- தமிழ்நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு 1925 ஜூலை 20ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. மேட்டூர் அணை நூற்றாண்டில் நுழையும் இந்த வேளையில், அதன் வரலாறோ திருப்பங்கள், ஆச்சரியங்கள் நிறைந்தது.
- நீர்ப்பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஆறுகளில் உள்ள சாதாரண நீர்ப்போக்கு மூலம் குறைந்த அளவு பாசன வசதியை நிலங்கள் பெறும். மற்றொன்று, ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் அவற்றைத் தேக்கிவைத்து, பிறகு சீரான அளவில் தேவையான அளவுக்கு நிலங்களுக்குப் பாசன வசதி அளிப்பது. ஆனால், இயற்கையான முறையில் பாசன வசதி பெறும் வாய்ப்பு நமது மாநிலத்தில் இல்லை. பெருவெள்ளத்தைச் சேமித்துப் பாசன வசதி ஏற்படுத்தித் தர இயலும். அதற்குச் சிறந்த உதாரணம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’.
தொடக்கமும் தடங்கல்களும்:
- ‘நீர்ப்பாசனத் தந்தை’ எனப் போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் 1834 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். நான்கு சிறந்த பொறியாளர்கள் இத்திட்டத்தை மேம்படுத்தி, இறுதியாக முன்மொழிவுகளைத் தயாரித்தனர். 1856 இல் மேஜர் லாஃபோர்ட் காவிரி ஆற்றில் மேட்டூர் - ஈரோட்டுக்கு இடையில் நெருஞ்சிப்பேட்டை என்ற இடத்தில் நீர்த்தேக்கம் அமைய முன்மொழிந்தார்.
- பல காரணங்களால் அந்த இடம் சரிவராமல் திட்டம் கைவிடப்பட்டது. 1901 இல் மாற்று இடங்கள் முன்மொழியப்பட்டன. 1904 இல் நெருஞ்சிப்பேட்டை என்ற இடத்தில் இருந்து மேல்நோக்கிச் சற்றுத் தள்ளி ஓர் இடத்தை மோஸ் முன்மொழிந்தார். 1910இல் கர்னல் எல்லிஸ் இத்திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
- அவர் அளித்த விரிவான அறிக்கையின்படி ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வேளையில், கெடு வாய்ப்பாக மைசூர் அரசு எழுப்பிய நீர்ப் பங்கீட்டு தாவா மூலம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’ சுமார் 15 வருட காலத்துக்குப் பின்னடைவைச் சந்தித்தது.
- இந்தப் பிரச்சினை நடுவர் மன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதன் தீர்ப்பை மதராஸ் அரசு நிராகரித்து, மேல் முறையீடு செய்தது. மீண்டும் மதராஸ் - மைசூர் அரசுகளின் முதன்மைப் பொறியாளர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்று, 1921 இல் பகுதியளவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1923 இல் மைசூர் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, மேட்டூர் நீர்த்தேக்கம் தவிர வேறு எந்தக் கட்டுமானங்களையும் மதராஸ் மாகாணத்தில் ஏற்படுத்தக் கூடாது என்றும், அப்போதைய விளைநிலங்களின் நீர்ப்பாசன அளவைத் தவிர, நிலங்களின் அளவை அதிகப்படுத்துதல் கூடாது என்றும் வாதிட்டது. அதிகாரபூர்வக் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி இரண்டு அரசுகளின் பிரதிநிதிகளுக்கிடையே தனிப்பட்ட முறையிலான கலந்தாலோசனைக் கூட்டங்களும் பலமுறை நடைபெற்றன.
- 1922 ஜூன், ஜூலை மாதங்களில் நீர்ப்பாசனத் துறைக்குப் பொறுப்பு வகித்த சர் கே.சீனிவாச ஐயங்கார், மைசூர் அரசின் திவானிடம் பல முறை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். 1923 செப்டம்பரில் சர் கெப்பி என்ற ஆலோசகர் இந்திய அரசின் சார்பாகப் பணிக்கப்பட்டு, இரண்டு அரசுகளின் முதன்மைப் பொறியாளர்களுடன் பெங்களூரில் பேச்சு நடத்தினார். இறுதியாக, 1924 பிப்ரவரி மாதம் தொடர்ந்து 5 நாள்கள் நடந்த ஆலோசனையின் முடிவில், பிப்ரவரி 18ஆம் தேதி இரண்டு அரசுகளும் ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
- இந்த ஒப்பந்தம் ஏற்பட சர் சி.பி.ராமசாமி ஐயரின் முயற்சி பெரிதும் துணைபுரிந்தது. திட்ட மதிப்பீடு மறுசீரமைப்பு செய்து ரூ.6.12 கோடியாக உயர்த்தப்பட்டு, இந்திய அரசுக்கு 1924 மார்ச் 31 இல் அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய அரசுச் செயலரின் ஒப்புதல் 1925 மார்ச் மாதம் கிடைத்தது.
