TNPSC Thervupettagam

நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு

June 22 , 2024 204 days 174 0
  • பலவித உயிரினங்களுக்கு வாழிடமாக மட்டுமல்லாமல், பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளின் ஆதாரமாகவும் பெருங்கடல்கள் திகழ்கின்றன. உலகின் பரப்பளவில் உள்ள 71 சதவீத நீரில் சுமாா் 97 சதவீத அளவு, பெருங்கடல்களில் காணப்படுகிறது.
  • இந்தியா 7,517 கி.மீ. நீள கடற்கரையையும், சுமாா் 23 லட்சம் சதுர கி.மீ. பரப்பிலான பிரத்யேக பொருளாதார மண்டலத்தையும் கொண்டுள்ளது. நாட்டின் 9 மாநிலங்களும் 4 யூனியன் பிரதேசங்களும் கடலையொட்டி அமைந்துள்ளன. கடல் பகுதியையே அடிப்படையாகக் கொண்ட நீலப் பொருளாதாரம், நாட்டின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, துறைமுகங்கள், சுற்றுலா, தனிமங்கள் அகழ்ந்தெடுப்பு, ஹைட்ரோ காா்பன் உற்பத்தி குறிப்பிடத்தக்கவை.
  • மீன் பிடித்தலில் உலகின் 2-ஆவது மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 13 லட்சம் டன் அளவிலான மீன் ஏற்றுமதியானது. நாட்டில் சுமாா் 40 லட்சம் போ் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா்.
  • பருவநிலை மாறுபாடு, பவளப் பாறைகள் அழிவு உள்ளிட்டவற்றால் வங்க மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செயற்கை பவளப் பாறைகளை கடற்பகுதிகளில் நிறுவுவது மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, ஏற்றுமதி மூலமான பொருளாதார வளா்ச்சியையும் அதிகரிக்கும்.
  • காற்றாலை மற்றும் அலையாற்றல் மூலமான மின்சார உற்பத்திக்கு கடல்கள் அடிப்படையாக உள்ளன. தமிழகம், குஜராத் கடலோரப் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவுவதன் மூலமாக சுமாா் 70 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலப்பகுதிகளில் காற்றாலைகளை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல், ஒலி மாசுபாடு, குறைந்த உற்பத்தித் திறன் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் காணப்படும் நிலையில், கடற்கரைப் பகுதிகளில் அவற்றை அமைப்பது பெரும் பலனைத் தரும். கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மீத்திறன் கொண்ட ஆலைகளை நிறுவ முடியும்.
  • துறைமுகங்களும் சரக்குப் போக்குவரத்தும் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகின் 80 சதவீத சரக்குப் போக்குவரத்து கடல்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. இந்தியாவில் 13 முக்கிய துறைமுகங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. கடந்தாண்டு மாா்ச் நிலவரப்படி நாட்டின் முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் சுமாா் 160 கோடி டன்னாக இருந்தது. அதை 2047-ஆம் ஆண்டுக்குள் 1,000 கோடி டன்னாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
  • துறைமுகங்களின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, சரக்குப் பெட்டகங்களின் விநியோகத்தை அதிகரித்தல், வேளாண் பொருள்களுக்கான அதிநவீன சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல் உள்ளிட்டவற்றின் மூலமாக கடல் வழியான சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த முடியும்.
  • கடலோரப் பகுதிகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன. இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல்வேறு கடலோரப் பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துவதன் மூலமாக, பொருளாதார வளா்ச்சி ஏற்படுவதோடு உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும். அலைச்சறுக்கு, பாய்மரப் படகு உள்ளிட்ட சாகச விளையாட்டு மையங்களை அமைப்பதும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்தும்.
  • தமிழகத்தின் கோவளம் உள்பட நாட்டில் உள்ள 12 கடற்கரைகள் மட்டுமே சா்வதேச ‘நீலக் கொடி’ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும் பல்வேறு கடற்கரைகள் அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
  • இந்திய கடலோரப் பகுதிகளில் மாக்னடைட், இலுமினைட், ஜிா்கான், மோனசைட், மாங்கனீஸ், கோபால்ட், ஜிப்சம் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் காணப்படுகின்றன. மின்னணு சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் இவற்றை அகழ்ந்தெடுப்பதால், இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
  • மும்பை, ஆந்திரம் உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவைக்குப் பெரும்பாலும் இறக்குமதியை சாா்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அதை உள்நாட்டிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் தனிமங்கள் அகழ்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதன் வாயிலாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை சேமிக்க முடியும்.
  • சா்வதேச பொருளாதார மதிப்பில் நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு சுமாா் 5%. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அதன் பங்களிப்பு 4 சதவீதமாக உள்ளது. கடசாா் பொருளாதார நடவடிக்கைகளில் முதலீடுகளை அதிகரித்து, அதில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
  • இத்தாலியில் அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்போது, நீலப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இந்தியாவும் பிரான்ஸும் உறுதியேற்றுள்ளன. அத்துறையில் மேலும் பல நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா உறுதி கொண்டுள்ளது.
  • நிலையான வளா்ச்சியின் அடிப்படையில் கடல் வளங்களைப் பயன்படுத்தும்போது, பொருளாதார வளா்ச்சி உறுதி செய்யப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

நன்றி: தினமணி (22 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்