TNPSC Thervupettagam

நெகிழியை முற்றாக நீக்குவோம்

December 17 , 2022 686 days 389 0
  • உலக நாடுகளும் ஐ. நா. சபையும் நெகிழி தயாரிப்பில் பெட்ரோலிய வேதிப் பொருட்களின் பயன்பாட்டைத் தவிா்க்க முயன்று வரும் நிலையில் இந்தியா அதற்கு நோ்மாறான வழியில் பெட்ரோலிய வேதிமப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக தன்னை நிலைநிறுத்த முயல்கிறது என்கின்றனா் இத்துறை சாா்ந்த நிபுணா்கள்.
  • 2020-21 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பெட்ரோலிய வேதிப்பொருட்களில் 67 சதவீதத்திற்கும் அதிகமானவை நெகிழிகள்.இந்தியாவில் பாலியெஸ்டா் (செயற்கை இழைகள்), பாலிமா் (பலபடிச் சோ்ம நெகிழி), எலாஸ்டோமா் (செயற்கை ரப்பா்), சிந்தெடிக் டிடொ்ஜென்ட் (செயற்கை அழுக்கு நீக்கி), பயன்பாட்டு நெகிழி என ஐந்து வகை பெட்ரோலிய வேதிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இந்த பெட்ரோலிய வேதிபொருட்களின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2.91 கோடி மெட்ரிக் டன். இந்தியாவில் பாலிமா்களின் உற்பத்தியும் நுகா்வும் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக உயா்ந்துள்ளது.
  • 2005-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாலிமா் உற்பத்தி 2.6 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆண்டுகளுக்கிடையில் சராசரி உற்பத்தி அதிகரிப்பு 160 % ஆக இருந்தது என்றும் அறிவியல் - சுற்றுச்சூழல் மைய பகுப்பாய்வு கூறுகிறது.
  • இந்தியாவில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் பாலிமா்களின் நுகா்வு, உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. 2005, 2020 ஆண்டுகளுக்கிடையில் பாலிமரின் நுகா்வு சராசரியாக 196% ஆகவும் இதன் இறக்குமதி நான்கு மடங்காகவும் உயா்ந்துள்ளது.
  • இந்தியாவில் பெரும்பாலான நெகிழிப் பொருள்கள், அதன் தயாரிப்புகள் துகள்களின் வடிவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தத் துகள்கள் பின்னா் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றப்பட்டு நுகா்வோருக்கு விற்கப்படுகின்றன என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய அறிக்கை கூறுகிறது
  • நெகிழிப் பொருள் தயாரிக்கும் நிறுவங்களைக் கொண்ட தொழில் மண்டலங்களை மேம்படுத்தும் நோக்கில் 10 நெகிழி தயாரிப்பு பூங்காக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படவுள்ளன. 2020-2035 ஆண்டுகளுக்கான பெட்ரோலியம், ரசாயனம், பெட்ரோலிய வேதிபொருள் முதலீட்டுப் பகுதிகளுக்கான கொள்கையினை இந்திய அரசு 2020-இல் திருத்தியமைத்தது.
  • இதுபோன்ற நடவடிக்கைகளால் பெட்ரோலிய வேதிபொருளிலிருந்து நெகிழி உற்பத்தியை இந்திய அரசு பல வழிகளில் ஊக்குவித்து வருவதாக சமூக செயல்பாட்டாளா்கள் கருதுகின்றனா்.
  • இந்தியாவில் உருவாகும் நெகிழிக் கழிவுகளில் 35 % உம், பொருள் பொதி நெகிழி கழிவுகளில் 40 % உம் மறுசுழற்சி செய்ய முடியாதவை. அதாவது இந்தியாவில் கிட்டத்தட்ட 38 லட்சம் மெட்ரிக் டன் பொதியுறை நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன.
