TNPSC Thervupettagam

நீரும் வேளாண்மையும்

December 29 , 2020 1308 days 618 0
  • உலகின் கிராமப்புற ஏழைகளில் பெரும்பான்மையோரின் வாழ்வாதாரம் வேளாண்மையையே சார்ந்திருக்கிறது. சிலர் வேளாண்மையிலிருந்து நேரடியாகத் தங்கள் வருவாயைப் பெறுகின்றனர்; வேறு சிலரோ வேளாண்மையுடன் இணைந்த தொழில்களின் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.
  • வேளாண் உற்பத்திக்குத் தண்ணீர் மிகவும் அவசியம். அனைத்து நீருக்கும் மழையே முதன்மையான ஆதாரம். மழைப்பொழிவோ காலநேரத்திற்கேற்ப மாறுபடுகிறது; முன்னதாகக் கணிக்க முடியாததாகவும் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அதிக அளவில் பயிர் விளைச்சலைப் பெற விவசாயத்துக்குப் பாசனம்தான் உதவுகிறது. வேளாண் உற்பத்தியில் மிக முக்கியமானதும் விளைச்சலை அதிகரிப்பதென உறுதிசெய்யப்பட்டதுமான இடுபொருள் பாசனமே.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின்  தகவலின்படி, உலகின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 13 பில்லியன் ஹெக்டேர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் மொத்த விளைநிலம் என்பது சுமார் 1.4 பில்லியன் ஹெக்டேர்கள் மட்டுமே. இதிலும் சுமார் 17 விழுக்காடு நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றிருக்கிறது.
  • பாசனம் பெறும் நிலத்தில் ஏறத்தாழ 17.4 கோடி ஹெக்டேர்கள் பரப்பு, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளில் அமைந்திருக்கிறது (யூடெல்மேன், எம். 1994). பாசன வசதியுள்ள நிலங்களில் பெரும் பகுதி ஆசியாவில்தான் குவிந்திருக்கிறது. அதாவது 13.1 கோடி ஹெக்டேர்கள் அல்லது சுமார் 78 விழுக்காடு.
  • 1960களில், வேளாண் உற்பத்தியைப் பெருக்க உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் விளைச்சல் தரும் விதைகள், உரங்கள், பூச்சிகொல்லிகள் என்பன போன்ற மேம்படுத்தப்பட்ட இடுபொருள்களைத் தயாரிப்பதில் தங்கள் ஆய்வுகளை வேளாண் விஞ்ஞானிகள் திருப்பினர்.
  • விளைவு வெற்றிகரமாக இருந்தது; பல ஆசிய நாடுகள், உணவு தானியங்களை இறக்குமதி செய்துகொண்டி ருந்த நிலையிலிருந்து மாறி, உணவு தானிய விஷயத்தில் தன்னிறைவு நிலையை எட்டின. இந்த ஒட்டுமொத்த முயற்சியும் "பசுமைப் புரட்சி' என்றழைக்கப்பட்டது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் அரிசிதான் மிக முக்கியமான அடிப்படை உணவாக உண்ணப்படுகிறது.
  • உலக அளவில் 1408 கோடி ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் அரிசி உற்பத்தியில் தொண்ணூற்றி ஐந்து சதவீதம், வளர்ச்சி குறைந்த நாடுகளில், முதன்மையாக ஆசியாவில்தான் நடைபெறுகிறது.
  • உலகில் அரிசி உணவு உண்ணும் மக்கள்தொகை, ஆண்டுக்கு இரண்டு சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்து வருகிறது. 2025இல் பெருகிவிட்டிருக்கும் மக்கள்தொகையின் தேவையைச் சமாளிக்க, அரிசி உற்பத்தி எழுபது சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க வேண்டுமானால், பாசனப் பரப்பு இரு மடங்காக உயர வேண்டும்.
  • எதிர்கால உணவுத் தேவைகளைச் சமாளிப்பதற்கான உலகின் திறனைப் பொருத்த விஷயத்தில், பெரும் கவலையளிக்கக்கூடிய இரு தடைகள் நிலமும் தண்ணீரும்தான். பசுமைப் புரட்சிக் காலத்தில் உணவு உற்பத்தியின் பிரமாண்டமான வளர்ச்சியில் மிக முக்கியமான காரணியாக பாசன வசதிகளின் விரிவாக்கம் இருந்தது.
  • 1961இல் உலக அளவில் பாசன வசதி பெற்றிருந்த நிலத்தின் பரப்பு, 13.9 கோடி ஹெக்டேர்கள். 1998இல் பாசனவசதி பெற்ற பரப்பு, 27.1 கோடி ஹெக்டேர்களாக அதிகரித்திருந்தது. 1960களிலும், 1970களிலும் பாசனம் பெறும் பரப்பின் ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டு சதவீதத்துக்கும் கூடுதலாக இருந்தது.
  • பாசனம் பெறும் நிலப்பரப்பு பெருமளவில் அதிகரித்தது, ஆசியாவில், பெரும்பாலும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனாவில்தான். உலக அளவில், அனைத்து உணவு உற்பத்தியிலும் முப்பது சதவீதத்துக்கும் அதிகமானது, பாசனம் பெறும் பரப்பிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. ஆசியாவில் சுமார் அறுபது சதவீத உணவு உற்பத்தி, பாசனம் பெறும் பரப்பிலேயே விளைவிக்கப்படுகிறது.
  • ஆசியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதல் காரண மாக நகர்களின் எல்லை விரிவடைவதால் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன. உணவுப் பயிர்களிலிருந்து வணிக மற்றும் தோட்டப் பயிர் சாகுபடிக்கு மாறும் சாகுபடி மாற்றமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேகமான நகர்மயமாதல் காரணமாகவும் குடியிருப்புகள் பெருகுவதன் காரணமாகவும் பாசனப் பரப்பை விரிவாக்குவதற்கான நம்பிக்கையும் வேகமாகக் குறைந்துகொண்டிருக்கிறது.
  • இரண்டாவதாக, ஆனால் முக்கியமான, தடை தண்ணீர். தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதுதான், உணவுப் பாதுகாப்புக்கான முன்நிபந்தனை; ஆனால், தண்ணீர் தட்டுப்பாடானதொரு பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. பூமி, அதன் மேற்பரப்பில் மூன்றில் இரு பங்கு தண்ணீரால் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், இவை எல்லா வற்றையும் பயன்படுத்த முடியாது. தண்ணீரில் தொண்ணூற்றியேழு சதவீதம், உப்புத் தண்ணீராலான பெருங்கடல்கள்; 2.3 சதவீதம், துருவப் பகுதிகளிலும் மலை உச்சிகளிலும் ஐஸ் கட்டிகளாகவும் பனியாகவும் உறைந்திருக்கிறது. ஆக, உலகிலுள்ள தண்ணீரில் சுமார் 0.7 சதவீதம் மட்டுமே, பயன்படுத்தக்கூடியதாக, வீட்டு உபயோகத் துக்கு, தொழிற்சாலைக்கு மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது. இந்த அளவு அதிகரிக்கவும் அதிகரிக்காது; குறையவும் குறையாது. ஏனெனில், "நீரியல் சுழற்சி' கோட்பாட்டின்படி இந்தத் தண்ணீர் சுழன்று வருகிறது. இந்தத் தண்ணீர் அளவு, சமமான முறையில் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை.

