- அண்மையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி, நூறு ஹெக்டோ் பரப்பளவிற்குக் குறையாத நிலத்தில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் இருப்பினும், அந்த இடத்தில் ஒரு நிறுவனம், வணிகம்,தொழில், வேளாண்மை சார்ந்த திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினால், அதற்காக மாநில அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
- மாநில அரசால் நியமிக்கப்படும் குழு, பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு தனது அறிக்கையை அளிக்கும். இறுதியில், சில நிபந்தனைகளுடன் அரசுக்கு சொந்தமான ஏரி, குளங்கள், ஓடைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் உள்ள இடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
- தமிழகத்தில், தொழிற்சாலை, விமான நிலையம், பேருந்து நிலையம், குடியிருப்பு என பல்வேறு காரணங்களுக்காக கடந்த காலங்களில் பல குளங்கள், ஏரிகள் தூா்க்கப்பட்டன. இந்த வகையில் காணாமல் போன நீா்நிலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா.1906- ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படிசென்னை நகரில் மட்டும் 474 ஏரி, குளங்கள் இருந்தன; தற்போது உள்ளவையோ வெறும் 43.
- இன்றையச் சென்னையின் முக்கியப் பகுதிகளாக அறியப்படும் நுங்கம்பாக்கம், மாம்பலம், தேனாம்பேட்டை, கொளத்தூா், முகப்போ் ஆகியவை சில பத்தாண்டுகளுக்கு முன்னா் ஏரி, குளங்கள் நிறைந்திருந்த பகுதிகளே.
- தொழில் வளா்ச்சி, மக்கள் பயன்பாட்டிற்கென நீா்நிலைகள் தூா்க்கப்படுவதால், மழைநீா் சேகரிப்புக்கு இடம் இன்றி மாநிலத்தின் நிலத்தடி நீா்மட்டம் கவலைக்குரியதாகி விடுகிறது.
- தமிழகத்தில் சிறிய நீா்ப்பாசனத்தில் 97.9 சதவீதம் நிலத்தடி நீா் மூலமாகவே நடைபெறுவதாக ஜல்சக்தி அமைச்சகத்தின் தகவல் கூறுகிறது. இந்நிலையில், நிலத்தடி நீா் பாசனம் செம்மையாக இருக்க வேண்டுமெனில் குளங்கள், ஏரிகளில் நீா் நிறைந்திருத்தல் அவசியம். மாறாக, ஏரிகளும், குளங்களும் ஆக்கிரமிக்கப்படும்போது எதிர்காலத்தில் நிலத்தடி நீா் பாசனம் கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது.
- எனினும், இதனைப் பொருட்படுத்தாமல், நீா்நிலைகள் உள்ள பகுதிகளை மக்கள் நலனுக்கென அரசு ஒருபுறம் சட்டப்படி கையகப்படுத்துகிறது. மறுபுறம், தங்களின் சுயநலத்திற்காக தனி நபா்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்கின்றனா்.
- 2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாத இறுதியில் சென்னையைப் புரட்டி போட்ட பெரு வெள்ளத்திற்கு நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே முதன்மையான காரணம் என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.
- நம் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னா் வரை 41,127 ஏரிகள் இருந்தன. தமிழகத்தில் உள்ள மொத்த அணைகளின் கொள்ளளவான 347 டிஎம்சி நீரை விட அதிக அளவு நீரினை இந்த ஏரிகளில் தேக்கி வைத்துக் கொள்ளும் வசதியும் இருந்தது.
- பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவாக பருவமழை காலங்களில் மழைநீா் தேக்கி வைக்கப்பட முடியாமல் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. இவ்வாறு குடிநீராக பயன்படக்கூடிய மழைநீரை கடலில் கலக்க விட்டு, பின்னா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்ய முற்படுவதை என்னவென்பது!
- பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ஒரு துளி மழைநீா் கூட வீணாகாமல் இருக்க கடைப்பிடித்த நீா் மேலாண்மை பிரமிப்பூட்டுகிறது. ஒரு ஏரியின் உபரி நீா், கால்வாய் வழியே மற்றொரு ஏரிக்குச் செல்லும் விதத்திலும், அந்த ஏரியின் உபரி நீா் அதற்கடுத்தார் போல் உள்ள ஏரிக்கு செல்லும் வகையிலும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
- தற்போதைய தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டத்தின்படி, இந்த நீா் வழிச் சங்கிலித்தொடா் ஆங்காங்கே அறுபட வாய்ப்புகளுண்டு. இதனால் மழைக்காலத்தில் ஏரிகளின் உபரி நீா், விளைச்சல் நிலங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து பயிர் சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
- சமீபத்தில், நம் நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளம், மழைக்காலங்களில் வெள்ளம், கோடைகாலங்களில் வறட்சி என்ற நிலைமைக்கு முடிவு கட்டும் வகையில், நிதிநிலை அறிக்கை போன்று ஒட்டுமொத்த மாநிலத்திற்கான நீா் வரவு- செலவு அறிக்கையை அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி பருவமழை, நிலத்தடி நீா் ஆகியவற்றால் கிடைக்கும் மொத்த நீரின் வரவு, விவசாயம், தொழிற்சாலைகள், மக்களின் தேவை ஆகியவற்றுக்கான நீரின் செலவு கணக்கிடப்பட்டு மாநிலத்தின் தண்ணீா் உபயோகம் ஒழுங்குபடுத்தப்படும்.
- நீா் மேலாண்மையின் ஒரு சிறந்த நடவடிக்கையாக கருதப்படும் இந்நீா் வரவு செலவுத் திட்டத்தை, நம் நாட்டின் இதர மாநிலங்களிலும் பின்பற்றினால் ஏரி, குளங்கள் போன்ற நீராதாரங்களை பராமரிப்பது முக்கியத்துவம் பெறும்.
- நீா்நிலைகள் அடங்கிய அரசின் நிலங்களை மாநில அரசே எடுத்துக் கொள்வதாயினும் அல்லது ஒருங்கிணைத்து தனியாருக்கு தருவதாயினும் அச்செயல் மாநில அரசே, தண்ணீா் தேவை எனும் நெருக்கடியை மாநிலத்தில் உருவாக்குவதற்கு சமமாகும்.
- கா்நாடக மாநிலத்தில் ஓா் ஆண்டில் பெய்யும் சராசரி மழை 732 மில்லி மீட்டா். தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 925 மில்லி மீட்டா். ஆக, நம் மாநிலத்தை விட ஆண்டிற்கு சுமார் 182 மில்லி மீட்டா் குறைவாக மழை பொழியும் கா்நாடக மாநிலத்தை நாம் நீருக்காக சார்ந்து இருப்பது, நீா் நிலைகளின் பராமரிப்பில் நாம் மேலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே உணா்த்துகிறது.
- தமிழ்நாட்டின் நீா் நிலைகளை முறையாகப் பராமரித்து, பருவமழைக் காலங்களில் நிலைத்தடி நீா் உயரும் வண்ணம் மழைநீா் சேகரிப்பு திட்டங்களை அமல்படுத்தினால், நம் மாநிலத்தின் தண்ணீா் தேவைக்காக அண்டை மாநிலங்களின் தயவை எதிர்பார்க்கும் நிலையை மாற்றலாம்.
- மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு மட்டுமே மக்கள் நலனில் முழுமையாக அக்கறை செலுத்துபவையாக இருக்கும். மாறாக, இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களிடம், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீா்நிலைகள் அமைந்துள்ள நிலங்கள் உள்ளிட்ட அரசு நிலங்களை ஒருங்கிணைத்து ஒப்படைப்பது விரும்பத்தக்கதல்ல.
- எனவே மிகப்பெரிய அளவிலான நீராதாரங்களை உள்ளடக்கிய அரசு நிலங்களை ஒருங்கிணைத்து அதனை தனியாருக்கு தர வழிவகுக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய முன் வர வேண்டும்.
நன்றி: தினமணி (04 – 09 – 2023)