TNPSC Thervupettagam

நீரிழிவு நெருக்கடிகள்: நாம் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறோம்?

November 22 , 2019 1833 days 833 0
  • இன்றைய தினம் இந்தியாவில் 7.7 கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. நீரிழிவுக்காரர்கள் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். உலகில் நீரிழிவு உள்ளவர்களில் ஆறு பேரில் ஒருவர் இந்தியர்.
  • தற்போது நடுத்தர வயதில் உள்ளவர்களில் 40% பேருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் நீரிழிவு வரக் காத்திருக்கிறது.
  • இதே நிலைமை நீடித்தால், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நீரிழிவுக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடுகிற ஆபத்தும் இருக்கிறது.

வழி தவறிய வாழ்க்கை முறை

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களும், பயண வசதிக்காக வாங்கப்பட்ட வாகனங்களும், அதிவேக நகரமயமாக்கலும் நம் உடலுழைப்பைக் குறைத்துவிட்டன. உணவுக் கலாச்சாரமும் மாறிவிட்டது.
  • மைதா, சர்க்கரை, உப்பு இந்த மூன்று வெள்ளை உணவுகளும், மிகைக் கொழுப்பும் கலந்த துரித உணவுகள் சிறுவர் முதல் பெரியவர் வரை அடிமைப்படுத்திவிட்டன.
  • வாழ்வதற்குப் பொருளீட்டுவது என்பது மாறி பொருளீட்டுவதே வாழ்க்கை என்றாகிவிட்டது. அதன் விளைவால், மன அமைதி காணாமல்போனது. மாணவர்களுக்கு அறத்தைக் கற்றுத்தர வேண்டிய வகுப்பறைகளோ தேர்வுச் சுமையைத் தூக்கச் சொல்லும் மடங்களாக மாறிவிட்டன.
  • படிப்படியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய் எனத் தொற்றாநோய்க் கூட்டத்துக்கு வழிவிட்டன. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறது நீரிழிவு. அது நமக்குத் தரும் ஆரோக்கிய நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல!
  • நீரிழிவு உள்ளவர்களில் 100-ல் 38 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 24 பேருக்கு விழித்திரை பாதிப்பு, 28 பேருக்கு புறநரம்பு பாதிப்பு, 11 பேருக்கு இதய பாதிப்பு, 6 பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு, 4 பேருக்குக் காலில் ரத்தக்குழாய் பாதிப்பு என நெருக்கடிப் பட்டியல் நீள்கிறது. இ
  • து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைச் சீரழிப்பதோடு, மனித வளத்தையும் உழைப்பையும் குறைத்து, வருமானத்தையும் இழக்க வைத்து ஒரு குடும்பத்தையே வீழ்த்திவிடுகிறது. இந்த எச்சரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும் நாம்தான் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை.
  • நீரிழிவால் ஏற்படும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும், இன்சுலினும் தேவைப்படும்; மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டியதும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியதும், வருடத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்பட வேண்டியதும் கட்டாயம்.
  • உலகளவில் எடுத்த கணக்கெடுப்பில் சுகாதாரத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10% நீரிழிவுக்காகவே செலவிடப்படுகிறது என்கிறது சர்வதேச நீரிழிவு நிறுவனம்.
  • இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி, நீரிழிவு உள்ள ஒருவர், தன் மாத வருமானத்தில் சராசரியாக 20% நீரிழிவு சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்கிறது.

யார் உண்மையான பணக்காரர்?

  • மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் ஒரு நபருக்கு நீரிழிவு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் முதல் 5 ஆண்டுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சமும், அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சமும் செலவாகும். ஆண்டுகள் கூடக்கூட நீரிழிவு உண்டாக்குகிற பாதிப்புகள் அதிகமாகும்.
  • சிகிச்சைக்காக அல்லாடும்போது ஏற்படுகிற வருமான இழப்பையும் சேர்த்தால் இன்னும் பல லட்சங்கள் கூடும். அதுமட்டுமல்லாமல், குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் குறைந்துவிடும். அதேநேரம், மாதம் ரூ.30,000 சம்பாதிக்கும் ஒருவருக்கு நீரிழிவு இல்லை என்றால் இந்த நெருக்கடிகள் ஏதுமில்லாமல் சுலபமாக வாழ்க்கை நடத்த அவரால் முடியும். இப்போது சொல்லுங்கள், யார் உண்மையான பணக்காரர்?
  • நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் இனிப்பைத் தவிர்ப்பது, துரித உணவைப் புறந்தள்ளுவது உள்ளிட்ட சின்னச் சின்ன உணவு அக்கறைகள், தொடர் சிகிச்சைகள், ஆரோக்கிய வாழ்க்கை முறை போதும். இப்போது நீரிழிவு ஒரு கொள்ளை நோய்போல் ஏற்பட்டுவருவதால் அதற்கு மிகுந்த அக்கறையோடு நாம் முகங்கொடுக்க வேண்டும்.
  • மருத்துவக் கல்வியில் மாற்றம் வேண்டும். இளநிலைக் கல்வியில் நீரிழிவுக்கு எனத் தனிப்பாடமும் சிறப்புப் பயிற்சிகளும் கொண்டுவர வேண்டும். சிறப்பு நிபுணர்களிடம் சென்றால், செலவு அதிகம் ஆகும் எனப் பயந்தே பலரும் முறையாகச் சிகிச்சைக்கு வருவதில்லை.

உணவு அக்கறையே பிரதானம்

  • விழிப்புணர்வுப் பணிகள் பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும். காரணம், உடற்பருமனுள்ள சிறுவர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2017 ஜூலையில் வெளியான ஆய்வொன்று இந்தியாவில் 1.44 கோடிக் குழந்தைகளுக்கு உடற்பருமன் இருப்பதாகக் கூறுகிறது.
  • துரித உணவு, உடற்பருமன், நீரிழிவு இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பைப் பாடங்களில் கொண்டுவர வேண்டும். உடலுழைப்பு குறைந்துபோனதும், உடற்பயிற்சி இல்லாததும், செல்போன் மற்றும் தொலைக்காட்சிக்கு ஒப்புக்கொடுத்ததும் உடற்பருமனுக்கு வழிகொடுக்கின்றன. இதைப் பெற்றோர் முதலில் புரிந்துகொண்டு பிள்ளைகளை வழிநடத்த வேண்டும்.
  • சமீபத்தில், பள்ளி வளாகங்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு மிகுந்த உணவுப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்கும் வரைவு நெறிமுறையை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கியிருப்பது வரவேற்புக்குரியது.
  • இதுபோல் ஹோட்டல் உணவுகளில் இனிப்புக்கும் எண்ணெய்ப் பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு தேவை. பொதுமக்களுக்கு நடைப்பயிற்சிக்கென மாசில்லாத இடங்கள் ஒதுக்குவது, உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள், தியானக் கூடங்கள் அமைத்துத் தருவது குறித்து அரசு யோசிக்கலாம்.
  • நீரிழிவு தரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள அரசு உதவுவது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் என்ன செய்யப்போகிறோம்? உணவின் மீதான அக்கறை, உடல் எடையைப் பேணுவது, உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது... இவற்றால்தான் நீரிழிவுக்குத் தீர்வுகாண முடியும். ஆக, மீண்டுமொரு முறை அழுத்தமாகச் சொல்கிறேன்: உணவு விஷயத்தில் நாம் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (22-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்