நீர்வள ஆதாரங்களுக்கான பங்குதாரர்கள்

  • வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான். ஆனால், இந்த அடிப்படையான வளத்தின் அளவை எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதிகரிக்க இயலாது. மக்கள்தொகை அதிகரிக்கும்போது, ஒரு தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைகிறது.
  • இத்தகைய சூழ்நிலையில், வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்மயமாதல் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது; 2025இல் 2.5 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அப்போது, வளரும் நாடுகளில் மக்கள்தொகை யின் அளவில் அறுபது சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கி யிருப்பார்கள். இரண்டரைக் கோடி ஹெக்டேர்களுக்குப் பாசனம் செய்யத் தேவைப்படும் அளவுக்கு இவர்களுக்கும் தண்ணீர் தேவைப்படும்.
  • மாறிவரும் பொருளியல் கட்டமைப்பின் விலையே நகர்மயமாதல். தொழில் உற்பத்தி, நகர்சார்ந்ததாகிறது; உணவுக்கான ஒரு புதிய சந்தையையும் உருவாக்குகிறது. பாரம்பரியமாக, மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், வாழ்க்கைக்கான ஆதாரமாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர். பல நகர்ப்புறப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வருவாய்ப் பெருக்கமானது, உணவுக்கான கூடுதல் தேவையை உருவாக்கியுள்ளது.
  • வளர்ச்சியுறா நாடுகளின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், ஒரு சதவீதம் உயர்ந்தால், தானியப் பயன்பாட்டின் அளவு, பத்து கோடி டன்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; ஆனால், அது தண்ணீரைச் சார்ந்திருக்கிறது.
  • குளிரூட்டவும் பதப்படுத்தவும் சுத்தப்படுத்தவும் தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றவும் தொழில்கள் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. அணுமின் நிலையங்களும் அனல்மின் நிலையங்களும்தான் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்துபவை. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பெருமளவு தண்ணீர், மீண்டும் நீர் சுழற்சிக்கே திருப்பிவிடப்படுகிறது.
  • எனினும், தொழிற்சாலைக் கழிவு நீரிலுள்ள சாயங்கள், மீதியுள்ள நல்ல நீர்வள ஆதாரங்களை எப்போதும் மாசுபடுத்துகின்றன; பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தண்ணீரின் தொழிற்சாலைப் பயன்பாடானது, பல வளரும் நாடுகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாக என்ற நிலையிலிருந்து பெல்ஜியம், பின்லாந்து போன்ற நாடுகளில் எண்பத்தைந்து சதவீதம் வரை என வேறுபடுகிறது.
  • உலக அளவில், வேளாண் துறைதான் மிக அதிக அளவில் நல்ல (புதிய) தண்ணீரைப் பயன்படுத்துகிறது, சுமார் அறுபத்தொன்பது சதவீதம். பொருளாதார ரீதியில் முன்னேறிக் கொண்டிருந்த, ஒவ்வொருவரும் அதிக அளவில் உணவு உண்ணத் தொடங்கிய நிலையில் பெருகிய மக்கள்தொகையின் தேவைகளைச் சமாளிக்க, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், உலக அளவில், பாசனம் பெறும் நிலத்தின் பரப்பு இருமடங்கானது.
  • 1950க்கும் 1990க்கும் இடையில் பாசனம் பெறும் நிலத்தின் பரப்பு மீண்டும் இருமடங்கானது. இந்த விரிவாக்கம் தற்போது குறையத் தொடங்கிவிட்டது; ஏனெனில் பல நாடுகளில் அணைகள் கட்டுவதற்கு உகந்த இடங்கள் அனைத்திலும் அணைகள் கட்டப்பட்டுவிட்டன (இனி அணைகள் கட்டுவதற்கு தகுந்த இடங்கள் இல்லை).