வழி பிறந்தது:
- இதனிடையே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இந்திய அரசு மதராஸ் மாகாணச் சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத் திட்டச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மறைமுக நிபந்தனை விதித்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி.பி.ராமசாமி ஐயர் 1924 ஆகஸ்ட் 18 இல் காவிரி-மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டவும், தேவையான கால்வாய், இதர பணிகளுடன் அப்போதைய நீர்ப்பாசனத் திட்டத்தை மேம்படுத்தவும் மதராஸ் மாகாணச் சட்டப்பேரவையில் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
- இதற்கு நான்கு நாள்கள் முன்பு சட்டமன்ற உறுப்பினர் டி.வி. சேஷகிரி ஐயர், சி.பி.ராமசாமி ஐயருக்கு எழுதிய கடிதத்தில், ‘மேட்டூர் திட்டம் விரும்பத்தகாதது. இந்த நேரத்தில் அதை நிறைவேற்ற தீர்மானம் மூலம் அழுத்தம் கொடுக்கப்படக் கூடாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது அமைந்திருந்த சட்டமன்றக் குழு மக்களின் பொதுக்கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் சட்டமன்றம் முழுமையான பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்பதே அவர் கருத்து. அதைத் திறமையுடன் சமாளித்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இது நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 5 இல் ஒரு சுவையான நிகழ்ச்சி மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் நடந்தேறியது. சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.நாராயண ஸ்வாமி பிள்ளை, “பாசன மசோதாவின் மூலம் மணல் மிகுந்த பாலைவனங்களைப் பயன் தரத்தக்க அழகான தோட்டங்களாக மாற்றுவோம் என்று கூறிய சர் சி.பி.ராமசாமி ஐயர், மேட்டூர் போன்ற நீண்ட காலத் திட்டத்துக்கு வெறும் ரூ.4 லட்சம் ஒதுக்கவே அக்கறை காட்டினார்” என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
- குறுக்கிட்டுப் பதிலளித்த ராமசாமி ஐயர், இந்த மேட்டூர் அணைத் திட்டத்துக்கு மத்திய அரசின் செயலர் அனுமதி அளித்துவிட்டதாகவும், அந்தத் தகவல் அன்று காலைதான் தனக்குக் கிடைத்ததாகவும் உறுப்பினர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் சபையில் அறிவித்தார்.
- எந்தக் குறிப்பிட்ட இடத்தில் உறுதியாக அணைக் கட்டுமானம் கட்டப்படவிருக்கிறது என்ற இறுதி முடிவு எட்டப்படாமல் பரிசீலனையில் இருந்ததால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே பட்ஜெட் போடப்பட்டதாக விளக்கமும் அளித்தார். இந்திய அரசு உள்துறை அனுமதி பெறப்பட்டிருப்பதால், இந்தத் திட்டத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாது என்று தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டப்பட்டது:
- இறுதியாக ‘காவிரி - மேட்டூர் திட்டம்’ ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1925 ஜூலை 20 இல் அப்போதைய மதராஸ் ஆளுநர் விஸ்கவுன்ட் கோஷென் (Viscount Goschen) அடிக்கல் நாட்டினார். தற்போதைய மேட்டூர் அணையின் வலதுபுறம் பாறைகள் நிறைந்த ஓரிடத்தில் கலவை இயந்திரம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- தொடக்க விழாவுக்கு ஏராளமான விருந்தினர்களும் பார்வையாளர்களும் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ராமசாமி ஐயர், நீர்ப்பாசனத் துறையை வெகுவாகப் பாராட்டினார். லட்சக்கணக்கான மக்களின் நன்றிக்கு உரியவராக ஆளுநர் கோஷென் மதிக்கப்படுவார் என்றும் கூறினார்.
தொடங்கியது பணி:
- அணை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளும், நிர்வாக அமைப்பு முறைகளும் அந்த நேரத்தில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அதைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. திட்டத்துக்கு அவசியம் அனுமதி கிடைத்துவிடும் என்ற முழு நம்பிக்கையில் முன்னதாகவே நிலம் கையகப்படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. திட்டத்தின்படி, அணை 200 அடி உயரத்துடனும் (ஆழமான அடித்தள அஸ்திவார நிலையிலிருந்து), 6,352 அடி நீளத்துடனும் அமைக்கப்பட்டது. மேற்கு - கிழக்காக காவிரி ஆற்றைக் கடந்து கிழக்கே உள்ள சீத்தாமலை வரை அணையின் நீளம் அமைந்தது.
- இத்திட்டத்தின் மூலம் 3,01,000 ஏக்கர் நிலங்கள் புதிதாக சாகுபடி செய்யப் பாசன வசதி கிடைக்கும் எனவும், இரண்டாம் போகம் பாசன வசதி சுமார் 90,000 ஏக்கருக்குக் கிடைக்கும் எனவும் அப்போது கணக்கிடப்பட்டது. புதிய நவீனக் கட்டுமான முறைகள், நவீனத் தொழிற் கருவிகளின் உதவியுடன் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே அணையைக் கட்டி முடிக்க முடிந்தது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 இல் மேட்டூர் அணை திறப்பு விழா கண்டது.
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களுக்கு 100 ஆண்டுகளாகச் சீரான பாசன வசதியும் பல மாவட்டங்களுக்குக் குடிநீர் வசதியும் தந்து கோடிக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கிறது இந்த காவிரி - மேட்டூர் திட்டம். சிறியதும் பெரியதுமான பல பெரிய தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான அளவு தண்ணீர் வசதி தந்து, தொழில் துறையை மேம்படுத்த வைக்கிறது. அந்த வகையில் மேட்டூர் அணை மனிதர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)