- காரைக்கால் அம்மையார், தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்த மகாகவி. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவர்.
- பெண் நாயன்மார்களில் மூத்தவரும் புகழ்பெற்றவரும் இவர்தான். சுந்தர மூர்த்தியாரின் ‘திருத்தொண்டத் தொகை’யில் 24ஆவது நாயன்மாராகப் ‘பேயார்க்கும் அடியேன்’ என்று புகழப்படுபவரும் இவரே. காரைக்காலின் பிரபலமான தெய்வமாகிவிட்ட இவரின் கவித் திறன், வியக்கத்தக்கது. அதுவரை உரைக்கப்பட்ட நாயன்மார் பாடல்களிலிருந்து தனித்துவமும் சிறப்பும் கொண்டவை காரைக்கால் அம்மையாரின் சொற்கள்.
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1 (திருக்கடைக்காப்புடன் 11 பாடல்கள்), திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - 2 (திருக்கடைக்காப்புடன் 11 பாடல்கள்), இரட்டை மணிமாலை - 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி - 101 பாடல்கள் ஆகியவை அவரது தமிழ்க் கொடைகள். ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. உதாரணமாகப் பதிக வடிவத்தில் அம்மையின் இப்படைப்பே மூத்தது. அதைக் குறிக்கவே மூத்த திருப்பதிகம் என இது அழைக்கப்படுகிறது.
சிவனின் சுடுகாட்டு நடனம்
- திருவலாங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் மையம், சுடுகாடும் பேய்களும்தான். தன்னையே பேயாகச் சொல்லிய அம்மை, இதில் சுடுகாட்டின் காட்சிகளையே சித்தரித் திருப்பார். இன்றும் சுடுகாடு பெண்களுக்கு விலக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், அந்தக் காட்டில்தான் அம்மையின் பாட்டுடைத் தலைவனான சிவன் கூத்தாடுகிறார். அதனால் அந்தக் காட்டைத் தன் பாடல்கள்வழி வர்ணிக் கிறார். திருவலாங்காட்டு இரண்டு பதிகங்களிலும் சிவன் சுடுகாட்டில் ஆடுவதைப் பாடல்கள் வர்ணிக்கும். ஒரு சுடுகாடு எப்படி இருக்கும் என்பதை வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் அம்மை இதில் சொல்கிறார். இந்தப் பேய்கள் எல்லாம் பெண் பேய்கள் என்கிறார். அவர் சித்தரிக்கும் பேய்களில் ஒன்றுகூட ஆண் இல்லை. மண்டைகளை மாலையாக அணிந்திருக்குமாம் அந்தப் பேய்கள். கொள்ளிக்கட்டையை எடுத்து மசித்துக் கண் மை தீட்டுமாம். எரியும் பிணத்தை இழுத்து உண்ணும் அதன் பண்புகள் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டுபோகிறார். இதில் ஆலங்காடு என்னும் சுடுகாட்டைச் சித்தரிக்கும்போது ‘வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள்’ என்கிறார். வாகை மரம் நள்ளிரவு நேரத்தில் காய்ந்த காய்களை உதிர்க்கும் என்கிற காட்சி. ஓர் அமானுஷயத்தை இந்தக் காட்சிவழி உருவாக்குகிறார் அம்மை. காய்கள் உதிரும்போது கேட்கும் சப்தம் அந்தப் பேய்க் காட்டை இன்னும் திகிலானதாக மாற்றுகிறது. இந்தப் பெண் பேய்களை அம்மை, ஒரு தாயாகவும் சித்தரிக்கிறார். அந்தப் பேய்கள் தன் குழந்தைகளுக்குக் காளி எனப் பெயரிட்டுச் சீராட்டும் என்கிறார். இந்தப் பதிகத்தில் தன்னையே ஒரு பேய் (செடிதலைக் காரைக்கால் பேய்) எனச் சொல்லிக் கொள்கிறார்.
உன்மத்தமான காதல்
- அற்புதத் திருவந்தாதி சிவனை நோக்கிப் பாடப்பெற்றது. இன்றைய காலகட்டத்தில் உன்மத்தமான காதல் என்கிற ரீதியில் இந்தப் பாடலை வைத்துப் பார்க்கலாம். ‘மொழி பயின்றதிலிருந்து உன் மீது காதல் சிறந்து இருக்கிறேன்’ எனத் தொடங்குகிறது. இந்தப் பாடலில் தனது இடர் களையும்படி முறையிடுகிறார். அதன் அடுத்த பாடலில் இடர் களையவில்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால், என் காதல் ஒரு போதும் குறையாது என்கிறார். ‘அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்/இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்/எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்/எவ்வுருவோ நின்னுருவம் ஏது?’ என்கிற பாடல் காதல் உணர்வுக்கான இன்னோர் உதாரணம். ஊரும் பேரும் தெரியாத ஒருவரை நாம் நேசிப்பது இல்லையா, அழகான பறவைக்குப் பெயர் அவசியமா என ஒரு நவீனக் கவிதைக்கான பொருளைக் கொண்ட கவிதை இது. அவன் எப்படி இருப்பான் என்று தெரியாமலேயே விரும்பினேன். இப்போதும் அவன் உருவத்தைக் காண முடியவில்லை. ‘நீ எப்படி இருப்பாய் எனக் கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல? உன் உருவம்தான் என்ன?’ எனக் கேட்கிறார் அம்மை.
நவீனத்தின் பாதையில்
- ‘அவனே இரு சுடர் தீ ஆகாசம் ஆவான்/அவனே புவி புனல் காற்றாவான் - அவனே/இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான/மயனாகி நின்றானும் வந்து’ என்கிற பாடல் வரி அவர் கவித் திறனுக்கான பதம். இரு சுடர் தீ, ஆகாயம், அவனே புவி, புனல் என்கிற இந்த வரி பத்துப் பதினைந்து நூற்றாண்டுகள் கழித்தும் புரிந்துகொள்ளக்கூடிய நவீனத்துடன் இருக்கிறது. இதில் இரு சுடர் என அம்மை குறிப்பிடுவது ஆன்மப் பயணத்தை எனப் புரிந்துகொள்ளலாம்.
- காரைக்கால் அம்மையார், புனிதவதி யாக, பரமதத்தனின் மனைவியாக வாழ்ந்தவர். அவரது இந்த மாற்றம் குறித்துப் பல புராணக் கதைகளும் உள்ளன. ஆனால், அவர் கணவர் இல்லாமல் வாழ்ந்தவர் என்பது தெளிவு. அந்தக் காலகட்டத்தில் அவர் கொண்ட பக்தியில் உள்ள உறுதி சமூகப் பின்னணி யுடன் பார்க்கும்போது இன்றைய காலச் சூழலிலும் கவனிக்கத்தக்கது. ‘யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்/யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்’ என்கிறார். பெண்களுக்கு வீடுபேறு அந்தக் காலகட்டத்தில் எப்படிப் பார்க்கப்பட்டது என்கிற கேள்வியும் எழுகிறது. ‘கிளர்ந்து வெந்துயர் வந்திடும்/போதஞ்சி நெஞ்ச மென்பாய்/தளர்திருங்கிருத்தல் தவிர்’ என்கிற பாடலில் இடர் வரும் காலத்தில் அஞ்சாமல் தளராமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்தப் பின்னணியில் வாசிக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 07 – 2024)