TNPSC Thervupettagam

நுரையீரல் அடைப்பது ஏன்?

June 23 , 2024 210 days 166 0
  • சிஓபிடி!
  • இந்த நான்கு எழுத்துச் சமாச்சாரத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • நீண்ட காலம் நீங்கள் புகைபிடிப்பவராக இருந்திருந்தால், அடிக்கடி மூச்சுத்திணறல் வந்து அவதிப்பட்டிருந்தால், கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு முட்டுகிறது என்றால், உங்கள் மருத்துவர் இந்த நான்கெழுத்துச் சமாச்சாரம் உங்களைப் பாதித்திருப்பதாகச் சொல்லியிருப்பார்.
  • ‘கிரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிசீஸ்’ (Chronic obstructive pulmonary disease). சாதாரணமாக வாய்க்குள் நுழைய மறுக்கும் ஒரு மருத்துவப் பெயர். அதனால்தான் சுருக்கமாக ‘சிஓபிடி’ (COPD) என்றேன். புரியும்படி தமிழில் சொன்னால், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு! 

ஆஸ்துமா வேஷம்!

  • ஆஸ்துமாபோலவே வேஷம் போடும் நோய் இது; அனுதினமும் சுவாசத்தைக் குறைத்து, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது; நம் நாட்டில் ஆண்டுதோறும் ஐந்தரைக் கோடிப் பேரை பாதிக்கிறது இந்த நோய். பத்து லட்சம் பேரை காவு வாங்குகிறது. இதில் கவலை தரும் விஷயம் என்னவென்றால், இந்த ஆபத்தை அநேகம் பேர் அறியாமல் இருப்பதுதான்.
  • இருமல், தும்மல், மூக்கொழுகலை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாதுதான். ஆனால், எப்போதும் வருகிற ஜலதோஷம், ஆஸ்துமா என்று இதைக் கடந்துவிட முடியாது. நாள்பட நாள்பட இந்தச் சளித் தொல்லை நுரையீரல்களை அடைத்துக்கொள்ளும் அளவுக்குக் கடுமையாகிவிடும். அதனால்தான் நமக்கு எச்சரிக்கை அவசியமாகிறது.
  • நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய அரிய நோயாக இந்த ‘சிஓபிடி’ இருந்தது. இப்போதோ இது சகலருக்கும் வரும் நோய்க் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது. காரணம், நாட்டில் மாசும் தூசும் கொண்டாடும் சுற்றுச்சூழல்!

எப்படி இது நம் உடலைப் பாதிக்கிறது?

  • அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், நம் ‘சுவாசத் தொழிற்சாலை’யைக் கொஞ்சம் அறிமுகம் செய்துவிடலாம்.
  • உடல் எனும் கோயிலுக்கு நுரையீரல்களே சுவாசக் கலசங்கள்; உடல் செல்களுக்குச் சக்தியைத் தரும் இரட்டை இயந்திரங்கள்; ஒவ்வொரு மூச்சின்போதும் அரை லிட்டர் காற்று உள்ளே போகிறது. ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் லிட்டர் காற்று இந்த இரட்டையர்களைச் சுற்றுகிறது; அந்தக் காற்றிலிருந்து 550 லிட்டர் ஆக்ஸிஜனை பிரித்து எடுத்து நம் உடலுக்குக் கொடுத்து 350 லிட்டர் கார்பன்-டை–ஆக்ஸைடை கழிவாக வெளியேற்றுகிறது.
  • ஒவ்வொரு காற்றுக் கலசத்திலும் கிட்டத்தட்ட 30 கோடி காற்றுக் கிடங்குகள் (Alveoli) உள்ளன. நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்று, காற்றுக் குழாயில் நுழைந்து மூச்சுக் குழாய், மூச்சுச் சிறுகுழல்கள் வழியாகக் காற்றுக் கிடங்குகளுக்கு வருகிறது. இங்குதான் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் பிரித்து எடுக்கப்பட்டு, 'வாயு பரிமாற்றம்’ நடக்கிறது.
  • ராணுவத்தினர் பதுங்குக் கிடங்குகளைப் பராமரிக்காவிட்டால், அங்கே முளைக்கும் அனாமத்து வேர்கள், கிடங்கையே மூடிவிடுமல்லவா? அதுபோலதான் ‘சிஓபிடி’ நோயிலும்  நடக்கிறது. சிகரெட் புகை, பீடிப் புகை, சுருட்டுப் புகை, குட்கா புகை, வாகனப் புகை, வத்திப் புகை, வேதிப் புகை, ஆலைப் புகை, சாலைப் புகை, அடுப்புப் புகை, கட்டுமானப் புகை, கனிமப் புகை என ஏகப்பட்ட ‘புகைத் தோட்டா’க்கள்  காற்றுக் கிடங்குகளில் பாய்ந்து அங்குள்ள செல்களைச் சுட்டுப் பொசுக்கிவிடுகின்றன.
  • அப்படிப் பொசுங்கிப்போன செல்களை எந்தச் சிகிச்சையிலும் சரிப்படுத்த முடியாது என்பது முதல் சோகம். இந்த ‘சூட்டிங்’கில் தப்பித்த செல்கள் நிரந்தரமாக வீங்கி, காற்றுக் கிடங்குகளை அடைத்துக் கொள்வது அடுத்த சோகம். இதைத் தொடர்ந்து, மூச்சு சிறுகுழல்கள் சுருங்கி சளி சேர்ந்து காற்றுப் பாதை அடைப்பட்டு, மூச்சை வெளியில் தள்ள முடியாத கொடுமை உண்டாகிறது. அப்படியே மூச்சுக் காற்று உள்ளே நுழைந்தாலும், அது வெளியேற முடியாமல் முடங்கிவிடுகிறது. இதனால், ஆக்ஸிஜன் கிடைப்பது குறைகிறது; கார்பன்–டை-ஆக்ஸைடு தேங்கிவிடுகிறது. இப்போது நுரையீரல் இயந்திரம் இயங்கும் சக்தியை இழப்பதால், மூச்சு முட்டும் பிரச்சினைகள் வரிசைகட்டி வருகின்றன.

அந்தப் பிரச்சினைகள் என்னென்ன?

  • சதா சளி, இருமல், இளைப்பு. மூச்சை வெளிவிட சிரமப்படுவது. நெஞ்சுக்குள் ‘விசில்’ சத்தம் கேட்பது. நெஞ்சு கனப்பது. எந்த நேரமும் சளியைத் துப்பிக்கொண்டே இருப்பது. நடந்தால், படி ஏறினால், உடற்பயிற்சிகள் செய்தால் மூச்சு முட்டுவது உச்சம் தொடுவது. எடை குறைவது. எலும்புகள் தெரிய உடல் மெலிவது என இந்தப் பிரச்சினைகள் எல்லாமே வருடக்கணக்கில் நீடிக்கும்போது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் குறைந்துவிடுகிறது. அப்போது மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற ஆபத்தான பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இன்னும் சொன்னால், நுரையீரல் புற்றுநோயும் வருகிறது.

‘சிஓபிடி’யை அறிவது எப்படி?

  • சர்க்கரை நோய்க்கு ஒரு குளுக்கோமீட்டர், கொரோனாவுக்கு ஒரு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் தேவைப்படுவதுபோல், ‘சிஓபிடி’க்கு என வந்துள்ளது ‘ஸ்பைரோமீட்டர்’! பயனாளிக்கு ரத்தப் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எனப் பல பரிசோதனைகள் செய்வதுண்டு என்றாலும், அவை எல்லாமே துணைப் பரிசோதனைகள்தானே தவிர, ‘சிஓபிடி’க்கு நேரடியான பரிசோதனைகள் அல்ல! எப்படிக் கண்ணாடி இல்லாமல் நம் முதுகைப் பார்க்க முடியாதோ, அப்படியே ஸ்பைரோமீட்டர் இல்லாமல் ‘சிஓபிடி’யைக் கணிக்க முடியாது.
  • ‘நுரையீரல் செயல்திறன் பரிசோதனை’ (Lung function test) எனும் வகைப்பாட்டில் இந்தப் பரிசோதனை வருகிறது. பயனாளி மூச்சை நன்றாக உள்ளிழுத்த பிறகு ஒரு டிஜிட்டல் கருவிக்குள் மூச்சைத் தள்ளச் சொல்கிறார்கள். அப்படித் தள்ளும் மூச்சை அளக்க ஒரு கணக்கு இருக்கிறது. அதன்படி Pre FEV1/FVC எனும் சூத்திரத்தின் விடை 0.7க்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு ‘சிஓபிடி’ எனும் நோய் முத்திரை பதிக்கிறார்கள்.

