெளியைப் புரிந்துகொள்ள, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வௌவாலுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி பற்றிப் பேசிய தாமஸ் நாகல் இப்படியாகச் சொல்கிறார்: ‘நீங்கள் வௌவால்களின் உலகத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் வௌவாலாக இருந்தால் எப்படி இருப்பீர்கள் என்பது கேள்வி அல்ல; வௌவால்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதே சரியான கேள்வி.’
  • இதே அணுகுமுறைதான் பரிவுணர்வு காட்டப்பெறுவதிலும் மேலோங்கி நிற்க வேண்டும். பரிவுணர்வு என்பது அது நீங்களாக இருந்தால் எப்படி உணர்வீர்களோ, அதேபோல் கற்பனை செய்து வௌவால் வௌவாலாக இருந்தால் எப்படி இருக்கும் என்று உணர்வதுதான்.
  • வௌவால்களைப் பற்றிப் பேசும்போது மிக எளிதாகப் புரிந்துகொள்கிற இந்த விஷயத்தைத்தான் மனிதர்களோடு பழகுகிறபோது மிக எளிதாக நாம் மறந்துவிடுகிறோம். ஏனெனில், மனிதர்கள் நம்மையே ஒத்திருக்கிறார்கள். பிறரின் மன இயல்பு, மன ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதாகச் சமாதானம் செய்துகொள்கிறீர்கள்.
  • ஆனால், நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால், அவரவர்களுடைய அகநிலை அனுபவங்களை நாம் அவர்களாக இல்லாதபட்சத்தில் நம்மால் அளவிடவே முடியாது. இதைத்தான் ஹார்பர் லீ தன்னுடைய ‘To Kill a Mockingbird’ என்கிற புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
  • ‘அவரவர் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்காதவரை அந்த நபரை முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவரவர் கண்ணோட்டத்தைப் பார்ப்பது என்பது அவரின் உடம்புகளில் ஊடுருவி உணர்வுகளால் உள்ளார்ந்து நடப்பதற்குச் சமம்’. அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கிற உச்ச/ உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறு பின்புலத்தில் இருந்தும் வாழ்க்கை அனுபவங்கள் கொண்டவர்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது தேவையாகிறது.
  • ஏனெனில், நாம் வாழ்கிற அமைப்பில் நச்சுக்கொடியாக வேரூன்றியுள்ள பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அரசமைப்பைச் சார்ந்த வழக்குகளைத் தீர்மானிக்கின்றபோது எதிரெதிரான உரிமைகளை நடுநிலையோடு பரிபாலனம் செய்ய வேண்டும். அவ்வகையான நீதி பரிபாலனத்தில் அந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர்களின் அகமதிப்பும் அனுபவங்களும் பெரும் காரணிகளாகச் செயலாற்றும். இந்த இடத்தில்தான் பரிவுணர்வு என்பது முக்கியமான கூறாகும்.
  • நீதிபதிகள் பரிவுணர்வு என்கிற பக்குவ நிலையைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் தங்களின் நெடும் பயணத்தில் தாங்கள் கொண்டுள்ள சுயசார்பையும் பாரபட்சத்தையும் கண்டுணர்ந்து அவற்றிலிருந்து வெளிவந்து, தங்கள் முன்னால் உள்ள வழக்கு தொடுத்தவர்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வை வழங்க உதவும்.
  • வழக்கு தொடுத்தவர்களின் பிரச்சினைகளை அவர்களுடைய பார்வையில் இருந்து கண்டுணர்ந்து, பரிவுணர்வோடு அணுகாதவரை தங்களுடைய குறைகளுக்குத் தீர்வு காண வேண்டி நீதி பரிபாலன அமைப்பை நாடுகிற மக்களுக்கு நாம் கெடுதியே செய்கிறோம். இந்தப் பரிவுணர்வு என்கிற குணநலம் நீதிபதிகளிடம் இல்லாமல் போகும் என்றால், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வழக்குகளின் தீர்வுகளை எழுதுவதற்கான காரணங்கள் வலுப்பெறும்.
  • பரிவுணர்வு என்கிற பக்குவ நிலையை நீதிபதிகள் வளர்த்துக்கொள்கிறபோது, அவர்கள் நீதிபதிகளாக இருந்து செய்கிற செயல்பாட்டில் நன்மை விளைவிக்கக் கூடியவர்களாக மட்டும் அல்ல, அர்த்தமுள்ள மனிதர்களாகவும் மாறுகிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்