- மத்திய நிதிநிலை அறிக்கையில் நுகர்வையும் உற்பத்தியையும் ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டங்கள் இல்லை என்று கூறியவர்களுக்குப் பதில் கூறும் வகையில், பொருளாதாரம் மீட்சி அடைவதற்கான அடையாளமாக ‘பசுந்தளிர்கள்’ வெளிப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார். அதில் தொழில் துறை உற்பத்தித் தரவும் ஒன்று. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் சுருங்கியிருந்த இது, நவம்பரில் 1.8% உயர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், அது டிசம்பர் மாதம் மீண்டும் 0.3% குறைந்துவிட்டதைக் கடந்த வாரம் வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.
அடிப்படைத் துறைகள்
- நிலக்கரி, கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உரங்கள், உருக்கு, சிமென்ட், மின் உற்பத்தி ஆகியவை பிற தொழில் துறைகளின் செயல்பாட்டுக்கான ‘அடிப்படைத் துறைகள்’. தொழில் துறை உற்பத்திக் குறியீட்டெண்ணில் இவை மட்டுமே 40% பங்கு வகிக்கின்றன. இந்தத் தொழில்களில் வளர்ச்சி டிசம்பர் மாதம் 1.3% ஆக இருந்தது. ஆனால், சரிவோ உற்பத்தித் துறையில்தான் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நிலைத்த நுகர்பொருட்கள் - நிலையற்ற நுகர்பொருட்கள் உற்பத்திப் பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளது.
- தொழில் துறையில் உற்பத்தி ஏற்பட்டிருந்தாலும் அது மாதவாரியாக மாறிக்கொண்டே இருக்கிறது. தொழில் துறை மீட்சி எல்லாத் தொழில்களிலும், எல்லாப் பகுதிகளிலும் சமமாக இல்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது. சீனாவில் ‘கோவிட்-19’ காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்ந்தால், இந்தியத் தொழில் துறை உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும்.
உற்பத்தி
- இந்தியத் தொழில் துறைகளின் உற்பத்திக்கான பல இடுபொருட்களும் துணைப் பொருட்களும் சீன ஆலைகளிலிருந்துதான் கிடைக்கின்றன. செல்பேசிகள், மோட்டார் வாகன உற்பத்தி ஆகிய துறைகளின் ஆலைகளில் கையிருப்பில் உள்ள குறைந்த இடுபொருட்கள், துணைப் பொருட்களைக் கொண்டு சில நாட்களுக்கு மட்டுமே உற்பத்திசெய்ய முடியும். சீனாவிலிருந்து அவை ஏற்றுமதியாகாவிட்டால் இங்கும் உற்பத்தியை நிறுத்த நேரும்.
- இதற்கிடையில், பணவீக்க விகிதமும் உயர்ந்துவருகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணும் (7.59%), மொத்த விலைக் குறியீட்டெண்ணும் (3.1%) ஒரே சமயத்தில் உயர்ந்துவருகின்றன. உணவுப் பண்டங்களின் விலை உயர்ந்ததால் இந்த அதிகரிப்பு. அடிப்படைப் பொருட்களின் விலையும் லேசாக உயர்ந்துவருகிறது. சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.144 உயர்ந்திருக்கிறது.
வட்டி வீதம்
- எனவே, வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என்று தெரிகிறது. முதலீட்டுத் தொகைக்கான வட்டி அதிகமாக இருப்பது மட்டுமே முதலீட்டாளர்களின் தயக்கத்துக்குக் காரணமல்ல. கடன் வாங்கி உற்பத்தி செய்தாலும் அதை விற்க முடியுமா, முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா என்பதுதான் தயக்கத்துக்குக் காரணம்.
- தொழில் துறையினர் முதலீடு செய்யத் தயங்குவதால், வங்கிகளிடம் கடன் கேட்பது குறைவாக இருக்கிறது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், பொருட்களை வாங்க நுகர்வோர் முன்வருவதில்லை. இனி, இந்தியப் பொருளாதாரம் மீட்சி பெறுவது நுகர்வோர் கைகளில்தான் இருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (28-02-2020)