நீர்ப்பாசன வளர்ச்சியில் தமிழ்நாடு ஏன் பின்தங்கியுள்ளது?
- இன்றைய சூழலில் நிரந்தர நீர்ப்பாசனம் இல்லாமல் பயிர் சாகுபடி செய்வது கடினம். நிலத்தின் பயன்பாட்டுத் திறன், பயிர் சாகுபடிச் செறிவு ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களின் உபயோகத்தை அதிகரித்து, பயிர்களின் மகசூலை அதிகரிப்பதற்கும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியம்.
- நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதம், வேலைவாய்ப்பை அதிகரித்து, கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கும் நீர்ப்பாசனம் பெரிதும் உதவுகிறது. இந்தியாவின் நீர்ப்பாசனப் பரப்பளவு தொடர்ந்து வளர்ச்சிபெறும் அதே வேளையில், தமிழ்நாட்டில் அதன் நிகர வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது. என்ன காரணம்?
உண்மை நிலவரம்:
- நீர்ப்பாசனப் பரப்பளவில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக அறுபது - எழுபதுகளில் தமிழ்நாடு விளங்கியது. 1960-61இல் இந்தியாவின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் ஏறக்குறைய 11.56 சதவீதத்தைத் தமிழ்நாடு வைத்திருந்தது. ஆனால், நீர்ப்பாசன வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைச் செய்து முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து, 2021-22இல் வெறும் 3.24%ஆக உள்ளது.
- ஒப்பீட்டு அளவில் மட்டுமல்லாமல், மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவிலும் எந்த ஒரு வளர்ச்சியும் பெறாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உதாரணமாக, 1960-61இல் 32.35 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் நீர்ப்பாசனப் பரப்பளவு, 2021-22இல் 38.94 லட்சம் ஹெக்டேராக மட்டுமே உயர்ந்துள்ளது.
- இதே காலக்கட்டத்தில், கர்நாடகத்தில் நீர்ப்பாசனப் பரப்பளவு வெறும் 9.77 லட்சம் ஹெக்டேரிலிருந்து 60.85 லட்சம் ஹெக்டேராகவும், ஆந்திரத்தில் 34.72 லட்சம் ஹெக்டேரிலிருந்து 95.03 லட்சம் ஹெக்டேராகவும் அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில், மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவின் வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியே காணாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!
- பெரும்பாலான வட மாநிலங்கள், கால்வாய் - நிலத்தடி நீர்ப்பாசனத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் குளம், கால்வாய், நிலத்தடிநீர் ஆகிய மூன்று ஆதாரங்கள் மூலமாகவே நீர்ப்பாசனம் பல காலமாக நடைபெற்றுவருகிறது. இதில் குளம், கால்வாய் மூலமாகச் செய்யப்படும் பாசனப் பரப்பளவு கடுமையாகக் குறைந்துள்ளது.
- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்ப்பாசனத்துக்கு உயிர்நாடியாக உள்ள நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு 5.98 லட்சம் ஹெக்டேரிலிருந்து 18.31 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி பெற்றபோதிலும், குளம் - கால்வாய் நீர்ப்பாசனத்தில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சியால் நீர்ப்பாசனப் பரப்பளவில் வளர்ச்சி ஏற்படவில்லை.
- இதே காலக்கட்டத்தில் கர்நாடகம், ஆந்திர மாநிலங்களும் குளத்துப் பாசனப் பரப்பில் வீழ்ச்சியைச் சந்தித்தன. இருந்தபோதிலும், கால்வாய் - நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவில் ஏற்பட்ட அதீத வளர்ச்சியால் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் பெரிய வளர்ச்சியை இம்மாநிலங்கள் அடைந்துவிட்டன.
- மேலும், மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் 2020இல் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,166 வட்டங்களில், 723 வட்டங்களில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.
- தமிழ்நாட்டின் விவசாயத் துறையில் பல விரும்பத்தகாத மாற்றங்கள் மேற்கண்ட அம்சங்கள் காரணமாக நடைபெற்றுள்ளன. ஒன்று, 1970-71இல் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த நிகர சாகுபடிப் பரப்பளவு, 2021-22இல் 49.09 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி நிகழவில்லை.
- இரண்டு, இக்காலக்கட்டத்தில், தரிசுநிலப் பரப்பளவானது 15.38 லட்சம் ஹெக்டேரிலிருந்து 26.64 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தரிசுநில அதிகரிப்பு (73.22%) மொத்த இந்தியாவில் (20.05%) ஏற்பட்டுள்ள அதிகரிப்பைவிட மிகவும் அதிகம்.
- மூன்று, குறைந்த செலவில் பெறக்கூடிய குளம், கால்வாய் நீர்ப்பாசன அளவு குறைவால், அதிகச் செலவு பிடிக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு பயிர் சாகுபடி செய்வதால், தமிழக விவசாயிகளின் வருமானம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. உதாரணமாக, தேசியப் புள்ளியியல் அலுவலகம் 2021இல் வெளியிட்டுள்ள இந்திய வேளாண் குடும்பங்கள் பற்றிய நிலை மதிப்பீடு 2018-19 அறிக்கையின்படி, பயிர் சாகுபடியில் வெறும் ரூ.2,129 மாத வருமானத்துடன் தமிழ்நாடு 23ஆவது இடத்தில் உள்ளது.
