TNPSC Thervupettagam

நீரிழிவு நோய் வராமல் தடுக்க

November 11 , 2023 426 days 329 0
  • இந்தியாவில் இல்லம்தோறும் அறியப்படும் நோயாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடிப் பேர் உள்ளனர் என்றும் 13 கோடிப் பேர் நீரிழிவு நோயை நோக்கிய பயணத்தில் தங்களையும் அறியாமல் வாழ்ந்துவருகின்றனர் என்றும் தெரிய வருகிறது. பின்னால் உள்ளவர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கை. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் நோயாளிகளாக மாறிவிடாமல் இருக்க, முதற்கட்டத் தடுப்பு நடவடிக்கையாக வாழ்க்கை முறை மாற்றத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினால் பெருமளவில் இந்நோயைத் தடுக்க வாய்ப்பு உண்டு.

ஆபத்துக் காரணிகள்

  • உடல் பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, பெண்களின் சினைப்பை நீர்க்கட்டி (பிசிஓடி), நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலைசெய்வது, வயது முதிர்வு, உடற்பயிற்சியற்ற நிலை, தவறான உணவு முறை, புகைப்பழக்கம், அதிகக் குடிப்பழக்கம், இன்சுலின் எதிர்ப்பு உணர்வு, மன அழுத்தம், ரத்த அழுத்தம், அடிக்கடி கர்ப்பம் அடைதல், தொடர் கருச்சிதைவு ஏற்படுதல், போதுமான மகப்பேறு காலப் பராமரிப்பற்ற நிலை போன்றவை நீரிழிவு நோய் ஏற்படக் காரணங்கள். இரண்டு கிலோவுக்குக் கீழ் அல்லது 4.5 கிலோவுக்கு அதிகமாகப் பிறந்த சிசுவுக்கும் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். குறிப்பிட்ட மரபணுக் காரணங்களால் (Epigenetics) டைப் 2 வகை நீரிழிவு ஏற்படக்கூடும். இவற்றில் தடுக்கக்கூடிய காரணிகளை ஆராய்ந்து அவற்றைத் தவிர்த்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. மரபியல் கூறுகளைத் தடுக்க வாய்ப்பில்லை என்றாலும் மரபணுச் சோதனைகள் மூலம் ஆபத்தை தவிர்க்கலாம்.

உடல் பருமன்

  • உடல் பருமன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புணர்வு ஏற்பட்டு அதனால் இன்சுலின் ஹார்மோனின் செயல் குன்றும். புகைப்பதாலும் இந்த ஹார்மோனின் செயல்திறன் பாதிக்கப்படும். உடல் பருமனைக் குறைப்பது, புகைப் பழக்கத்தைத் தவிர்ப்பது போன்றவை நீரிழிவு நோயை அகற்றுவதற்குச் சிறு முயற்சியே. தொடர் குடிப்பழக்கம் உடல் பருமனைக் கூட்டியும் கணையத்தைப் பாழ் செய்தும் கல்லீரலைச் சிறுமைப்படுத்தியும் நோயை உருவாக்கும். இக்காரணிகளை எளிதில் மாற்றியமைத்தால் நோய் ஏற்படச் சாத்தியமின்றிப் போகும்.
  • இடுப்பின் சுற்றளவு, தொப்பையின் அளவு கூடிக்கொண்டே சென்றால் இன்சுலின் செயல்திறன் குறைகிறது என்று அர்த்தம். இடுப்பின் சுற்றளவு, கீழ் விலா எலும்புகளுக்கும் இலியாக் என்கிற இடுப்பு எலும்பு முகடுக்கும் இடையில் அளவிடப்பட்டு ஆணுக்கு 94 செ.மீ.க்குக் கீழும் பெண்ணுக்கு 80 செ.மீ.க்குக் கீழும் இடுப்பின் சுற்றளவு இருந்தால் இந்நோயைத் தடுக்கலாம். இவ்வளவைவிட, இருபாலினருக்கும் இடுப்பின் சுற்றளவு கூடினால் நீரிழிவு பாதிப்பு ஏற்படக்கூடும்.

உடல் நிறை குறியீட்டெண்

  • உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index - BMI) என்பது ஒரு தனிநபரின் உடல் எடைக்கும் உயரத்துக்கும் இடையில் அமையும் விகித மதிப்பு. இந்த மதிப்பு கிலோகிராம்/மீட்டர் 2 அளவில் வெளியிடப்படுகிறது. உடல் நிறை குறியீட்டெண் 18.5இல் இருந்து 24.9க்குள் இருக்க வேண்டும். இந்நிலையில் நீரிழிவு நோயைத் தடுக்கச் சாத்தியகூறுகள் அதிகம். 30க்கும் அதிகமாக இருந்தால் ஆபத்துக் காரணியாகப் பார்க்கப்படும்.