தண்ணீரும் தகராறும்

  • இத்தகைய காரணங்களால், தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாக போட்டி போட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது போட்டியாளர்களிடையே மிக மோசமான தகராறை ஏற்படுத்தும். கிடைக்கக் கூடிய தண்ணீரின் அளவு பற்றிய குறிப்பிடத்தக்கதொரு பிரச்சினை என்னவென்றால் தன் எல்லைகளுக்கு வெளியிலிருந்து தோன்றிவரும் ஆறுகளில் வரும் (கிடைக்கும்) தண்ணீரில் எந்த அளவுக்கு ஒரு நாடு சார்ந்திருக்கலாம் என்பதே.
  • டான்யூப், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து, நைல் போன்ற ஆறுகள், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன. பிற நாடுகளிலிருந்து தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லும் தண்ணீரைச் சார்ந்திருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கான தேவைகள், அதனதன் கட்டுப்பாட்டில் இருப்பதை விடவும் அதிகரிக்கும்போது நீர்வள ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான தகராறுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
  • எதிர்காலத்தில், தட்டுப்பாடு மிகுந்த, மதிப்புமிக்கதொரு பொருளாகி, சண்டை சச்சரவுக்கும் அமைதி உருவாக்கத்துக்கும் மையப் பொருளாவதன் மூலம் எண்ணெய்யையும் தண்ணீர் மிஞ்சி விடும் எனப் பலர் எச்சரித்துள்ளனர்.
  • தண்ணீரைப் பெறுவதில் பெரியளவில் சமூகபொருளாதார காரணிகளின் தாக்கமும் இருக்கிறது. பல வளரும் நாடுகள், நீர்வள ஆதாரங்களை எடுத்துப் பயன் படுத்தத் தேவையான முதலீடும் தொழில்நுட்பமும் இல்லாதிருக் கின்றன.
  • ஒரு நாட்டுக்குள்ளேயேகூட, செல்வாக்கு மிக்க தொழில் அல்லது வேளாண் துறை, நீர்வள ஆதாரங்களில் தங்களுக்குரியதை விடவும் அதிகமான பங்கைக் கேட்கலாம். தண்ணீர் விநியோகம் வரை யறுக்கப்படும்போது, தாழ்நிலையிலுள்ள வறிய மக்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர்.
  • ஓர் ஆற்றுப்படுகையிலுள்ள பல்வேறு பங்கு தாரர்களுக்கு இடையிலான தகராறுகளால் தண்ணீரைப் பெறுவது மேலும் சிக்கலாகி விடுகிறது. தனிநபர்களிலிருந்து நாடுகள் வரையில் பல்வேறு நிலைகளில் இந்தத் தகராறுகள் ஏற்படுகின்றன.
  • இத்தகைய தகராறுகளும், வளர்ச்சியுடன் இணைந்ததொரு பகுதி என்கிற நிலையில், சிறந்த நீர்வள மேலாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சியைச் சமாளிக்கவும், தகராறுகளுக்கான அல்லது மோதல் களுக்கான வேர்களையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்துகொள்வது அவசியம்.

நன்றி: தினமணி (29-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்