TNPSC Thervupettagam

நூற்றாண்டுத் தாகமும் சிறு நம்பிக்கையும்

February 18 , 2024 341 days 248 0
  • அந்தக் குறுகிய மண்சாலையின் இரண்டுபுறமும் கருவேல மரங்கள். வெயில் உச்சம் தொட ஆரம்பித்த நேரம். தொலைவில் உப்பளங்களில் குன்றுபோல உப்பு குவிக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் இரும்புத் தள்ளுவண்டியில் வண்ணக் குடங்களுடன் குடிநீருக்காகப் பெண்கள் சிறுசிறு குழுவாகக் கூடியிருந்தனர்.
  • ராமநாதபுரம் மாவட்டம், சித்தூர்வாடி ஊராட்சியின் மேலச்சேந்தனேந்தல் கிராமம் இப்படித்தான் அன்றைய நாளை வரவேற்றுக் கொண்டிருந்தது. தண்ணீருக்காகப் பல கிமீ தொலைவுக்கு நடந்து செல்வதும் பல மணி நேரம் காத்துக்கொண்டிருப்பதும் அம்மக்களின் அன்றாடத்தில் ஒன்றாகவே இன்றளவும் இருக்கிறது.
  • தமிழகத்தின் மிக மோசமான தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் பகுதிகளில் ஒன்று ராமநாத புரம். கண்மாய், ஊருணி தண்ணீரைத்தான் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ளனர். மழையும் பொய்த்துவிட்டால் ஊருணி, கண்மாய்கள் வறண்டு தண்ணீருக் காக அல்லல்படும் நிலை வந்துவிடும். ராமநாதபுரத்தில் வருடத்திற்கு 827 மி.லி. மழை பெய்தாலும், கடல் நீரால் நிலத்தடி நீர் தீவிர உப்புத் தன்மையைக் கொண்டிருப்பது இங்குள்ள பெரிய சிக்கல். இவ்வாறான சூழலில் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரே மக்களின் பிரதானக் குடிநீராக உள்ளது.
  • இதில் குடிப்பதற்கான நீர் ஒரு குடம் 12 ரூபாய்க்கும் பிற தேவைகளுக்கான நீர் 8 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் மக்களால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

முடங்கிப்போகும் பெண்கள்

  • தண்ணீரைப் பற்றியே பெண்களின் முழுச்சிந்தனையும் நிரம்பி இருக்கிறது. தண்ணீரைத் தேடியே பெண்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதனால் மனதளவிலும் உடலளவிலும் அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
  • வண்டித் தண்ணீர் இல்லை என்றால் ஊருணியில்தான் தண்ணீர் அள்ள வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்தால்தான் அந்தத் தண்ணீரும் கிடைக்கும். இதனால், பிள்ளைகளை நேரத்துக்குப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறதுஎனத் தண்ணீர்க் குடத்தைத் தூக்கிக்கொண்டு நகர்கிறார் குடும்பத் தலைவியான ஆரோக்கியமேரி.
  • ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு பெரிதாக இல்லாத காரணத்தால், கிராமப்புறப் பெண்கள் நூறு நாள் வேலையையே நம்பி இருக்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்சினை வந்துவிட்டால், தங்களால் அந்த வேலைக்கும் செல்ல முடியாது என்கிறார்கள்.

காவிரி கூட்டுக் குடிநீர்

  • கடந்த 100 ஆண்டுகளாக ராமநாதபுரத்தின் நிலை இதுதான். இன்னமும், நாளொன்றுக்கு ஒரு நபருக்கு, 40 லிட்டர் குடிநீரைக்கூட வழங்க முடியாத நிலையில்தான் ராமநாதபுரம் உள்ளது. இதனாலேயே பொருளாதாரம் - தொழில் வளர்ச்சியில் இம்மாவட்டம் தமிழகத்தில் பின்தங்கியுள்ளது. 2007இல் தமிழக அரசு கொண்டுவந்த காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் ராமநாதபுரத்தின் தண்ணீர் தேவை ஓரளவு பூர்த்தியானாலும் கடலோரங்களில் வசிக்கும் கிராமப்புற மக்கள் குடிநீருக்காக நெடுந்தொலைவு பயணம் செய்யும் நிலையே தொடர்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர், உப்பு ஆலை நீக்கம் போன்ற திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டாலும் ராமநாதபுரத்தின் தண்ணீர்த் தேவை முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.
  • இவ்வாறான சூழலில்தான் அம்மக்களுக்குச் சிறு நம்பிக்கை தந்துள்ளதுடான்கா’ (Taanka). ராமநாதபுரம் மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குக் குறிப்பிடத்தக்க தீர்வாக டான்கா அமைந்துள்ளது. ராமநாதபுரத்திற்கு டான்கா வந்த கதையை அறிந்து கொள்ள நாம் ராஜஸ்தானுக்கு பயணப்பட வேண்டியிருக்கிறது.
  • ராஜஸ்தான் பாலைவன பூமி. இங்கே தண்ணீர் என்பது பெரும் மதிப்புமிக்க பொருள். வரலாறு நெடுக மழைநீர் சேமிப்பு என்பது அப்பகுதியில் மிக அத்தியாவசிய நடைமுறையாக இருந்துள்ளது. மழைநீரைச் சேமிப்பதற்கென்று ராட்சதத் தொட்டிகள் பொ..(கி.பி)1600களிலேயே ராஜஸ்தானில் அமைக்கப்பட்டன. இந்த ராட்சதத் தொட்டிகளின் பெயர்தான்டான்கா’.

