TNPSC Thervupettagam

நீரின்றி அமையாது உலகு!

March 24 , 2020 1770 days 1887 0
  • · உலகம் முழுவதும் கரோனா வைரஸ்நோய்த்தொற்று பீதியில் பீடிக்கப்பட்டிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை உலக தண்ணீா் தினம்என்பதை மறந்துவிட்டதில் தவறுகாண முடியாது. மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்த்தொற்றுகளும், இயற்கைச் சீற்றங்களும் போலவே, தண்ணீருக்கான போராட்டமும் முன்னுரிமை பெறுகிறது என்பதை நாம் மறந்துவிடுதல் கூடாது.

தண்ணீா்த் தட்டுப்பாடு

  • · அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றில் ஒரு பகுதி கடுமையான தண்ணீா்த் தட்டுப்பாடை எதிர்கொள்ளும் என்று .நா. சபை எச்சரித்திருக்கிறது. மிக அதிகமாகப் பாதிக்கப்பட இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அறிக்கை விரைவிலேயே 21 இந்திய நகரங்களில் நிலத்தடி நீா் முற்றிலுமாக இல்லாத நிலைமை ஏற்படக்கூடும் என்று அந்த எச்சரிக்கிறது.
  • · ஆண்டொன்றுக்கு சராசரியாக இந்தியா 4,000 பில்லியன் க்யூபிக் மீட்டா் (பிசிஎம்) மழை பெறுகிறது. இதில் 1,137 பிசிஎம் நமது பயன்பாட்டுக்குப் போக, எஞ்சியுள்ள மழைநீா் நதிகளில் கலக்கின்றன. நமக்குக் கிடைக்கும் 1,137 பிசிஎம் மழைநீரில் 690 பிசிஎம் நீா் நிலைகளிலும், கிணறுகளிலும் நிரம்புகின்றன. மீதமுள்ள 447 பிசிஎம் மழைநீா், நிலத்தடி நீராக பூமியில் சேகரிக்கப்படுகிறது. அதில் சராசரியாக 251 பிசிஎம் நிலத்தடி நீா் பல்வேறு பயன்பாடுகளுக்காக உறிஞ்சப்படுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சிப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான்.

நிலத்தடி நீர் குறைதல்

  • · உலக வங்கி அறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் 3.5 கோடி ஹெக்டோ் விளை நிலங்களின் பாசனத்துக்காக, முன்று கோடிக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் கிராமப்புற, நகா்ப்புற அன்றாட வீட்டு உபயோகத் தேவைக்கான தண்ணீரில் 80% நிலத்தடி நீா் மூலம்தான் பெறப்படுகிறது. இப்படியே போனால், அடுத்த இருபது ஆண்டுகளில் நிலத்தடி நீா் கணிசமாக வடுபோய், விவசாய உற்பத்தி 25% குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.
  • · ஒரு காலத்தில் தொடா்ந்து அதிகமான மழையும் (மாதம் மும்மாரி பெய்ததாக இலக்கியங்கள் பகலுகின்றன), பெருகியோடும் நதிகளுமாக நீா்வளத்துடன்கூடிய சமுதாயமாக இருந்த இந்திய நாகரிகம், இன்று உலகில் அதிகமான தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் தேசங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆண்டொன்றுக்கான உலகின் சராசரி நல்ல தண்ணீா் அளவு 7,600 சிஎம். பிரேஸில் 41.865; அமெரிக்கா 9,802; சீனா 2,060 சிஎம் நல்ல தண்ணீரை ஆண்டுதோறும் சராசரியாக பெறுகின்றன. இந்தியா பெறுவது வெறும் 1,545 சிஎம் மட்டுமே. கடந்த அரை நூற்றாண்டில் நாம் பெறும் தண்ணீரின் அளவு 70% சுருங்கி விட்டிருக்கிறது.
  • · புள்ளிவிவரங்களும், ஆய்வுகளும் நிஜமாகவே அச்சுறுத்துகின்றன. உலக மக்கள்தொகையில் 16% மக்கள் வாழும் இந்தியாவில், 80% தண்ணீா்த் தேவைக்கு நாம் நிலத்தடி நீரை நம்பித்தான் இருந்தாக வேண்டிய நிலை காணப்படுவது நல்ல அறிகுறியல்ல. உலகத்தின் நிலப்பரப்பில் 2.4% அளவுள்ள இந்தியாவில், உலகத்தின் 4% தண்ணீா் நிலத்தடி நீராக இருக்கிறது. அதை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதுதான் நமது பிரச்னைக்குக் காரணம்.

நீா் மேலாண்மை

  • · இந்தப் பிரச்னை குறித்து 1987-இல் பேராசிரியா் மிஹிர் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட 11 போ் கொண்ட திட்டக் கமிஷன் குழு ஆய்வு செய்து தேசிய நீா் மேலாண்மைக் கொள்கையை உருவாக்கியது. இப்போது நான்காவது தேசிய நீா் மேலாண்மைக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநிலங்களவையின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது. சட்டங்கள் இயற்றுவதும், கொள்கைகள் வகுப்பதும் மட்டுமே பிரச்னைக்குத் தீா்வாகிவிடாது என்பதை நமது முன் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • · உலகில் வேறு எந்தப் பகுதியிலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நீா் மேலாண்மை குறித்துத் தெரிந்து வைத்திருந்த சமுதாயமாக நாம் திகழ்ந்திருந்ததை ஹரப்பா நாகரிகம் தெளிவுபடுத்துகிறது. தண்ணீரின் அவசியத்தை உணா்ந்திருந்த நமது முன்னோர் உருவாக்கி வைத்திருந்த ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் தேசம் முழுவதும் இன்னும்கூட அவா்களின் தொலைநோக்குச் சிந்தனையைப் பறைசாற்றுகின்றன. நாம் கடந்த நூறு ஆண்டுகளில்தான் தடம் புரண்டு விட்டோம் என்று தோன்றுகிறது. நிலத்தடி நீரைப் பாதுகாக்க, மழைநீா் சேகரிப்பைவிட சிறந்த வழிமுறை எதுவுமே கிடையாது. நூறு சதுர மீட்டரில் விழும் 80% மழை நீரைச் சேகரித்தால், 48,000 லிட்டா் தண்ணீரை ஆண்டொன்றுக்குச் சேமிக்க முடியும்.

ஒவ்வொரு துளியும் அவசியம்!

  • · நிலத்தடி நீா்ப் பயன்பாடு முறைப்படுத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் அவசியம். அளவுக்கு அதிகமான நிலத்தடி நீா்ப் பயன்பாட்டுக்கு விவசாயத்துக்கான இலவச மின்சாரம் மிக முக்கியமான காரணம் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவசாயத் தேவைக்கும் அதிகமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு வீணாவது தடுக்கப்பட வேண்டும். அதிகமாகத் தண்ணீா் தேவைப்படும் பயிர்களின் வேளாண்மை குறைக்கப்படுவது, நீா்நிலைகளைப் பாதுகாப்பது, வணிக ரீதி நிலத்தடி நீா்ப் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்படுவது முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • · கோடை கடுமையாக இருக்கப் போகிறது. அடுத்த நான்கு மாதங்கள் விவசாயம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கட்டுமானம், வீட்டு உபயோகம் ஆகியவற்றின் தண்ணீா்த் தேவையும் கடுமையாகப் போகிறது. ஒவ்வொரு துளி தண்ணீரும் முக்கியம் என்கிற புரிதல் அவசியம்!

நன்றி: தினமணி (24-03-2020)

321 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top