‘சிஓபிடி’யைச் சமாளிப்பது எப்படி?

•             புகைபிடிக்கக் கூடாது. புகை பிடிப்பவர்கள் அருகில் செல்லவும் கூடாது.

•             முறைப்படி மூச்சுப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

•             பிராணாயாமம் மிகவும் உதவும்.

•             யோகா நல்லது.

•             எளிய உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.

•             குளிர்ச்சியான உணவுகள் ஆகாது.

•             புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

•             அடிக்கடி சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • வருஷத்துக்கு ஒருமுறை இன்ஃபுளூயென்சா தடுப்பூசியையும், 65 வயதுக்கு மேல் நிமோகாக்கல் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • பாதிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
  • ‘சிஓபிடி’ நோயாளியாகிவிட்ட அடுத்த நிமிடத்தில் சிகரெட்டுக்கு ‘நோ’ சொல்ல வேண்டும் அல்லது சிகரெட்டை மறக்க ‘நிகோடின்’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். ‘நிகோடின்’ களிம்புகளை ஈறுகளில் பூசிக்கொள்ளலாம். ‘நிகோடின்’ ஸ்டிக்கர்களைக் கையில் ஒட்டிக்கொள்ளலாம். 
  • அடைபட்டுப்போன காற்றுக் குழாய்களை விரித்துவிட ஒற்றை மருந்து, கலப்பு மருந்து, குறுகிய கால மருந்து, நீடிக்கும் மருந்து எனப் பலதரப்பட்ட மருந்துகள் நவீன மருத்துவத்தில் உள்ளன. பயனாளியின் தேவையைப் பொறுத்து அவை தரப்படும். மேலும், ஸ்டீராய்டு மருந்துகளும் வழங்கப்படும். அவற்றில் வாய்வழி மருந்துகளைவிட இன்ஹேலர் மருந்துகள்தான் ‘சூப்பர்சானிக்’ வேகம்; பக்கவிளைவுகள் குறைவு.
  • இப்படி, மருந்துகளுக்கும் இன்ஹேலர்களுக்கும் ‘சிஓபிடி’ அடங்காவிட்டால், உயிராபத்து நெருங்குகிறது என்று அர்த்தம். பல்ஸ்ஆக்ஸிமீட்டரில் ‘எஸ்பிஓடு’ (SpO2) 90%க்கும் கீழ் குறைந்துவிட்டால், ஆக்ஸிஜன் சிலிண்டர்தான் உயிர் காக்கும். வீட்டிலோ, மருத்துவமனையிலோ வைத்து அதைப் பொருத்திக்கொள்ள வேண்டும். அரிதாகச் சிலருக்கு வென்டிலேட்டர் சிகிச்சையும் அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.

கவனிக்க…

  • அநேகரும் ஆஸ்துமாவுக்கும் ‘சிஓபிடி’க்கும் வித்தியாசம் தெரியாமல் ஆஸ்துமாவுக்கான இன்ஹேலரை ‘கூகுள் டாக்ட’ரிடம் கேட்டு, அமேசானில் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், ‘சிஓபிடி’யை அவர்களே வளர்த்துக்கொள்கிறார்கள். நோய் முற்றிய நிலைமையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்தியர்களின் இறப்புக்கு இரண்டாவது காரணமாக ‘சிஓபிடி’ இருப்பதற்கு இதுவும்தான் காரணம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
  • இறுதியாக, ஒன்று… இன்ஹேலரில் பல விதம் உண்டு. ஆஸ்துமாவுக்குத் தனி வகை. ‘சிஓபிடி’க்கு வேறு வகை. தொடர்ந்து இன்ஹேல் செய்வது, அவசரத்துக்கு இன்ஹேல் செய்வது என உட்பிரிவுகளும் உண்டு. எது, எவருக்கு என்பது மருத்துவ ரகசியம். அது நுரையீரல்நல நிபுணர் (Pulmonologist) உள்ளிட்ட மருத்துவர்களால் மட்டுமே சரியானதைக் கணித்து சரியானதைப் பரிந்துரை செய்ய முடியும். ‘கூகுள் டாக்ட’ரால் முடியாது.

நன்றி: அருஞ்சொல் (23 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்