மக்களின் உயிர்நாடி

  • ராஜஸ்தானின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் டான்காவுக்கு முக்கிய இடம் உண்டு. 20ஆம் நூற்றாண்டில் மோட்டார் பம்புகளின் வருகைக்குப் பிறகு டான்கா பயன்பாடு குறையத் தொடங்கியது. வறட்சிக் காலத்தில் மோட்டார் பம்புகள் பெரிய அளவில் பலனளிக்காத நிலையில், ராஜஸ்தான் மக்கள் மீண்டும் டான்காவை நோக்கி நகர்ந்தனர். தற்போது அம்மாநிலத்தின் குடிநீர் சேமிப்புமுறையாக டான்கா மாறியுள்ளது.
  • சதுரம், வட்டம், நீள் செவ்வகம் போன்ற வடிவங்களில் அமைந்திருக்கிற டான்கா தொட்டிகளை தார் பாலைவன மக்கள் உயிர்நாடியாகப் பார்க்கிறார்கள். ராஜஸ்தானை முன்மாதிரியாகக் கொண்டு ராமநாதபுரத்திலும் டான்கா தொட்டிகளை அமைக்க வாஸ்கா (Water Security and Climate Adaptation in Rural India), GIZ, மத்தியக் கிராமபுற மேம்பாட்டு அமைச்சகம், ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை திட்டமிட்டன. இத்திட்டத்தில் டான்கா மழைநீர்த் தொட்டி அமைப்பதற்கான கிராமங்களை அடையாளம் காணவும், தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கவும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உதவியது.
  • இதன் பலனாக, 2020இல் ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலத்தில் டான்கா மழைநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது திருப்புல்லாணி, கடலாடி, மண்டபம், மேலச்சேந்தனேந்தல், பெரியகுளம் என ராமநாதபுர மாவட்டத்தில் மொத்தமாக 10 இடங்களில் டான்கா மழைநீர்த் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒரு டான்கா தொட்டி மூலம் சுமார் 280 குடும்பங்கள் பயனடைந்துவருகின்றன.
  • டான்காவின் வருகைக்குப் பிறகு ராமநாதபுரம் கடற்கரையோர மக்களின் வாழ்வில் சிறு மாற்றம் நடந்திருக்கிறது என்கிறார் சத்துணவுப் பணியாளரான ஜோதி, “மழை இல்லாதபோது இங்குள்ள ஊருணியில் தண்ணீரை எடுத்து, மண்பானையில் ஊற்றித் தேத்தான் கொட்டையை வைத்துத் தேய்த்துத் தண்ணீரைச் சுத்தப்படுத்துவோம். அதைத்தான் சமைக்கவும் குடிக்கவும் பயன்படுத்துவோம். ஊருணியில் தண்ணீர் இல்லாவிட்டால் கிணறு வெட்டித் தண்ணீர்த் தேவையைத் தீர்ப்போம். கிணற்றில் இருக்கும் தண்ணீர், பத்து நாள்கள்தாம் நன்னீராக இருக்கும். பிறகு அதனுள் கடல் நீர் புகுந்து உப்புக்கரித்துவிடும்எனக் கூறும் அவர், டான்கா மழைநீர்த் தொட்டி அமைத்த பிறகு ஆறு மாதங்களாகத் தண்ணீர்ப் பிரச்சினை குறைந்திருப்பதாகவும் முன்புபோல் மக்கள் இரவெல்லாம் தண்ணீருக்காகக் காத்திருக்கும் சூழல் இப்போது இல்லை எனவும் தெரிவித்தார்.

ஒரே நன்னீர்

  • டான்கா தொட்டி குறித்து எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் செல்வ முகிலனிடம் கேட்டபோது, “டான்காவில் 60,000 லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடியும். இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது. டான்கா மூலம் தங்கள் தேவைக்குத் தண்ணீர் எடுத்துக் கொள்கின்றனர். இது மழை நீர் என்பதால், அவர்கள் இந்நீரைக் கொதிக்கவைத்துக் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். முன்பு இம்மக்கள் ஊருணித் தண்ணீரையே குடிநீராகவும் பயன்படுத்திவந்தனர். இதனால், வயிற்றுப் போக்கு உள்படப் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிவந்தனர். தற்போது டான்கா மூலம் மாசு இல்லாத ஓரளவு சுத்தமான நீர் கிடைப்பதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதும் குறைந்துள்ளது. சொல்லப் போனால், இப்போதைக்கு இங்கு கிடைக் கும் ஒரே நன்னீர் இதுதான்என்றார்.
  • தற்போதைய சூழலில் ராமநாத புரத்தின் தண்ணீர்ப் பிரச்சினை டான்கா வினால் சிறிதளவு தீர்க்கப்பட்டிருக் கிறது. ஆனால், தண்ணீர்த் தட்டுப்பாடு சார்ந்து நிரந்தரமான தீர்வைச் செயல்படுத்துவது அவசியம். அதற்கு மழையில்லா வறட்சிக் காலங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய ஆக்கப்பூர்வமான, நீடித்திருக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்