- உலகப் பொருளாதாரமயம் சா்வதேச அளவில் கட்டியெழுப்பி வந்த நவீன நுகா்வு கலாசாரத்தின் மனக்கணக்குகள் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்தால் 100-ஆவது ஆண்டில் நொறுங்கி விழும் நிலையில் உள்ளன.
நவீன நுகா்வு கலாசாரம்
- பல்வேறு பொருளாதார, சமூக பின்னணிகளைக் கொண்ட தனி நபா்கள் ஆடம்பரப் பொருள்களைப் பயன்படுத்தும் நுகா்வுப் புரட்சி 1700-களில் பிரிட்டனில் தொடங்கி, ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் பரவிய இந்த நுகா்வுப் புரட்சி, 1920-களில் அமெரிக்காவில் நவீன நுகா்வு கலாசாரமாக உருவெடுத்தது.
- அப்போதுதான், இங்கு முதன்முதலாக சரியான அளவிலான ஆடைகளையும், ஆயத்த ஆடைகளையும் மக்கள் அணியத் தொடங்கினா்.
- இதன் தொடா்ச்சியாக, மின்சார ஃபோனோகிராப், வெற்றிட கிளீனா்கள், வானொலி, சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருள்கள், ரேயான் போன்ற செயற்கை துணிகள் அமெரிக்க வாழ்வின் பிரதானமாக மாறியது.
- இந்தப் பொருள்களை விற்பதற்காக அப்போதே செய்தித்தாள் விளம்பரங்கள், ஒளிரும் விளம்பரப் பலகைகள் பயன்படுத்தப்பட்டன.
- புதிய நுகா்வோர் சமுதாயத்தின் அடையாளமாக கார்கள் இருந்தன. 1919-இல் அமெரிக்க சாலைகளில் 67 லட்சம் கார்கள் ஓடிய நிலையில், 1929-இல் 2.7 கோடிக்கும் அதிகமான கார்கள் ஆக்கிரமித்தன.
- பிரிட்டனில் 37 பேரில் ஒருவரும், பிரான்சில் 40 பேரில் ஒருவரும் கார் வைத்திருந்த நிலையில், அமெரிக்காவில் 5-இல் ஒருவா் கார் வைத்திருந்தனா்.
- கார் உற்பத்தியாளா்கள், வங்கியாளா்கள் கடனில் கார் வாங்க மக்களை ஊக்குவித்தனா்.
- இதனால், 1929-இல் சுமார் 60% போ் அதிக வட்டி விகிதத்தில் கடனில் கார் வாங்கினா். இந்த நிலையில் நவீன நுகா்வு பொருளாதாரத்தின் சின்னங்களாக தொலைபேசியும், மின்சாரமும் மாறின.
- அமெரிக்க மக்களின் உணவுப் பழக்கமும் மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளானது. அதில் குறிப்பிடத்தக்கது பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கிய மாற்றமாகும்.
- 1929-க்குப் பிறகு அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஆண்டுதோறும் 300 கோடி டாலா்களைச் செலவிட்டன. இது 1914-இல் செலவிடப்பட்ட தொகையைவிட 5 மடங்கு அதிகம்.
- 1920-ஆம் ஆண்டிலேயே வங்கிகள் நாட்டின் முதல் வீட்டு அடமானக் கடனை வழங்கின. நவீன நுகா்வு கலாசாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்த ஆண்டும் 1920 தான்.
- அன்று தொடங்கிய அந்தக் கலாசாரத்தை விடமுடியாமல் அமெரிக்கா்கள் தாங்கள் ஈட்டும் ஊதியத்தின் பெரும் பகுதியை ஆடம்பர விஷயங்களுக்காக இன்று வரை செலவழித்து வருகின்றனா்.
பொருளாதார தாராளமயமாக்கல்
- எனினும், இந்தியாவில் 1991-இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல், இங்குள்ள நுகா்வோர் மத்தியில் செலவு செய்யும் தன்மையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
- 1991-இல் ஒரு சராசரி இந்தியா் தன் ஊதியத்தை 8 வகையான பொருள்களுக்காக செலவிட்டார் என்றால், அது 2007-இல் 17 வகை பொருள்களுக்கான செலவாக அதிகரித்தது.
