TNPSC Thervupettagam

நூல்கள் வழியும் தேர்தலைப் புரிந்து கொள்ளலாம்

April 14 , 2024 272 days 275 0
  • இந்தியத் தேர்தல்களும் தேர்தல் முடிவுகளும் பல நேரம் வியப்பை ஏற்படுத்துபவை. ஒரு திருவிழா போலவும் எதிரெதிர் கொள்கைகளுக்கு இடையிலான மோதலாகவும் தோன்றினாலும் தேர்தல்களில் வெற்றி ஏன், எந்தப் பக்கம் சாய்கிறது என்பது பெரிதும் சிக்கலான சமன்பாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பல நேரம் நேர்கோட்டுரீதியில் புரிந்துகொள்ள இயலாததாகவும் இருக்கிறது. இந்தப் பின்னணியில் இந்தியத் தேர்தல்கள் குறித்து சமீப ஆண்டுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

தி எலக்‌ஷன் தட் சேஞ்ச்டு இண்டியா (The election that changed India, 2014)

  • காட்சி ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய நூல். 2014 மக்களவைத் தேர்தல், பாஜகவின் எழுச்சியாக அமைந்தது. 2012இல் குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி மூன்றாம் முறையாக வெற்றி பெற்றது, அவருக்காகப் பணிபுரியும் குழுவினர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொடர்ச்சியான இரண்டு ஆட்சிகளில் எழுந்த ஊழல்குற்றச்சாட்டுகள், தேர்தல் வியூகத்தில் ராகுல் காந்தி தவறவிட்டவை உள்பட பல்வேறு பின்னணிகளை அலசுகிறது இந்நூல்.

ஆன் அன்டாக்குமெண்டெட் ஒண்டர்: தி கிரேட் இண்டியன் எலக்‌ஷன் (An Undocumented Wonder: The Great Indian Election, 2014)

  • 2010-2012இல் இந்தியத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பு வகித்த எஸ்.ஒய்.குரேஷி எழுதிய நூல். ஒரு வேட்பாளர் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற திட்டத்தை மோடி அரசு ஏற்றுக்கொள்ள மறுத்த நிகழ்வு நூலில் விமர்சிக்கப்படுகிறது. கறுப்புப் பண ஒழிப்புக் குறித்துப் பேசும் பாஜக, தேர்தலில் பணத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஏற்க மறுப்பது ஆச்சர்யத்தை அளிப்பதாக குரேஷி கூறுகிறார்.

ஹவ் இண்டியா பிகேம் டெமாக்ரடிக்? (How India became democratic?, 2018)

  • இஸ்ரேலைச் சேர்ந்த தேர்தல் ஆய்வுநிபுணரான ஆர்னித் ஷானி எழுதிய நூல். உலகின் பல நாடுகள், ‘எல்லோருக்கும் வாக்குரிமை’ என்கிற நிலையை அடைய நவீன யுகத்திலும் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவில் ‘அனைவருக்குமான வாக்குரிமை’ என்பது சுதந்திரம் பெற்ற உடனேயே சாத்தியமானது. நாடு விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்குள், இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தை நாடு எதிர்பார்த்திருந்தபோது முதல் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்தன. தேர்தல் முறை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

எலக்‌ஷன் கமிஷன் ஆஃப் இண்டியா: இன்ஸ்டிட்யூஷனலைசிங் டெமாக்ரடிக் அன்செர்டனிடிஸ் (Election commission of India: Institutionalising democratic uncertainties, 2019)

  • அரசியல் அறிவியல் துறை நிபுணர்களான உஜ்வல் குமார் சிங், அனுபமா ராய் இதை எழுதியுள்ளனர். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்திக்கொடுப்பதற்கான நிறுவனமாக மட்டுமல்லாமல், அதைக் கட்டுப்படுத்துவதற்குமான அமைப்பாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது நூலில் விளக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் வகுக்கப்பட்டது, அதற்கான நடவடிக்கைகளில் ஒன்று. டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, 1993இல் கூடுதலாக இரண்டு ஆணையர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றம் கூடுதல் ஆணையர்களின் நியமனத்தை அங்கீகரித்ததுடன், பெரும்பான்மை முடிவின்படி ஆணையம் செயல்பட வேண்டும் எனவும் கூறியது. ஆணையத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் இத்தகைய அதிகாரப் போராட்டங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தி கிரேட் மார்ச் ஆஃப் டெமாக்ரசி (The great march of democracy, 2019)

  • எஸ்.ஒய்.குரேஷி தொகுத்த கட்டுரைகளின் தொகுப்பு. தேர்தல் ஆய்வுநிபுணர் யோகேந்திர யாதவ், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, சசி தரூர் போன்றோர் இதில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். ‘பெரும்பாலான இந்தியர்கள், வாக்களிப்பதைத் தங்கள் உரிமையை நிலைநாட்டக் கிடைத்த வாய்ப்பாகவும் புனிதச் செயல்பாடாகவும் கருதுகின்றனர்' என்ற கருத்தை முகுலிகா பானர்ஜியின் கட்டுரை முன்வைக்கிறது. அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை தேர்தல் முறைக்குள் கொண்டுவர ஆணையம் சளைக்காமல் செய்துவரும் பணிகளை இன்னொரு கட்டுரை எடுத்துக் கூறுகிறது.

