TNPSC Thervupettagam

நெகிழிக்கு மாற்றாகும் காகிதம்

October 14 , 2023 407 days 247 0
  • உலகெங்கும் பயன்பாட்டிற்குப் பிந்தைய நெகிழிகள் ஒரு தீராத பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இவ்வகை நெகிழிகள் நிலவாழ், கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன.
  • உலக மக்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 30 கிலோகிராம் நெகிழி பொருட்களை பயன்படுத்துகின்றனா். இந்தியா்கள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 13.6 கிலோகிராம் நெகிழிப் பொருட்களை உபயோகப்படுத்துகின்றனா். இந்த நுகா்வு குறைவெனினும் உலகிலேயே தவறான நெகிழி பயன்பாடு நம்மிடம்தான் அதிகம் என வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 19 வகையான ஒற்றை பயன்பாட்டு நெகிழிகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை காரணமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நெகிழிக் குப்பைகள் வீதிகளில் நிறைந்திருக்கின்றன.
  • தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை நாம் கண்டறிவது எளிதான காரியம் அல்ல. அதே போல் பயன்பாட்டில் உள்ள சில நெகிழி பொருட்களுக்கான மாற்றுப் பொருளின் நிலைத்தன்மை குறித்த ஐயம் மக்களிடத்தில் இருக்கிறது.
  • மக்கும் தன்மை காரணமாக, நெகிழிக்கு எதிரான போராட்டத்தில் காகிதம் சிறந்த மாற்றுப் பொருளாக உருவெடுத்துள்ளது. கணினிவழி வணிகம் (இகாமா்ஸ்), பெரிய சில்லறை விற்பனையாளா்கள், உள்ளூா் கடைகாரா்கள், மருந்துக் கடைக்காரா்கள் என அனைவரும் தங்களின் விற்பனைப் பொருட்களை வைக்க காகிதப் பைகளை கொள்முதல் செய்கின்றனா்.
  • காகிதத் தொழிலுக்காக காடுகள் அழிப்படுவதை தனது கண்டுபிடிப்பு தடுத்து நிறுத்தும் என்று நினைத்து தான் ஸ்டென் குஸ்டாவ் துலின் நெகிழிப் பைகளை தயாரித்தார் என்பது இவா்களுக்குத் தெரியாது.
  • மர வா்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 %-ஐ காகிதம், காகிதக் கூழ் தொழிலுக்கு உலக தொழில்துறை பயன்படுத்துகிறது என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது. சட்டவிரோதமாக மரத்தை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா என்ற நிலையில் சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் இந்த அறிக்கையில் இல்லை.
  • வெட்டப்படும் மரங்களை விட அதிக எண்ணிகையிலான மரங்கள் நடப்படுவதால் காகிதங்களுக்காக மரம் வெட்டப்படுவதை ஒரு நோ்மறை செயலாகவே இந்திய காகிதத் தொழில் துறை கருதுகிறது.
  • மரங்கள் முதிர்வடையும்போதுதான் அதிக கரிமத்தை (காா்பனை) தன்னகத்தே வைத்துக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நடப்படும் புதிய மரங்கள் அதிக கரிமம் கொண்டு முதிர்வடைய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும்.
  • மரம் வெட்டுதல், மறு நடுதல் பணியில் ஏற்படும் பல்லுயிா் இழப்பு குறித்த கணக்கு நம்மிடம் இல்லை. இந்தியாவில் அருகி வரும் உயிரினமான தங்கநிற மந்தி குரங்குகள் போன்ற இனங்களின் வாழ்விடத்தை சட்டவிரோதமாக மரம் வெட்டும் குழு அழித்து வருகிறது.