செய்ய வேண்டியவை:
- நீர்ப்பாசனக் குறைவு உணவு உற்பத்தியைக் குறைத்து, கிராமங்களில் வேலையிழப்பை ஏற்படுத்தி, கிராம மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வதாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்தால் உயர்ந்துவரும் நீர்த்தேவைகளைக் கருத்தில் கொண்டு, நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிக்கத் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- முதலாவதாக, மத்திய நீர் வாரியத்தின் மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டின் பயன்படுத்தக்கூடிய மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவு 55.32 லட்சம் ஹெக்டேர். இதில் ஏறக்குறைய 30% பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, நீர்ப்பாசனப் பயன்பாட்டுத் திறமையை அதிகரிக்க வேண்டும்.
- இரண்டாவதாக, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 41,127 குளங்களில் நீர்க் கொள்ளளவு 347 டிஎம்சி; இது தமிழ்நாட்டின் அனைத்து அணைகளின் மொத்த நீர்க்கொள்ளளவைவிட அதிகம். ஆனால், கடந்த 1960-61 முதல் 2021-22 வரையிலான காலக்கட்டத்தில் ஏறக்குறைய 5.26 லட்சம் குளத்துப் பாசனப் பரப்பளவு காணாமல் போய்விட்டது.
- மழைக் குறைவே இதற்குக் காரணம் எனச் சொல்வதில் உண்மையில்லை. நீர் வளத்துக்கான மத்திய அரசின் நிலைக்குழுவின் 16ஆவது அறிக்கையும், 2023இல் மத்திய நீர்வள அமைச்சகத்தால் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ள நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பும், அதிக ஆக்கிரமிப்புகளாலும், சரியான பராமரிப்பின்மையாலும், குளத்துப் பாசனம் குறைந்துவருவதாகக் கூறுகின்றன. குளங்களைப் பற்றிக் கவலை கொள்ளாத பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து குளங்களை எடுத்து, குளங்களுக்கான தனி மேலாண்மை வாரியம் அமைத்து, அவற்றின் பாசனப் பரப்பளவை அதிகரிக்கத் திட்டங்கள் தேவை.
தேவை சொட்டுநீர்ப் பாசனம்:
- தமிழ்நாட்டின் தற்போதைய நிகர நீர்ப்பாசனப் பரப்பளவான 29.25 லட்சம் ஹெக்டேரில், ஏறக்குறைய 63% நிலத்தடிநீர் மூலம் பாசனம் பெறுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, நிலத்தடி நீரின் பங்களிப்பு மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு கடுமையாகக் குறையக்கூடும். இதைத் தடுப்பதுடன், இப்பகுதிகளில் தண்ணீர்த் தேவையைக் குறைக்கச் சொட்டு - தெளிப்பு நீர்ப்பாசன முறையையும் கட்டாயப்படுத்த வேண்டும்.
- விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மின்சார நேர அளவை வரைமுறைப்படுத்துவதோடு, 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள பெரிய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்துவதன் மூலம், நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் குறைக்க முடியும்.
- பொதுவாக, கால்வாய்ப் பாசனத்தில் நீர்ப் பயன்பாட்டுத் திறன் மிகவும் குறைவு. நீர்க் கணக்கீட்டு முறையைக் கால்வாய்ப் பாசனத்தில் கொண்டுவருவதன் மூலம், நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரித்து, நீர்ப்பாசனப் பரப்பளவை உயர்த்த முடியும். அதிக அணைகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டின் அனைத்துக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும், நீர்க் கணக்கீட்டு முறையை அமல்படுத்தினால் பாசனப் பரப்பளவை அதிகரிக்க முடியும். நீர்ப்பாசனத் துறையின் பொறுப்புக்கூறலை அதிகப்படுத்துவதற்கு, அரசுத் துறையைச் சாராத, நீர் மேலாண்மை குறித்து நன்கு அறிந்த அறிஞர்களைக் கொண்டு நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது பலனளிக்கும்.
- நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் மண்ணரிப்பால், அணைகளில் வண்டல் மண் படிந்து, நீர்க் கொள்ளளவு குறைந்து, பாசனப் பரப்பளவு குறைவதாக மத்திய நீர்வாரியம் 2020இல் வெளியிட்ட நீர்த்தேக்கங்களின் வண்டல் மண் பற்றிய தொகுப்பு கூறியுள்ளது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள தமிழ்நாட்டில் அணைகள் - பிற நீர் ஆதாரங்களில் உள்ள வண்டல் மண்ணை அகற்ற சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
- நீர்ப்பாசன வளர்ச்சி குறைந்தால், அது விவசாயக் குடும்பங்களைப் பாதிக்கும்; வேளாண் பொருள்களின் உற்பத்தி குறைந்து, சந்தை விலை தாறுமாறாக உயர்ந்து, பணவீக்கத்தை ஏற்படுத்திவிடும். கொள்கை வகுப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 08 – 2024)