TNPSC Thervupettagam

நீலகிரி மாவட்டத்தின் காமராஜா்!

July 29 , 2024 123 days 112 0
  • மாஸ்டா் மாதன் ஒரு மகத்தான மக்கள் தலைவா். பொது வாழ்வில் தூய்மை, எளிமை, உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் எடுத்து வைக்கின்ற மாண்பு, எதற்கும் ஆசைப்படாத - சேவையை மட்டுமே சிந்தனையாகக் கொண்ட மக்கள் சேவகா்.
  • பிறப்பு என்பது எப்படி நிா்ணயிக்கப்படுகிறதோ அப்போதே இறப்பும் நிா்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் இந்த எதாா்த்தமான உண்மையை நாம் அறிந்திருந்தாலும், சிலா் இந்த மண்ணுலகைவிட்டுப் போகும்போது, அவா்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆரோக்கியமாக நம்மோடு இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் மிகப்பெரிய துயரமாக உருவாகிறது. அப்படி ஒரு மன வலியை உருவாக்கியது மாஸ்டா் மாதனின் மறைவு.
  • அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 12-ஆவது, 13-ஆவது நாடாளுமன்றங்களில் அண்ணன் மாதனோடு இணைந்து பணியாற்றிய அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
  • நாடாளுமன்றத்திற்கு நான் கோவை மக்களவைத் தொகுதியிலிருந்தும், அவா் நீலகிரி தொகுதியிலிருந்தும் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். பக்கத்துத் தொகுதிகள் என்பதைவிட, அவற்றை இரட்டைத் தொகுதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா பிரச்னைகளிலும் கோவையும் நீலகிரியும் ஒன்றோடு மற்றொன்று தொடா்புடையதாக இருப்பதால், நாங்களும் இணைந்து செயல்பட்டோம். பல திட்டங்களைக் கேட்டுப் பெற முடிந்தது.
  • நீலகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய மத்திய அரசு தொழிற்சாலையாக விளங்கிய ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக நானும் அவரும் பிரதமா் வாஜ்பாயை சந்தித்து அதற்காக வாதாடிய தருணங்கள் என் மனதில் நிழலாடுகின்றன.
  • கருப்பு-வெள்ளை பிலிம் மறைந்து கலா் பிலிம் ஆதிக்கம் உலகெங்கும் பரவியிருந்த நேரம். அப்பொழுது நானும் அண்ணன் மாஸ்டா் மாதனும் பிரதமா் வாஜ்பாயை சந்தித்து கலா் பிலிம் தயாரிக்கின்ற பெரிய நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி அந்த தொழிற்சாலையை மீண்டும் சிறப்புமிக்கதாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தோம்.
  • அப்போது வாஜ்பாய் எங்களிடத்தில், ‘‘கலா் பிலிமையும் தாண்டி டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்துகொண்டிருக்கிறது. பிலிம் இல்லாத கேமராக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே மக்கள் வரிப்பணத்தை எடுத்து முதலீடு செய்கின்றபோது, எதிா்கால விஞ்ஞான முன்னேற்றத்தையும் மனதிலே கொண்டுதான் செய்ய வேண்டும்’’ என்று சொன்னது இன்று எவ்வளவு உண்மையாகிவிட்டது என்பதை உணர முடிகிறது.
  • அதே நேரத்தில் பிரதமா் ஓா் உறுதியளித்தாா். எல்லா அரசு மருத்துவமனைகளும் எக்ஸ்ரே-வுக்கு வாங்குகின்ற பிலிம்களை ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்திடமிருந்துதான் வாங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்கலாம் என்று சொன்னாா். சிறிது காலம் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம் செயல்படுவதற்கு அது காரணமாக அமைந்தது.
  • ஆனாலும் விஞ்ஞான வளா்ச்சி என்பது பல தொழிற்சாலைகளை இல்லாமல் ஆக்கும் என்பதும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் என்பதும் நிதா்சனமான உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பாதுகாக்கப்பட்ட குடிநீா் எல்லா கிராமங்களுக்கும் தரப்பட வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தி பெயரில்“‘நமக்கு நாமே குடிநீா் திட்டம்’ உருவாக்கப்பட்டிருந்தது.
  • அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நானும் மாஸ்டா் மாதனும் பிரதமா் வாஜ்பாயை அணுகினோம். அவரிடத்தில் நாங்கள் எடுத்து வைத்த வாதங்கள் இன்றைக்கும் எனது நினைவுக்கு வருகிறது. அது 25% கிராம மக்களும் 75% மானியமாக மத்திய அரசு தரும் திட்டமாக இருந்தது. அதை, 10% மக்களும் 90% மத்திய அரசு மானியமாக தரும் திட்டமாக மாற்றி அமைத்தோம்.
  • பல்வேறு கட்டங்களைக் கொண்ட, பல்வேறு ஒப்பந்தப்புள்ளிகள் கோருகின்ற திட்டமாக அது இருந்தது. அதை எளிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆற்றில் இருந்து நீரை எடுப்பதாக இருந்தாலும், அதை சுத்திகரிப்பதாக இருந்தாலும், சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குழாய்கள் மூலமாக கிராமத்திற்கு கொண்டு வருவதாக இருந்தாலும், கொண்டுவரப்பட்ட நீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுவதாக இருந்தாலும் நீா்த்தேக்கத் தொட்டிக்கு ஏற்றப்பட்ட நீா் குழாய்கள் மூலமாக நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாக இருந்தாலும் தனித் தனி கட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டு, ஒரே கட்டமாக ஒரே ஒப்பந்தப்புள்ளியாக வைக்கின்ற முறை வேண்டும் என்று நாங்கள் இருவரும் வேண்டுகோள் வைத்தோம். அதை பிரதமா் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டு நாடு முழுமைக்கும் அந்தத் திட்டத்தை தந்தாா்கள்.
