நெல் சேமிப்புக் கிடங்குகள் பாதுகாக்கப்பட வேண்டாமா?
- ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட அதிகனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதமும், நெல் சேமிப்புக் கிடங்குகளில் ஏற்பட்டுள்ள இழப்பும் வேதனை அளிக்கின்றன. விரைவில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த பயிர்கள் நீரில் அழுக நேர்வது விவசாயிகளின் நெஞ்சை அறுக்கும் துயரம் எனில், சேமித்துவைக்கப்பட்ட தானியங்களும் வீணாகியிருப்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத இழப்பாகும்.
- விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 80,520 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல் கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 32 அரவை ஆலைகளில் 17 ஆலைகள் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தானிய மூட்டைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
- நெல், கடலை, தினை வகைகள், எள், பஞ்சு உள்படப் பல்வேறு பொருள்கள் அடங்கிய இவற்றின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.10 கோடி எனக் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி பகுதியில் விவசாயிகள், வணிகர்கள் இரு தரப்பும் ஏறக்குறைய ரூ.50 கோடி அளவுக்கு இழப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
- மழைப்பொழிவு அதிகரித்துக் கொண்டிருந்த இப்பகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குரியது. மக்களின் உயிர் பாதுகாப்பு, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால வேகத்தை எட்டாத நிலையில், தானியச் சேமிப்புப் பணிகளிலும் அந்நடவடிக்கைகள் தவற விடப்பட்டிருப்பது வருத்தத்துக்கு உரியது.
- அதன் வெளிப்பாடே விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேர்ந்த இழப்பு. நெல் அரைப்பதில் மாநில அளவில் முக்கிய மையமாக விக்கிரவாண்டி தாலுகா உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டம் விளங்குகிறது. இங்கு உள்ள அரசு, தனியார் நெல் சேமிப்புக் கிடங்குகளில் ஏற்படும் இழப்பு, மாநிலத்தின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, உணவு உற்பத்தித் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- நேரடிக் கொள்முதல் நிலையங்களையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களையும் நவீனமயமாக்க வேண்டும் என்கிற நெடுங்காலக் கோரிக்கைகளில், மழை, குளிர்காலங்களில் தானியங்கள் சேதமடையாதபடி பாதுகாப்பதும் அடங்கும். தமிழக அரசும் அதைப் புரிந்துகொண்டு சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 250 மெட்ரிக் டன் கொள்ளளவோடு 63 நேரடிக் கொள்முதல் நிலையங்களை அமைப்பதற்கு 2023 ஏப்ரலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- தனியார் - அரசு பங்கேற்பின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் மொத்தம் 6 ஒருங்கிணைந்த நவீன அரிசி ஆலைகளை நிறுவ உள்ளதாக 2024 பிப்ரவரியில் தமிழக அரசு அறிவித்தது. அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய சேமிப்பு வசதிகள் இதில் முக்கியமான அம்சம் ஆகும்.
- இந்நடவடிக்கைகளுடன் சேமிப்புக் கிடங்குகள் தாழ்வான பகுதியில் இருப்பதைத் தவிர்த்தல், ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள ஆலைகளுக்கு மழைக்காலத்தில் பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றிலும் அரசு நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டியதன் தேவையை இப்புயல் உணர்த்தியுள்ளது.
- 2022-2023இல் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2023-2024இல் இந்த இலக்கு 50 லட்சம் டன் எனச் சுருக்கப்பட்டது. விவசாயிக்கு ஒரு கிலோ அரிசிக்கான அரசு கொள்முதல் விலை ரூ.30 கூட இன்னும் கிடைக்கவில்லை. விவசாயிகளின் மன உளைச்சலின் எதிரொலியாக, நெல் வேளாண்மை செய்யும் பரப்பும் நாளுக்கு நாள் சுருங்கிவருகிறது. இந்நிலையில் விளைவித்த நெல்லையும் இயற்கைப் பேரிடர்களின்போது நாம் இழப்பது ஏற்புடையதல்ல. அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2024)