TNPSC Thervupettagam

நூறு நாட்கள் வேலையில் முறைகேடு நடந்திருப்பது தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு

August 25 , 2021 1073 days 419 0
  • நூறு நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், வெளிப்படைத் தன்மையை நடைமுறைப்படுத்திய முன்னோடி மாநிலம், பெண்கள் அதிக அளவில் இந்தத் திட்டத்தில் பங்கேற்ற மாநிலம் என்ற பெருமைகளைப் பெற்றிருந்த தமிழ்நாடு, இதே திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளில் முதலிடம் பிடித்திருக்கிறது என்பது தலைக்குனிவு.
  • மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையின் கீழ் சமூகத் தணிக்கைக் குழுக்களால் நாடு முழுவதும் 2.65 லட்சம் கிராமங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறையேனும் நடத்தப்பட்ட தணிக்கைகளிலிருந்து குறைந்தபட்சம் ரூ.935 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது.
  • முறைகேட்டின் உண்மையான அளவு இன்னும் மூன்று அல்லது நான்கு மடங்காக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
  • 2017-18 முதல் 2020-21 வரையிலான நான்கு நிதியாண்டுகளைப் பற்றிய விவரங்களிலிருந்தே இத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
  • லஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயர்களில் பணம் செலுத்துதல், அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றின் வழியாகவே பெரும் பகுதி முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட தொகையில் ரூ.12.5 கோடி, அதாவது 1.34% மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட 37,527 தணிக்கை அறிக்கைகளிலிருந்து ரூ.245 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. மீட்கப்பட்ட தொகை ரூ.2.07 கோடி. முறைகேடு செய்யப்பட்ட தொகையில் இது வெறும் 0.85% மட்டுமே.
  •  இரண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீதுகூட முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.
  • ஆந்திரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட 180 ஊழியர்கள் பணிநீக்கமும் 551 ஊழியர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தொகை ரூ.6,749 மட்டுமே. சமூகத் தணிக்கைக் குழுக்களின் அறிக்கைகளிலிருந்தே இந்த விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்பது அதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.
  • நூறு நாட்கள் வேலைத் திட்டம்தான் கரோனா காலகட்டத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் பாதுகாத்து, கோடிக்கணக்கானவர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து காப்பாற்றியுள்ளது.
  • அதன் காரணமாகத்தான், மத்திய அரசு 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீட்டை 2021-22ல் ரூ.73,000 கோடியாக உயர்த்தியுள்ளது.
  • வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்படும்பட்சத்தில், உடனடியாக வழக்கு பதிவுசெய்வதும் அத்தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகளைச் செய்வதுமே முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
  • இத்திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஊதியம் நேரடியாக அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • அந்த முறையையும் தற்போது முறைகேட்டுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமெனில் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலர்களின் முழுமையான செல்வாக்கிலிருந்து இத்திட்டத்தை விடுவித்து சமூகத் தணிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்