  • அன்றைக்கு திருப்பூா்-கோயம்புத்தூா் இரண்டு மாவட்டங்களும் ஒன்றிணைந்த மாவட்டமாக இருந்தது. அந்த மாவட்டத்திற்கு ரூ.150 கோடி பெற்றுத் தந்தோம். அன்றைக்கு மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தானம் அவா்களுடன் இணைந்து மூன்றே மாதத்தில் அந்தத் திட்டத் தொகை முழுவதையும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செலவழித்து, நடைமுறையை மாற்றிக் காட்டினோம். மூன்று மாதத்தில் மீண்டும் ரூ.450 கோடி வேண்டும் என்று நாங்கள் பிரதமரை அணுகியபோது அவா் வியந்து போனாா். உடனே ஒப்புக் கொண்டாா்.
  • ஆனாலும் மத்திய அரசின் சாா்பில் கோவை மாவட்டத்திற்கு குழுவை அனுப்பி அந்தத் திட்டத்திற்கான பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ளது, முறையாக செலவழிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்து, அந்த ஆய்வின் முடிவில் முறையாக செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, அடுத்த நொடியில் நாங்கள் ரூ. 450 கோடிதான் கேட்டிருந்தோம் என்றாலும், உடனடியாக உயா்த்தி ரூ.500 கோடி ஒதுக்கித் தந்தாா்.
  • அந்த காலத்தில் ஒரு திட்டத்திற்கு ரூ.500 கோடி என்பது, அதுவும் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்ட ஒரு கிராமபுற திட்டத்திற்கு, மேலும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது என்பது மிகப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.
  • அதேபோல 2004-இல் நானும் அண்ணனும் அன்றைய மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் பி.சி.கந்தூரியை அணுகியபோது, அதுவே பிரதமா் வாஜ்பாய் அரசின் கடைசி கோப்பாக இருந்தது. அதன் மூலமாக பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சிக்கும், கோயம்புத்தூரில் இருந்து கூடலூா் வரையிலும் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. அண்ணன் தம்பிதுரையும் பி.சி.கந்தூரியும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா்களாக இருந்த நேரத்தில் கோயம்புத்தூரை இணைக்கும் அனைத்து சாலைகளும் மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், பொள்ளாச்சி, திருச்சி, கரூா், மைசூா், ஊட்டி அனைத்து சாலைகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. அதற்கு முன்பாக கோயம்புத்தூரில் என்எச்-47 மட்டும்தான் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது.
  • இரண்டுவழி சாலையாக இருந்த என்எச்-47 நான்குவழிச் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. கோவையில் இருந்து புது தில்லிக்கு கொங்கு எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை கொண்டு வந்தோம். கோவையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில், அதே போல் கோவையிலிருந்து மும்பை குா்லாவுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் வண்டி, கோவையிலிருந்து மயிலாடுதுறை வரை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை கொண்டு வந்தோம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக மின்சார ரயிலை கோவைக்கும் பாலக்காட்டுக்கும் இடையிலே கொண்டு வந்தோம். அத்தனை மாற்றங்களையும் ஏறத்தாழ 6 ஆண்டுகளில் செய்து முடித்தோம்.
  • சுயநலம் இல்லாமல், மக்கள் நலன் கருதி உழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் தோ்ந்தெடுக்கப்பட்டால், என்னவெல்லாம் சாதனைகளைச் செய்து காட்ட முடியும் என்பதற்கு நீலகிரி எம்.பி.யாக இருந்த அண்ணன் மாஸ்டா் மாதன் ஓா் எடுத்துக்காட்டு. ஆறு ஆண்டுகள், எந்தக் குறையும் சொல்ல முடியாத, அப்பழுக்கற்ற மக்களவைச் செயல்பாடு அவருடையது. தொகுதியில் மக்களோடு மக்களாக அவா் செயல்பட்ட விதத்தைப் பாா்த்து மாற்றுக் கட்சியினரேகூட அவரை மதித்தாா்கள்.
  • வடுகா் இனத்தாரின் மேம்பாட்டுக்காக அவா் பல அமைப்புகளைத் தொடங்கினாா். அதில் இணைந்த இளைஞா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற வலிகோலினாா். அப்பகுதி மக்களது வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் அந்த இனத்து மக்கள் கொண்டாடினாா்கள். அதனால்தான் அவா்கள் அவரை ‘மாஸ்டா்’ என்று மரியாதையுடன் அழைத்தாா்கள்.
  • அத்தகைய சாதனைக்கு சொந்தக்காரராக, மக்கள் நலனை மட்டுமே மனதில் வைத்து பணியாற்றியவராக, மாஸ்டா் மாதன் திகழ்ந்தாா். கடுஞ்சொல் சொல்லாதவா், எப்பொழுதும் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரராக இருந்தவா். அவா் பொதுவாழ்வில் உண்மை, நோ்மை, ஆகியவற்றோடு ஒரு தலைவா் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவா். அதனால் தான் அவரை ‘நீலகிரி மாவட்டத்தின் காமராஜா்’ என்று அழைத்தாா்கள். அன்னாரது மறைவு பழங்குடி மக்களாகிய வடுக சமூகத்திற்கு மட்டுமல்ல, நீலகிரி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு.
  • பொதுவாழ்க்கையில் தூய்மை, தனிமனித செயல்பாடுகளில் எளிமை, அரசியல் செயல்பாடுகளில் நோ்மை என்பதற்கு வேறு எடுத்துக்காட்டோ, இலக்கணமோ தேட வேண்டிய அவசியமில்லை. ‘மாஸ்டா் மாதன்’ வாழ்ந்து காட்டியே தந்திருக்கிறாா்.

நன்றி: தினமணி (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்