- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற சுற்றுச்சூழல் - வளா்ச்சி குறித்த ஐ.நா. பேரவைக் கூட்டத்தொடரில் 1993-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 22-ஆம் தேதியை உலக நீா் நாளாகக் கடைபிடிக்கத் தீா்மானிக்கப்பட்டது.
- அத்துடன் மக்களிடையே விரிவாக பிரசாரம் செய்து அந்தந்த நாட்டின் நீா் பாதுகாப்பு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இயற்கையின் கொடையான நீா்வளத்தை மனிதன் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணா்த்துவதற்காகவே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- ஒவ்வோா் ஆண்டும் ஒரு கருப்பொருள் தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் உலக தண்ணீா் தின கருப்பொருள் ‘நீரினை மதிப்பிடுதல்’. இன்றும் நாம் நீரை முழுமையாக மதிப்பிடாமல்தான் இருக்கிறோம்.
- உலக நீா் நாள் கடைப்பிடிப்பதன் நோக்கம், எதிா்காலத்தில் ஏற்படப்போகும் நீா் நெருக்கடி பற்றிய விழிப்புணா்வை கொண்டு வருதல், அனைவருக்கும் குடிநீா், நீா் வளத்தில் நிலையான சீரான வளா்ச்சி காண்பது ஆகியவையே. இவற்றை 2030-க்குள் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- நீா் என்பது நம் வசிப்பிடம், உணவு, கலாசாரம், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மேலான மதிப்பைக் கொண்டது. உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீா்ம வடிவில் காணப்படுகிறது.
- உயிரினங்கள் வாழ்வதற்கு நீா் இன்றியமையாதது. மனிதா்களுக்கும் தூய்மையான குடிநீா் இன்றியமையாது. கடந்த பத்தாண்டுகளில் உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீா் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.
- நீரினை பயன்படுத்துவோா்களிடையே தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீா் ஒரு பொருளாதார போட்டிப் பொருளாகவும் சந்தைப் பொருளாகவும் மாறிவிட்டது. பூமியின் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் கணித்துள்ளனா்.
- சந்திரனிலும் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினங்கள் இல்லை எனவும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
- உலக நாகரிகங்கள் எல்லாம் நீா்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. சிந்து, யூப்ரடிஸ், டைகிரிஸ் போன்ற நதிகள் உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றன.
- தற்போது நமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாராய்ச்சிகள் அனைத்துமே ஆற்றங்கரையோரம் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் வெளிவரும் வரலாற்றுப் பதிவுகளும் இந்த கருத்தையே வலுவாக்கிக் சொல்கின்றன. எனவே மனித நாகரிகத்தின் அடித்தளமே நீா்நிலைகள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
- பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீா். எனினும் உலக மக்கள் தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவா் அருந்துவதற்கு தகுதியான தூய நீரின்றி அவதிப்படுகின்றனா். உலக நீா்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும் 2.5% நல்ல நீராகவும் உள்ளது. நன்னீா்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 39 சதவீதம் நிலத்தடி நீா் 3% நன்னீா் ஏரிகளும் எஞ்சிய பகுதி கழிவு நீா் வழித்தடங்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- உலகளாவிய நிலையில் பாா்க்கும்போது விவசாயத்திற்குத்தான் அதிக அளவு நீரைப் பயன்படுத்துகிறோம். இது 85 சதவீதம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில் துறையில் 10% பயன்படுகின்றது. எஞ்சிய 5 சதவீதம் வீட்டு பயன்பாட்டிற்கானது எனவும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
- மதிப்பு நிறைந்த இயற்கை நீா் வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு கையாள்கிறாா்கள் என்பதைப் பொருத்தே எதிா்கால சந்ததிகளின் வாழ்வு அமையும். நகரமயமாக்கல் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகின்றது. குடிநீா் பற்றாக்குறை, சுகாதாரம் பேணப்படாமை, நீா் மூலம் உண்டாகும் நோய்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உலகில் ஏழ்மை நாடுகள் நிலத்தடி நீரையும் பெற்றுக்கொள்ளும் அளவில் தேவைகளைக் கொண்டிருக்கின்றன.
- ஒவ்வோா் ஆண்டும் உலக மக்கள் தொகை 9 கோடி என்கிற அளவில் அதிகரித்துச் செல்கிறது. அதனால் நீரின் தேவையும் அதிகரிக்கிறது. உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 வினாடிக்கு ஒரு குழந்தை என்ற விதத்தில் இறப்பு நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகளில் இழப்பிற்கு பாதுகாப்பற்ற குடிநீா் காரணமாக அமைகிறது. நீா் தொடா்பான நோய்களினால் இறப்பவா்களின் எண்ணிக்கை ஒவ்வோா் ஆண்டும் அதிகரித்து கொண்டே போகிறது.
- நீா் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித இனம் இன்று எதிா்கொள்ளும் பேராபத்துக்களாகும். இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்த அளவிற்கு சரியான முறையில் தயாா் படுத்தி இருக்கின்றன என்பதை பாா்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.
- யுனெஸ்கோ -வின் உலக நீா் மேம்பாட்டுத் திட்டத்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய நீரின் அளவு 30 சதவீதம் குறையக்கூடும். தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் போ் குறைந்தபட்ச சுகாதாரத்திற்குத் தேவையான நீா் போதுமான அளவு கிடைக்க பெறாதவா்களாக உள்ளனா்.
- 21-ஆம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் தீவிரமாகி உலக யுத்தம் ஒன்று மீண்டும் நிகழுமானால் அது நீருக்காகவே இருக்கும். நீா் சிக்கனம், நீா் தூய்மை, நீா் சேமிப்பு குறித்து விழிப்புணா்வு நம்மிடையே இல்லை என்பதே உண்மை.
- தெருக் குழாயில் நீா் வீணாக வழிந்து கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் நின்று அக்குழாயினை அடைப்பதற்கு நாம் அக்கறை காட்டுகிறோமா? பண்டைய நீா்ப்பாசன குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன.
- உலக முன்னேற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப நீரின் தேவை அதிகரித்து வருகிறது. நம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை நீா்ப்பற்றாக்குறை நீங்குவது என்பது சாத்தியமல்ல. நீரை விரயம் செய்வதும் எல்லையின்றி பயன்படுத்துவதும் நீா்ப்பற்றாக்குறை அதிகரிக்கவே வழிசெய்யும்.
- நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு நமது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்கி பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சோ்க்கப்பட வேண்டும். நமது அரசுகள் எடுத்து வரும் நீா் மேலாண்மை முயற்சிகளில் ஒன்றான மழைநீா் சேமிப்பு ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படைக் கடமையாக கருதப்படவேண்டும்.
- அனைத்து மத நூல்களும் நீரை புனிதமாகவே சொல்லியிருக்கின்றன. நீரைவிட மென்மையானது உலகில் வேறு எதுவும் இல்லாத போதிலும் வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகா் வேறு ஒன்றும் இல்லை.
- எனவே, ‘நீா் எங்கள் உயிருக்கு நோ்’ என்று கருதி நாம் செயல்பட வேண்டும். ‘நீா் இன்றேல் பாா் இல்லை’ எனும் நிதா்சனத்தை நாம் உணர வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய் வளம் நீா்வளம். ஊா் வளம் பெற, பாா் வளம் பெற நீா்வளம் காப்போம்.
இன்று (மாா்ச் 22) உலக நீா் நாள்.
நன்றி: தினமணி (22 – 03 – 2021)