வயது முதிர்வு

  • 40 ஆண்டுகளுக்கு முன் முதியவர்களை மட்டும் பாதித்துவந்த நீரிழிவு நோய் உலகமயமாதல், துரித வாழ்க்கை முறை, உளவியல் பாதிப்பு, உறக்கமற்ற உழைப்பு காரணமாகத் தற்போது அனைத்து வயதினரையும் பாதித்துவருகிறது. 60 வயதாகியும் நீரிழிவு நோய் வராமல் இருக்கும்பட்சத்தில், அந்நபர் எதிர்வரும் காலத்தில் முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகளைத் தொடர்ந்தால் இந்நோய் இறுதி வரை அவருக்கு வராமல் தடுக்கலாம்.

பின்லாந்து நாட்டின் ஆய்வறிக்கை

  • பின்லாந்தில் நடைபெற்ற நீரிழிவு நோய்த் தடுப்பு ஆராய்ச்சியில் நோயின் ஆபத்துக் காரணிகளைத் தவிர்த்துத் தீவிர வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொண்டுவந்தால், முதல்கட்ட நீரிழிவு நோயைத் தடுப்பது சாத்தியமே என்று ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. நீரிழிவு நோயைத் தடுக்க, உடல் பருமனை 5% குறைக்க வேண்டும். உணவில் கொழுப்பின் அளவு 30% தவிர்க்கவேண்டும். இதில் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) முழுவதுமாக இல்லாமலும், நிறைவுறா கொழுப்பு, (unsaturated fat) உணவில் இருக்குமாறும் பார்த்துகொள்ளவேண்டும்.
  • நார்சத்து ஒவ்வொரு 1000 கிலோ கலோரிக்கு 15 கிராம் சேர்க்கவேண்டும். இத்துடன் உடற்பயிர்ச்சி 30 நிமிடம் கடைபிடித்து வாழ்க்கையை மாற்றியமைத்தால் நீரிழிவு தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையில் மூன்று ஆண்டு காலம் கண்காணிக்கப்பட்டவருக்கு 58% நோய்த் தடுப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியின் முடிவாகும். மேலும், மெட்பார்மின் மருந்தை மருத்துவரின் கண்காணிப்பில் பயன்படுத்தும்போது நீரிழிவு நோய் தடுக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.

ஸ்டீராய்டு மருந்து தவிர்த்தல்

  • ஸ்டீராய்டு மருந்துகள் இருமுனை கூர் தீட்டப்பட்ட வாள். ஸ்டீராய்டு உயிர்காக்கும் அற்புத மருந்து. கண்காணிப்பு இல்லாமல் சிகிச்சை தொடரும்பட்சத்தில் இம்மருந்து பேராபத்தைத் தரும். போலி மருத்துவர்கள், மருந்தகங்கள், விவரமற்ற நோயாளிகள் சுயமருத்துவம் செய்துகொள்வதால் ஸ்டீராய்டு மாத்திரை பல நோய்களை உருவாக்கும். அவற்றில் ஒன்று நீரிழிவு நோய். இம்மருந்தை நிறுத்தினால் இதன் பின்விளைவினால் வந்த நீரிழிவு நோய் மறையும்.

திருமண முறை

  • குடும்பத்தில் முதல் நிலை, இரண்டாம் நிலை உறவுகளுக்குள் மணம் புரிந்துகொள்வதைத் தவிர்த்தால் பல மரபணு, பாரம்பரிய நோய்கள் தவிர்க்கப்படும். அகமணமுறை திருமணம் தவிர்த்துப் புறமணத் திருமணம் ஏற்பட்டால் மருத்துவரீதியில் பல நோய்கள் தடுக்கப்படும் என்பது அறிவியல் உண்மை. மேலும் உளவியல்ரீதியில் பயம், பதற்றம், மன அழுத்தம், கவலை, ஆவேசம் போன்றவற்றுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை பெற்று, எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து, நேர்மறை எண்ணத்தை வளர்த்து, ஆழ்ந்த உறக்கம் கொண்டால் நீரிழிவு நோய்க்கு விடை கொடுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்