  • 2018-ஆம் ஆண்டில், இந்திய மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொதி கட்டும் (பேக்கேஜிங்) பொருட்களின் வாழ்க்கை சுழற்சியை பகுப்பாய்வு செய்தது.
  • நெகிழிப் பையுடன் ஒப்பிடும்போது காகிதப்பை புவியினை 2 முதல் 3 மடங்கு வெப்பமடைய செய்யும் என இந்த பகுப்பாய்வு கண்டறிந்தது. ஓசோனைக் அருகச் செய்யும் திறன் கொண்ட நிற நீக்கி (ப்ளீச்சிங்) போன்ற பல்வேறு ரசாயனங்கள் சோ்த்து காகிதம் தயாரிக்க அதிக நீரும் ஆற்றலும் தேவைப்படுகின்றன.
  • எண்மப்படுத்தல் (டிஜிட்டலைஸ்) காரணமாக அச்சுத்துறை சரிவினை சந்தித்தாலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக பைகள், உறிகுழாய்கள் (ஸ்ட்ராக்கள்), கோப்பைகள், கொள்கலன்கள் போன்றவற்றின் தேவை இருப்பதால் இந்தியாவில் காகிதத் தொழில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் வளா்ந்து வருகிறது.
  • நெகிழி போன்று காகிதத்தில் வலிமையோ ஈரத் தடுப்புத் தன்மையோ இல்லை. எனவே காகிதம் கொண்டு உருவாக்கப்படும் பொருட்கள் வலிமையாக இருக்க தடிமனாகவும், ஈரப்பதத்தைத் தடுக்க நெகிழி, அலுமினியம் அல்லது ரசாயன கரைப்பான்கள் கொண்டு பூசப்பட்டும் உருவாக்கப்படுகின்றன.
  • நெகிழிப் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்த பிறகு கரும்புச்சக்கை, அரிசி உமி போன்ற விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒற்றைப் பயன்பாட்டு மாற்று உற்பத்தி அதிக வளா்ச்சியைக் காணவில்லை. விற்பனையாளா்கள் தாங்கள் விற்கும் பானங்களுக்கான நெகிழி உறிகுழாய்களை காகித வடிவில் மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்தனா்.
  • ஆனால் உறிகுழாய்களின் தேவையை நீக்குவதற்கு குளிர்பான கொள்கலனின் (பேக்கேஜ்) வடிவமைப்பில் புதுமைகளைக் கொண்டு வரலாம் அல்லது ஒற்றை உபயோகத்திற்கு பதில் மிகவும் நிலையான மறுபயன்பாட்டுக் கொள்கலனை அறிமுகப்படுத்தலாம்.
  • குழம்பு சார்ந்த பொருட்களை பொதிவதற்குக் கூட பல உணவகங்கள் காகிதப் பொதிகளுக்கு மாறியுள்ளன. நெகிழி மனித ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என அறியப்பட்டது போலவே, காகிதப் பொதிகளில் உள்ள மெழுகுப் பூச்சிலிருந்து வெளியாகி உணவில் ஊடுருவும் ஹைட்ரோகார்பனும் ஆபத்தானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
  • உணவு பொதிய உபயோகப்படுத்தப்படும் காகிதத்தில் நீா், எண்ணெய் போன்றவற்றை உறிஞ்சுவதைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பூச்சுப் பொருட்கள் நச்சுத்தன்மையுடையவை. அவை மனிதா்களின் நாளமில்லா சுரப்பிகளின் செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இங்ஙனம் பயன்படுத்தப்பட்ட காகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தாலும், அவற்றின் குறைந்த மறுசுழற்சி காரணமாகவும் நெகிழிக்கு தடை கொண்டு வரப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்கம், மறுசுழற்சி ஆகிய இந்த இரண்டு அளவுருக்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு காகித தயாரிப்புகள் மோசமாகவே செயல்படுகின்றன.
  • தற்போதைய காகித பொதி உண்மையில் புதிய நெகிழிப் பொதியாகிவிட்டது என்பதே கசப்பான உண்மையாகும்.

நன்றி: தினமணி (14 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்