ஹவ் டு வின் ஆன் இண்டியன் எலக்‌ஷன்? (How to win an Indian election?, 2019)

  • தேர்தல் ஆலோசகராகப் பணிபுரிந்த ஷிவம் ஷங்கர் சிங்கின் நேரடி அனுபவம் சார்ந்த பதிவு. தேர்தல் வெற்றிக்காகத் திரைமறைவில் கட்சிகள் செய்யத் துணிபவை, சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, போலிச்செய்திகளைப் பரப்புவது, தலைவர்கள் குறித்த மாய பிம்பம் மக்களிடையே கட்டமைக்கப்படுவது, பெருமுதலாளிகள் அரசியலில் செய்யும் முதலீடுகள் போன்றவை நூலில் விவரிக்கப்படுகின்றன. இந்த நூலைத் தமிழில் இ.பா.சிந்தன் பெயர்த்துள்ளார்.

எவ்ரி வோட் கவுண்ட்ஸ் (Every vote counts, 2019)

  • 2009இல் தலமைத் தேர்தல் ஆணையராக மக்களவைத் தேர்தலை நடத்திய நவீன் சாவ்லா எழுதிய நூல். 2008இல் ராஜஸ்தானில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷி, நாத்வாரா தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். குடியாட்சி அமைப்பில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பது நூலின் அடிப்படைச் செய்தி. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினிகளுடன் இணைத்து, ஹேக்கிங் செய்ய முடியாது என நவீன் சாவ்லா நம்பிக்கைஅளிக்கிறார். தேர்தல் நன்கொடை பத்திரம் வழங்கும்திட்டத்தை, நெருக்கடியின்போது உருவை மறைத்துக்கொண்டு தப்பிக்கும் உத்திபோல, கட்சிகள் பயன்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

தி வெர்டிக்ட் டிகோடிங் இண்டியா’ஸ் எலக்‌ஷன்ஸ் (The Verdict-Decoding India’s elections, 2019)

  • தேர்தல் கருத்துக்கணிப்புகளை முன்னெடுத்த பிரணாய் ராய், காட்சி ஊடகத்துறையில் அவருடன் நீண்டகாலம் பயணித்துவரும் டோரப் ஆர். சோபரிவாலா ஆகியோர் எழுதிய நூல். செயல்படும் ஆட்சியாளர்கள் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள்; இல்லையெனில் புறக்கணிக்கப்படுவார்கள். பெரும்பாலான தேர்தல்கள் இந்தத் தர்க்கத்துக்கு உட்பட்டவையே; அரசியல்வாதிகளை தற்போதைய வாக்காளர்கள் முன்பைவிட நன்கு புரிந்துகொண்டுவிட்டனர். ஆரவாரம் காட்டும் அரசியல்வாதிகளைக் காட்டிலும், அமைதியாகச் செயலாற்றுபவர்களை அவர்கள் ஆதரிக்க விரும்புகின்றனர் என்பது இந்த நூல் முன்வைக்கும் கருத்து. இதை ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தி கேம் ஆஃப் வோட்ஸ் (The game of votes, 2019)

  • ஒளிப்படக் கலைஞரான ஃபர்கத் பசிர் கான், தகவல் தொடர்பு குறித்த கற்பித்து வருபவர். கட்சிகள் தமக்கான பரப்புரையைத் தாங்களே செய்துகொண்ட முறையிலிருந்து கட்சிகளுக்காகத் தனியார் நிறுவனங்கள் பரப்புரையில் இறங்கும் முறைக்குத் தேர்தல் பண்பாடு மாறியது குறித்து இந்த நூலில் பேசப்படுகிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் நடக்கும் அரசியல் நடப்புகளுக்கும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பும் கூறப்படுகிறது.

ஹு மூவ்டு மை வோட்ஸ் (Who moved my votes? 2022)

  • கல்லூரி பேராசிரியர்களான யுகாங்க் கோயல், அருண்குமார் கௌசிக் ஆகியோர் எழுதிய நூல். தேர்தல் வெற்றியைப் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பது, விகிதாச்சார அடிப்படையில் தீர்மானிப்பது ஆகிய இரண்டு முறைகளின் நிறை குறைகள் நூலில் கூறப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகளின் வரலாறும் முன்வைக்கப்படுகிறது.

இண்டியா’ஸ் எக்ஸ்பிரிமெண்ட் வித் டெமாக்ரசி (India’s experiment with democracy, 2023)

  • தேர்தல் குறித்து எஸ்.ஒய்.குரேஷி எழுதிய மற்றொரு நூல். கட்சிகளின் பரப்புரை செலவுகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதற்கு அவர் பரிந்துரைக்கிறார். வரம்பில்லாமல் செய்யப்படும் தேர்தல் செலவினம், சம்பந்தப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் ஊழல்களுக்கு வழிவகுப்பதால், இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தலின்போது கட்சி மாறி ஓட்டு போடும் அண்மைக் காலச் செயல்பாடுகளால், தேர்தல் நடைமுறையின் அடிப்படை நோக்கமே அடிபட்டுப்போவது குறித்த வருத்தமும் நூலில் வெளிப்பட்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்