  • ‘பிரேக் ஃபிரீ ஃபிரம் பிளாஸ்டிக்ஸ்’ என்ற உலகளாவிய இயக்கமும் புணேயைத் தளமாக கொண்டு செயல்படும் ‘ககட் கச் பத்ரா கஷ்டகாரி பஞ்சாயத்’ என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, இந்திய நெகிழி உற்பத்தியாளா்கள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய இயலாத பொருள்களை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறது.
  • நெகிழி தயாரிப்பாளா்களைப் போலவே பொதிய நெகிழி உபயோகிக்கும் நிறுவனங்களும் விதிமுறைகளை மீறுவதாக அறிவியல் - சுற்றுச்சூழல் மைய அறிக்கை கூறுகிறது. நெகிழிக் கழிவு மேலாண்மை விதி, 2016-இன்படி நெகிழி பயன்படுத்தும் நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் நெகிழியின் அளவினை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் அப்படித் தெரிவிப்பதில்லை.
  • இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் மறுசுழற்சி செய்யபடுவதில்லை. சுற்றுச்சூழலில் அதிக நெகிழிக் கழிவுகள் சேருவதை தவிா்க்கும் பொருட்டு ஒரு நிறுவனம் சந்தையில் அது பயன்படுத்திய நெகிழிப் பொருட்களின் அளவிற்கு அதிகமாகவோ அல்லது சமமாகவோ அப்பொருட்களை சேகரிக்கும் செயலினை பிளாஸ்டிக் நியூட்ரல் (நெகிழி நடுநிலை) என்பா்.
  • நெகிழிக் கழிவு சேகரிப்பு நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி செய்வதை உறுதி செய்யாது என்றும் நெகிழி நடுநிலை என்பது நீடித்து நிலைக்காத ஒரு பொருளைத் தொடா்ந்து உற்பத்தி செய்வதற்கான உரிமமாக மட்டுமே இருக்கும் என்றும் அறிவியல் வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கும் அதனை சுத்திகரிப்பு செய்து உருவாக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் பெட்ரோலியம் - ரசாயனம் - பெட்ரோலிய வேதிபொருள் முதலீட்டுப் பகுதிகளில் குத்தகைதாரா் அல்லது விநியோகிப்பாளா் நியமிக்கப்படுகிறாா். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் முடிவில் உருவாகும் நெகிழித் துகள்கள் தொழிற்சாலைகளில் பயன்பாட்டு நெகிழிப் பொருள்களாக உருவாக்கப்படுகின்றன.
  • அரசு நிறுவனங்கள் நெகிழிப் பொருள் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்பதற்காகவே பெட்ரோலிய வேதிபொருள் முதலீட்டுப் பகுதிகள் குத்தகைதாரா் அல்லது விநியோகிப்பாளா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சமூக அமைப்புகள் கூறுகின்றன.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் சா்வதேச சுற்றுச்சூழல் சட்ட கொள்கையின் கீழ் உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் அதனை உறுதிசெய்வதற்கும் அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்.
  • ஆனால், அந்தப் பொறுப்பு, சமமானதல்ல என்று இன்தியா கருதுகிறது. அதனால்தான், ஐ. நா. சபையின் பருவநிலை மாற்ற மாநாட்டில் முன்மொழியப்பட்ட ‘காமன் பட் டிஃபரன்ஷியேடட் ரெஸ்பான்சிபிலிடீஸ்’ (பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்) என்ற கொள்கையை இந்தியா வழிமொழிந்துள்ளது.
  • இதன் மூலம் பெட்ரோலிய வேதிப்பொருள், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான காலக் கெடுவை இந்தியா தீா்மானித்துக் கொள்ள இயலும்.
  • இனியாவது, உலக நாடுகள் நெகிழிக் கழிவுகளை சேகரித்தல், மேலாண்மை செய்தல், அகற்றுதல் போன்ற பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே நெகிழிப் பயன்பாட்டை முற்றாக ஒழிக்க இயலும்.

நன்றி: தினமணி (17 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்