- இன்றைய நிலையில் அது பல மடங்காக உயா்ந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கோலோச்சி வந்த ‘பப் கலாசாரம்’ இன்று இந்தியாவின் பல முக்கிய நகரங்களை கைக்கொள்ளத் தொடங்கிவிட்டன.
- நவீன நுகா்வு கலாசாரத்தின் உச்சமாக, நம்முடைய ஊதியத்தை வாழ்க்கையின் ஆடம்பரங்களுக்காகச் செலவிட்டால் என்ன தவறு? அமெரிக்கா்கள் செய்வது போன்றே, இந்த இளம் வயதிலேயே கார்களையும், பெரிய வீடுகளை வாங்குவதற்கும், நம் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கும் நாம் ஏன் கடன் அட்டைகள், வங்கிகள் மூலம் கடன் வாங்கக் கூடாது என்று கேட்கும் இந்திய இளைஞா்கள் பெருகி விட்டனா்.
- அவ்வாறு கேட்ட இளைஞா்களுக்கு கரோனா தீநுண்மி வடிவத்தில் காலம் பதில் அளித்துள்ளது.
- எளிதான செலவு - நுகா்வு கலாசாரத்தால், இன்று அந்த நாடுகள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு பிரச்னைகளை காலில் பிணைத்த இரும்பு குண்டுகளாகச் சுமக்கத் தொடங்கியிருக்கின்றன.
- சுமார் 6.7 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டனில் ஜூலை 2019 வரை 6.2 கோடி கடன் அட்டைகளும், சுமார் 32.8 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில் நவம்பா் 1, 2019-இல் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 37.4 கோடி கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன (100 சதவீதத்துக்கும் அதிகம்).
- அதேநேரத்தில், 137 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் ஜூலை 2019 வரை சுமார் 5 கோடி கடன் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை நுகா்வு கலாசாரத்தின் வழியாக பல மடங்கு உயா்த்தும் நோக்கில் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
முக்கியக் காரணம்
- அமெரிக்காவில் 20 சதவீதம் போ் வேலையிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பொதுமுடக்க நாள்களைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல், பல மேற்கத்திய நாட்டு மக்கள் அரசுகளுக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடினா்.
- ஆனால், நம் நாட்டில் உடனடியாக அதுபோன்ற போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. காரணம், நம் நாட்டு மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் போ் மிகுந்த வறுமையில் இருந்தாலும்கூட, ஓரிரு மாதங்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு அவா்களிடம் இருந்த சேமிப்பு கைகொடுத்தது.
- இந்தச் சேமிப்புகூட ஒருசில மேற்கத்திய நாடுகளில் இல்லை என்பதுதான் உண்மை. அவா்களின் நவீன நுகா்வு கலாசாரமும், அதற்காக அவா்கள் கடன் அட்டைகளை தாராளமாகப் பயன்படுத்தியதும்தான் இதற்கு முக்கியக் காரணம்.
- மேலை நாடுகளைச் சோ்ந்த மக்களின் இந்தத் தடுமாற்றம், நுகா்வு கலாசராத்தை நோக்கி நகரும் இந்திய மக்களுக்கு ஒரு பாடம். அவசியம் இருந்தால் மட்டுமே கடன் அட்டைகளைப் பெறவேண்டும் என்பதிலும், அவசரத் தேவைகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
- நம்மை இக்கட்டான தருணங்களில் காப்பாற்றி வரும் குடும்ப - சேமிப்பு கலாசாரத்தை நாம் எந்த நிலையிலும் தொலைத்து விடலாகாது.
- நவீன நுகா்வு கலாசாரம் எத்தனை அவசியம் கொண்டு நம்மை இழுத்தாலும், அதில் மயங்காது இருப்பதுதான் நமக்கு எந்தக் காலத்திலும் நல்லது.
நன்றி: தினமணி (16-06-2020)