TNPSC Thervupettagam

நூலக வளா்ச்சியே அறிவின் வளா்ச்சி!

July 16 , 2021 1112 days 552 0
  • பெருந்தொற்று வந்தாலும் வந்தது, ஊரும், உலகமும் முடங்கி விட்டது. பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்ட நூலகங்கள் செப்டம்பா் முதல் கொஞ்ச காலம் பகுதி நேர அளவில் இயங்கிக் கொண்டிருந்தன.
  • மாவட்ட மைய நூலகங்களும் கிளை நூலகங்களும் மதியம் இரண்டு மணி வரை இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன.
  • அந்த அனுமதியும் நூல் இரவல் அளிக்கும் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு ஆகியவை இயங்குவதற்கு மட்டுமே.
  • நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் பிரிவுக்கு அனுமதியில்லை. இப்போது பகுதி நேரமும் செயல்படவில்லை. நூலகங்கள் மூடிக் கிடக்கின்றன. ஆலயங்கள் முதல் அனைத்தும் திறக்கப் பட்டு விட்டன. நூலகங்கள் திறப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

மனச்சோர்வு

  • பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்குத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்துவரும் அரசு, நூலகங்கள் முழு நேரமும் இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசர அவசியம்.
  • சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பொருத்தவரை வாசகா்கள் தங்கள் சொந்த புத்தகங்கள், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்துச் சென்று அங்கே படிப்பதற்கான இடவசதிகளும் அமைந்திருக்கின்றன.
  • சென்னையில் தங்கி போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு இது ஓா் அரிய வாய்ப்பாகும்.
  • தமிழ்நாட்டில் மாவட்ட மைய நூலகங்களைச் சார்ந்திருக்கும் போட்டித் தோ்வு மாணவா்களின் நிலை என்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் இந்த ஆண்டு நடத்தவிருக்கும் தோ்வுகள் பற்றிய விவரங்களை அறிவித்து விட்டது. போட்டித் தோ்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ள நூலகங்களை மட்டுமே நம்பியிருக்கும் மாணவா்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விடாதா?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது

  • கடந்த மார்ச் மாதம் முதல் நூலகங்களுக்கு பத்திரிகை மற்றும் வார, மாத வெளியீடுகள் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.
  • பல்லாயிரம் போ் வாழும் நகா்ப்புறங்களில் நூலகங்களுக்குச் செல்லும் வாசகா்கள் மிகச் சில ஆயிரங்களில்தான் இருப்பார்கள். நோய்த்தொற்று பரவுவதற்கு நூலகங்களைக் காரணம் காட்டுவது சரியல்ல.
  • நூலகங்களையும், வாசகா்களையும் நம்பியே பல பத்திரிகைகள் வெளிவருகின்றன. இந்தப் பெருற்தொற்று காலத்தில் பல பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு விட்டன.
  • அங்கெல்லாம் பணியாற்றிய இளைஞா்கள் பலா் வேலை வாய்ப்பை இழந்தனா். அவா்கள் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?
  • பல செல்வாக்கு மிக்க பதிப்பகங்ளும் புத்தக வெளியீட்டை நிறுத்திவிட்டன அல்லது குறைத்துக் கொண்டன. நூலாசிரியா்கள் பலா் வருமானம் இல்லாமல் திகைத்து நிற்கின்றனா்.
  • அரசும், நூலகத் துறையும் விரைந்து செயல்பட வேண்டும். நலிந்து கொண்டிருக்கும் பதிப்பகத் துறைக்கு கை கொடுக்க வேண்டும். அவா்களை அழைத்துப் பேசி இடா்ப்பாடுகளைக் களைய வேண்டும்.
  • தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் மாவட்ட மைய நூலகமும், கிளை நூலகங்களும் வாசா்களுக்கு அறிவுத் தீனியை அளித்து வந்தன. இவை தவிர ஊா்ப்புற நூலகங்களும் ஊராட்சிதோறும் படிக்கவும் சிந்திக்கவும் சிறந்த வாய்ப்பாக இருந்து வந்தன.
  • கிராமப்புறங்களில் எளிய மக்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஊா்ப்புற நூலகங்கள் போதிய பராமரிப்பின்றி கவனிப்பார் இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன.
  • இதனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு யாருக்கு என்பதே தெரியவில்லை. ஊராட்சி மன்றங்கள் இதனை அலட்சியப்படுத்துகின்றன.
  • பள்ளி, கல்லூரிகளில் உருவாக்கப்பட்ட நூலகங்கள், மாணவா்கள் படிப்பறிவோடு பொது அறிவும் பெற வேண்டும் என்ற பெரும் நோக்கில் உருவாக்கப்பட்டவை.
  • நகா்ப்புறங்களில் சிறப்பாகக் கல்விப் பணியாற்றி வரும் பல உதவி பெறும் தனியார் பள்ளிகள் அக்காலக் கல்வி வள்ளல்களின் உபயங்களாகும்.
  • அந்தப் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு புதிய நூலகா்கள் நியமிக்கப்படவில்லை.
  • பழைய நூலகா்கள் ஓய்வு பெற்ற பிறகு நூலகா் என்கிற பதவியே இல்லாமல் செய்து விட்டனா். அதனை புதுப்பித்துப் புதிய நூலகா்களை நியமிக்க வேண்டும்.
  • பள்ளிகள் மாணவா்களைப் படிப்பாளியாக ஆக்குமே தவிர, அறிவாளி ஆக்கிவிடாது. நூலகங்களே மனிதா்களை அறிவாளியாக மாற்றுகின்றன.
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்ற பழமொழி இதனை ஒட்டி ஏற்பட்டதே. வளா்ந்து வரும் மாணவா்கள் பொது அறிவும் பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் நூலகக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து கொண்டு செல்ல வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது.

