TNPSC Thervupettagam

நீர்ப்பாசன வளர்ச்சிக்கு முன்னுரிமை வேண்டும்

July 20 , 2021 1108 days 492 0
  • புதிதாகப் பதவியேற்றுள்ள திமுக அரசு, விவசாயத் துறையில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காகத் தனி நிதிநிலை அறிக்கை மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தீட்டிவருகிறது.
  • விவசாய வளா்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ள நீா்ப்பாசனத்தின் வளா்ச்சி, தமிழ்நாட்டில் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதால், அதற்கு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய நிலை

  • தமிழ்நாடு நீா்ப்பாசனப் பரப்பளவில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக அறுபது, எழுபதுகளில் விளங்கியது.
  • 1960-63களின் சராசரிப் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவில் ஏறக்குறைய 11% தமிழ்நாடு பெற்றிருந்தது.
  • ஆனால், நீா்ப்பாசன வளா்ச்சிக்கு முறையான முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், தமிழ்நாட்டின் பங்கு தொடா்ந்து குறைந்து, தற்போது (2014-17) வெறும் 3.40% உள்ளது.
  • மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவிலும் வளா்ச்சி பெறாத மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. உதாரணமாக, 1960-63களில் சராசரியாக 32.46 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் நீா்ப்பாசனப் பரப்பளவு, தற்போது (2014-17) ஏறக்குறைய அதே அளவில் (32.71 லட்சம் ஹெக்டேர்) உள்ளது.
  • இதே காலகட்டத்தில், நமது அண்டை மாநிலமான கா்நாடகத்தில் நீா்ப்பாசனப் பரப்பளவு வெறும் 9.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 லட்சம் ஹெக்டேராகவும், ஆந்திரத்தில் 36.66 லட்சம் ஹெக்டேரிலிருந்து 61.93 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது.
  • 1960-61 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில், மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவின் வளா்ச்சி விகிதத்தில் தொய்வு ஏற்பட்டுள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
  • வடமாநிலங்கள் பெரும்பாலும், கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசனத்தை முற்றிலுமாக நம்பியுள்ளன.
  • ஆனால், தமிழ்நாட்டில் குளம், கால்வாய், நிலத்தடி நீர் ஆகிய மூன்று ஆதாரங்கள் மூலமாகப் பல காலமாக நீர்ப்பாசனம் நடைபெற்றுவருகிறது.
  • இதில் குளம், கால்வாய் மூலமாகச் செய்யப்படும் பாசனப் பரப்பளவு கடுமையாகக் குறைந்துள்ளது.
  • அறுபதுகளில் 9.03 லட்சம் ஹெக்டேராக இருந்த கால்வாய்ப் பாசனப் பரப்பளவு, 6.22 லட்சம் ஹெக்டேராகத் தற்போது (2014-17) குறைந்துள்ளது. இதே போன்று, குளப் பாசனப் பரப்பளவு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீா்ப்பாசனத்துக்கு உயிர்நாடியாக உள்ள நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு 6.02 லட்சம் ஹெக்டேரிலிருந்து 16.53 லட்சம் ஹெக்டேராக இதே காலகட்டத்தில் பெரிய வளர்ச்சியைப் பெற்றபோதிலும், குளம், கால்வாய் நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை அதனால் ஈடுசெய்ய முடியவில்லை.
  • தற்போது நிலத்தடி நீா் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவின் வளர்ச்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குறைய வாய்ப்புள்ளது.
  • ஏனெனில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,139 வட்டங்களில் பெரும்பாலான வட்டங்களில் நிலத்தடி நீர், அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதாக எச்சரித்துள்ளது.

விளைவுகள்

  • குளம், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருவதாலும், மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் வளர்ச்சி இல்லாத காரணத்தாலும், தமிழ்நாட்டின் விவசாயத் துறையில் விரும்பத்தகாத மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன.
  • முதலாவதாக, 1970-71ல் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த நிகர சாகுபடிப் பரப்பளவானது 2018-19ல் 45.82 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதாவது, கடந்த 48 ஆண்டுகளில், மொத்தமாக 15.87 லட்சம் நிகர சாகுபடிப் பரப்பளவை தமிழ்நாடு இழந்துள்ளது.
  • இந்த அளவு குறைவு மற்ற பெரிய மாநிலங்களில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே? இரண்டாவதாக ஏற்பட்டுள்ள விளைவு, மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தரிசுநிலப் பரப்பளவானது 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 29.78 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தரிசுநில அதிகரிப்பானது (108.66%) மொத்த இந்தியாவில் (36.38%) ஏற்பட்டுள்ள அதிகரிப்பைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது. மூன்றாவதாக, குறைவான செலவில் கிடைக்கக்கூடிய குளம் மற்றும் கால்வாய் நீர்ப்பாசனக் குறைவால், அதிக செலவுள்ள நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்வதால், விவசாயிகளின் வருமானம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
  • 2016-17-ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கள ஆய்வின்படி, தமிழ்நாட்டு விவசாயிகளின் சராசரி மாத வருமானம் வெறும் ரூ.9,975. இது பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

