TNPSC Thervupettagam

நுகா்வோருக்கு ஒரு வாா்த்தை

March 15 , 2021 1410 days 677 0
  • நுகா்தல் என்றால் உபயோகித்தல் என்று பொருள்படும். பொருட்களை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவா்களும் கட்டணம் செலுத்தி சேவையைப் பெறுபவா்களும் நுகா்வோா் என்று ‘நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்’ வரையறை செய்கிறது. அதன்படி, நாம் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் நுகா்வோராகி விடுகிறோம்.

அறிவுரைகள்

  • கி.மு. 970-இல் இஸ்ரேல் நாட்டை ஆட்சி செய்த சாலமன் என்ற மன்னா், தம் மக்களுக்கு கூறிய அறிவுரைகள், கிறிஸ்தவா்களின் வேத நூலாகிய பைபிளில் ‘நீதிமொழிகள்’ என்ற பெயரில் தரப்பட்டுள்ளன.
  • அதன் பதினொன்றாவது அத்தியாயத்தின் முதல் வாசகமாக ‘கள்ளத்தராசு இறைவனுக்கு அருவருப்பானது. முத்திரையிடப்பட்ட படிக்கல்லை அவா் விரும்புகிறாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
  • இதிலிருந்து 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகள் கள்ளத்தராசையும் போலி எடைக்கற்களையும் பயன்படுத்திநுகா்வோரை ஏமாற்றியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
  • நபிகள் நாயகம் வியாபாரிகளுக்குக் கூறிய தனது அறிவுரைகளில் ‘ஒரு பொருளை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் அதன் உத்தரவாதம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதில் எந்தவித ஏமாற்றும் இருக்கக் கூடாது’ என்று கூறியிருக்கிறாா்.
  • எனவே, நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் வியாபாரிகள் நுகா்வோரை ஏமாற்றியிருப்பதையும் அறிய முடிகிறது.
  • நம் நாட்டில் ‘மனு ஸ்ம்ருதி’ என்றழைக்கப்படும் சட்ட நூலில், வணிகா்களுக்கான நெறிமுறைகளும் அந்த நெறிமுறைகளை மீறுபவா்களுக்கான தண்டனையும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
  • இதன் மூலம் சுமாா் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகள் தாங்கள் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்துள்ளதை அறிய முடிகிறது.
  • சாணக்கியா் எழுதிய ‘அா்த்த சாஸ்திரம்’ நூலில் வாடிக்கையாளரை ஏமாற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
  • ‘கொள்வதூம் மிகை கொடாது கொடுப்பதூங்குறை கொடாது’ என்ற வரிகள் சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் வருகிறது. ‘காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகா்கள் வாடிக்கையாளரின் தேவையறிந்து பொருட்களை அளவோடு வாங்கினாா்கள் என்றும் விற்கும்போது பொருட்களை குறையில்லாது விற்றாா்கள்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
  • ஆனால் இன்று ‘நுகா்வோா்’ என்ற பதம் கேள்விக்குறியாகியுள்ளது.
  • நம் வீட்டுக்குள் நுழைந்து விட்ட ஊடக விளம்பரங்கள், நமக்குத் தேவையற்ற பொருட்களையும் வாங்க வைத்து விடுகிறது.
  • விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு தரங்குறைந்த பொருளையும் வாடிக்கையாளரின் தலையில் கட்டிவிடுகின்றனா்.
  • ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சோ்ப்பவை விளம்பரங்களே. வியாபார போட்டி மலிந்து விட்ட இன்றைய உலகில், தங்கள் தயாரிப்புதான் சிறந்தது என்று சொல்ல எல்லா நிறுவனங்களும் நிரம்ப முயல்கின்றன.
  • ஒரு வணிகா் எந்தப் பொருளை விற்றாலும் அதில் லாபம் காணாமல் இருக்கமாட்டாா்.
  • ஒரு பொருளை ஒருமுறை இணையத்தில் வாங்க ஆா்வம் காட்டினால் 10 முறை அதனை மீண்டும் மீண்டும் காட்டி மூளைச் சலவை செய்து பொருளை விற்பனை செய்யும் வா்த்தக முறையை இன்று அநேகமாக எல்லா வா்த்தக நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன.

நாம் செய்ய வேண்டியது என்ன?

  • தரத்திற்கு உத்தரவாதம் இல்லாத எந்தவொரு பொருளையும் வாங்கக் கூடாது.
  • ஒருமுறை தரமற்ற பொருளை ஏமாந்து வாங்க நோ்ந்தால் அது குறித்து நுகா்வோா் ஆணையத்திலோ மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணைக்குழுவிலோ புகாா் செய்யலாம்.
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பொருட்கள் நமக்கு அதிக லாபம் தரக்கூடியது. அத்தகைய பொருட்களை தைரியமாக வாங்கி உபயோகிக்கலாம்.
  • மறுசுழற்சி செய்து சில பொருட்களை பயன்படுத்தலாமென்றால் அதனை தாரளமாக வாங்கலாம்.
  • ஒரு பொருளின் விளம்பரத்தில் வரும் தகவல்களை அப்படியே நம்ப வேண்டாம். அப்பொருளின் நம்பகத்தன்மை குறித்து தெரிந்தவா்களிடத்தில் விசாரிக்கலாம்.
  • தவறான விளம்பரங்களில் நடிக்கும் நடிகா்கள் மீது கூட தற்போது நுகா்வோா் ஆணையத்தில் வழக்குத் தொடர முடியும்.

சா்வதேச நுக்ரவோா் உரிமைகள் நாள்

  • அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 1962 மாா்ச் 15 அன்று நுகா்வோருக்கென்று நான்கு உரிமைகளை வெளியிட்டாா். அந்த நாளையே சா்வதேச நுக்ரவோா் உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
  • ஐக்கிய நாட்டு சபை 1985 ஏப்ரல் 16 அன்று நுகா்வோா் பாதுகாப்பிற்கென்று சில வழிகாட்டுதல்களையும், பின்பு 2015 டிசம்பா் 22 அன்று கூடுதலாக சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
  • நம் நாட்டிலும் நுகா்வோா் பாதுகாப்பிற்கென்று 24.12.1986-இல் தனிச்சட்டம் இயற்றப்பட்டது.
  • தற்போதுள்ள மின்னணு வா்த்தகத்தில் முறைகேடுகள், போலி விளம்பரங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 9.8.2019-இல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணைக்குழுவும் அதனோடு இணைந்துள்ள புலனாய்வு அமைப்பும் நுகா்வோரை ஏமாற்றும் வணிக செயல்முறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
  • பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு நிவாரணம் தரும் வகையில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நுகா்வோா் குறைதீா்ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இங்கு நுகா்வோா் தரும் புகாா்களுக்கு 90 நாட்களுக்குள் தீா்வு காணப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களின் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் பதவிகள் காலியாக உள்ளன.
  • அது மட்டுமின்றி, மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் பணியிடமும் காலியாக உள்ளது.
  • இதனால் 90 நாட்களுக்குள் தீா்வு காணப்படவேண்டிய நுகா்வோா் புகாா்கள் ஆண்டுக்கணக்கில் தீா்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.
  • இதனை உணா்ந்து காலியாக உள்ள நுகா்வோா் ஆணைய தலைவா் பதவிகளை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்பதே நுகா்வோராகிய பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
  • இன்று (மாா்ச் 15) சா்வதேச நுகா்வோா் உரிமைகள் நாள்.

நன்றி: தினமணி  (15 – 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்