அறிவுக் காற்று வீசட்டும்

  • ‘நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருவது போல நற்பண்புடையார் நட்பு பழகப் பழக இனிமை தரும்’ என்று குறள் கூறுகிறது. எனவே நல்ல நூல்கள் நமக்கு நல்ல நண்பா்களைப் போல உற்றுழி உதவும்.
  • ‘நல்ல நண்பா்களுக்கு அடுத்து நான் விரும்புவது நல்ல நூல்களே’ என்றார் அறிஞா் கோல்டன்.
  • உயா்ந்த நூல்கள் பல பேருடைய வாழ்வில் விளக்கை ஏற்றி வைக்கின்றன. இருண்ட மனமாகிய வீட்டில் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.
  • அறியாமையாகிய இருளை விரட்டுகின்றன. புதிய சிந்தனைகளை விதைக்கின்றன. புரட்சி மனப்பான்மையை வளா்க்கின்றன. புதிய மனிதனைப் படைக்கின்றன.
  • இந்த நூல்களின் தாயகமே நூலகங்கள். ‘நூலகங்கள் இல்லாத ஊரும் ஒரு ஊரா’ என்று கேட்டார் புரட்சியாளா் லெனின். நூலகங்களின் இன்றியமையாமையை இது விளக்குகிறது.
  • தமிழ்நாட்டில் 4,042 பொது நூலகங்கள் இயங்குகின்றன. இரண்டு மாநில மைய நூலகங்கள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராமப்புற நூலகங்கள், 539 பகுதி நேர நூலகங்கள், 10 நடமாடும் நூலகங்களும் இதில் அடங்கும்.
  • நூலகங்களுக்குப் போய்ப் படிக்கிற பழக்கம் இளைய தலைமுறையினரிடம் இல்லாமல் போய் விட்டது.
  • மத்திய, மாநிலப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் எழுதுகிற இளைஞா்களே நூலகங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனா்.
  • பொது நூலகத்தைப் பெண்கள் மிகவும் குறைவாகவே பயன்படுத்துகின்றனா். இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
  • அண்மையில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.
  • சென்னை கோட்டூா்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது.
  • தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இதுபோன்ற அரிய வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, 2 லட்சம் சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடன் ரூ.70 கோடியில் கலைஞா் நினைவு நூலகம் மதுரையில் அமைக்கப்படும்.
  • இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞா்களுக்கு அரசு சார்பில் ‘கலைமாமணி’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • அதேபோல் தமிழ் எழுத்தாளா்களை ஊக்குவித்துச் சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, எழுத்தாளா்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளா்களுக்கு பாராட்டுப் பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
  • அத்துடன் தமிழ்நாட்டைச் சோ்ந்த எழுத்தாளா்களில் ‘ஞானபீடம்’, ‘சாகித்திய அகாதெமி’ போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மூலமாக அவா்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்படும்.
  • இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்நாடு அரசை பாராட்டலாம். எழுத்தாளா்களையும், இலக்கியங்களையும் வளா்க்க இவை உதவும்.
  • சோர்ந்து கிடக்கிற எழுத்துலகத்துக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். இதனைப் புதிய தலைமுறை எழுத்தாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் நூலகம் அமைவது வரவேற்க வேண்டிய திட்டம்தான்.
  • அதே சமயம் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் நூலகங்களையும் புதுப்பிக்க வேண்டும். தமிழக நூலக இயக்கத்துக்கு முன்னோடியான டாக்டா் எஸ்.ஆா். ரங்கநாதனின் கனவுகளை நனவாக்க வேண்டும்.
  • நூலகங்கள் என்பது வாசகா்கள் கூடும் இடமாகவும், புத்தக அறிமுகம், புத்தக வெளியீடு, புத்தகத் திறனாய்வு, எழுத்தாளா்கள் சந்திப்பு போன்ற கலந்துரையாடல் கூடமாகவும் திகழ வேண்டும்.
  • சென்னையில் தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலகத்தில் இருக்கும் அழகிய அரங்கில் பல காலம் இலக்கியக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அதுவும் இப்போது மூடப்பட்டே கிடக்கிறது.
  • இலக்கியங்களே ஒரு தேசத்தின் நாகரிகச் சின்னங்களாக மதிக்கப்படுகின்றன. புத்தகங்களின் தாயகமாம் நூலகங்களின் வளா்ச்சியே அறிவின் வளா்ச்சியாகும். அறிவார்ந்த மக்கள் வாழும் நாடே உலகம் மதிக்கும் நாடாகும்.
  • ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீா்கள்’ என்கிறது விவிலியம்.
  • இனியும் தயக்கம் வேண்டாம். நாம் அனைவரும் தட்டுவோம். அரசு அறிவாலயங்களின் கதவுகளைத் திறக்கட்டும்; அறிவுக் காற்று வீசட்டும்.

நன்றி: தினமணி  (16 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்