TNPSC Thervupettagam

நீரிழிவு நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை

September 23 , 2023 462 days 296 0
  • உலக அளவில் மக்களை அதிகம் பாதிக்கும் தொற்றா நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், இந்தியா பி - 17 ஆகியவை இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பத்துக் கோடிப் பேருக்கு நீரிழிவு இருப்பதாகவும் 13 கோடிப் பேருக்கு ஆரம்ப நிலை நீரிழிவு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையைவிட 2 கோடி அதிகம். இதில் சுமார் 57 சதவீதத்தினருக்கு ஆரம்ப அறிகுறிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்

  • ஒருவருக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் அல்லது நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கு அலோபதி மருத்துவம் ஒரு புறம் இருக்க, சித்த மருத்துவம் வழியாகவும் இந்நோயைக் கட்டுப்படுத்த, குணப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
  • அதன் ஒரு பகுதியாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி இயக்ககம், சீட் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ‘நீரிழிவு நோயின் தாக்கமும் சித்த மருத்துவ மேலாண்மையும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை சென்னையில் நடத்தின. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 15% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு உறுப்பினரும் சித்த மருத்துவருமான கு. சிவராமனிடம் பேசினோம்.
  • “கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைப் போல நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிலும் மக்கள் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். கண்ணுக்குத் தெரியாத உடல்நலப் பாதிப்பு இது என்பதால் மக்கள் கட்டாயமாக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லையென்றால் மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும். சில நேரம் இறப்புகூட நேரலாம்.
  • பொதுவாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நீரிழிவு நோய்க்கான இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துமனைகளைகளில் சாமானிய மக்கள் தங்களது கைக்காசை செலவு செய்துதான் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நீரிழிவு நோய் இருக்குமானால் மாதம் 15,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த மருத்துவம்

  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே அலோபதி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது சித்த மருத்துவ சிகிச்சைக்கு மாறலாமா என்கிற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கூடுதலாகப் பாரம்பரிய மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அலோபதி சிகிச்சையைத் திடீரெனத் தாமாகவே நிறுத்திவிடக் கூடாது.
  • அலோபதி மருத்துவர், சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும், நீரிழிவு நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சைகளை மாற்றிக்கொள்ளலாம். இதை ஒருங்கிணைந்த மருத்துவம் என்று சொல்லலாம். சித்த மருத்துவத்தில் மருந்துகள் மட்டுமின்றி உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்தச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரையின் அளவு படிப்படியாகக் குறையும். அப்போதுதான் அலோபதி மருத்துவ சிகிச்சையை மெல்ல நிறுத்த முயலலாம்” என்றார்.

உணவுக் கட்டுப்பாடு

  • மருத்துவ சிகிச்சைகளைத் தவிர மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மருத்துவர் சிவராமன் விளக்கிச் சொன்னார். “ஆரம்ப நிலை நீரிழிவு நோய் இருப்பவர்கள் சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது உணவு முறை மாற்றப்படும். தினசரி உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும். எளிய மூலிகை மருந்துகளான ஆவாரம் கசாயம், நிலவேம்புக் கசாயம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
  • எனவே, ஆரம்ப நிலை நீரிழிவு நோய்க்குச் சித்த மருத்துவத்தை முதலில் நாடலாம். இந்த நிலையையும் எட்டாமல் இருக்க, குழந்தைப் பருவத்திலிருந்து இனிப்பின்மீது இருக்கும் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இனிப்பு என்றால் கொண்டாட்டம் என்கிற மனநிலையே நிலவுகிறது. இனிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இனிப்புப் பொருள்கள், பழங்களாகவே இருக்க வேண்டும்.
  • துரித உணவு, ஆரோக்கியமற்ற உணவைத் தவிர்க்க வேண்டும். அடுத்து உடல் உழைப்பைக் கூட்ட வேண்டும். அனைத்து வயதினரும் வியர்வை தரக்கூடிய உடற்பயிற்சி, நடைபயிற்சிகளை நாள்தோறும் செய்ய வேண்டும். உடலையும் உணவையும் ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்போதுமே நல்லது” என்றார்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்