தேவையான நடவடிக்கைகள்

  • நீர்ப்பாசனம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கும் முக்கியக் காரணியாக உள்ளது என உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
  • நீர்ப்பாசனக் குறைவால் உணவு உற்பத்தி குறைவதோடு, கிராமங்களில் வேலையிழப்பு ஏற்பட்டு, கிராம மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு அதிதீவிரக் கவனம் செலுத்தி, நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதலில், மத்திய நீர்வாரியத்தின் மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் மொத்தமாகப் பயன்படுத்தக் கூடிய நீர்ப்பாசனப் பரப்பளவு 55.32 லட்சம் ஹெக்டேராகும், இதில் தற்போது 32.71 லட்சம் ஹெக்டேர் மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
  • அதாவது, சாத்தியமுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில், ஏறக்குறைய 41% பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நீர்ப்பாசனப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இரண்டாவதாக, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 41,127 குளங்களில் நீர்க் கொள்ளளவு 347 டிஎம்சி, இது தமிழ்நாட்டின் எல்லா அணைகளின் மொத்த நீர்க் கொள்ளளவைவிட அதிகம்.
  • ஆனால், கடந்த 54 ஆண்டுகளில் பெரும்பாலான குளப் பாசனப் பரப்பளவை இழந்து விட்டோம். நீா்வளத்துக்கான ஒன்றிய அரசின் நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில், அளவு கடந்த ஆக்கிரமிப்புகளாலும், சரியான பராமரிப்பு இன்மையாலும், குளப் பாசனம் குறைந்து வருகிறது எனக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
  • பொதுப்பணித் துறையிடமிருந்து குளங்களைப் பிரித்தெடுத்து, குளங்களுக்கான தனி மேலாண்மை வாரியம் அமைத்து, குளப் பாசனப் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.
  • மூன்று, தற்போதுள்ள நிகர நீர்ப்பாசனப் பரப்பளவான 26.48 லட்சம் ஹெக்டேரில், ஏறக்குறைய 63% பரப்பளவானது நிலத்தடி நீர் மூலம் பாசனம் பெறுகிறது.
  • கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலத்தடி நீரின் ஆதிக்கம் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் அதிகம். ஆனால், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரப்படி, 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80%-க்கும் மேலாக உறிஞ்சப்படுவதாகக் கணக்கிட்டுள்ளது. இது தொடர்ந்தால், நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு எதிர்காலத்தில் மேலும் குறையக்கூடும்.
  • எனவே, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை வரைமுறைப்படுத்துவதோடு, இப்பகுதிகளில் தண்ணீர்த் தேவையைக் குறைக்கக்கூடிய சொட்டு நீர்ப்பாசன முறையைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
  • கட்டாயமாக, 10 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் உள்ள பெரிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்துவதன் மூலம், நிலத்தடி நீா்ச் சுரண்டலைக் குறைக்க முடியும்.
  • நான்கு, நீர்க் கணக்கீட்டு முறையை, கால்வாய்ப் பாசனத்தில் கொண்டுவருவதன் மூலம், நீர்ப் பயன்பாட்டு முறை அதிகரித்து, நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிக்க முடியும் என மஹாராஷ்டிரம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • எனவே, தமிழ்நாட்டில் அனைத்துக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும், நீர்க் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.
  • ஐந்து, நீர்ப்பாசனத் துறையின் பொறுப்பேற்பை அதிகப்படுத்துவதற்கு, அரசுத் துறையைச் சாராத, நீர் மேலாண்மை நன்கு அறிந்த அறிஞர்களைக் கொண்டு நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதன் மூலம் நீர்ப்பாசன வளர்ச்சியை அதிகரித்து, தமிழ்நாட்டின் நீா்ப்பாசனத் துறையை இந்தியாவுக்கே ஓர் எடுத்துக்காட்டாகவும் உருவாக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்