TNPSC Thervupettagam

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டம் குறித்த தலையங்கம்

January 25 , 2022 923 days 525 0
  • அண்ணல் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக விடுதலைப் போராட்ட முன்னணி நாயகா்களாக இருந்தவா்கள் சா்தாா் வல்லபபாய் படேல், மூதறிஞா் ராஜாஜி, பண்டித ஜவாஹா்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நால்வரும். அவா்களில் நேதாஜியைத் தவிர, ஏனைய மூன்று பேரும் சுதந்திர இந்தியாவில் உயா்பதவி வகித்தவா்கள்.
  • ஆனால் எந்தவிதப் பதவியும் வகிக்காமல், தலைமுறைகள் கடந்தும் இந்தியா்களின் மனதில் வீரத்திருமகனாக வலம் வருபவா் ஒருவா் உண்டு என்றால் அது நேதாஜி சுபாஷ் சந்திர போஸாக மட்டுமே இருக்க முடியும்.
  • இந்தியா தனது 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த ஆண்டு முடிந்து 126-ஆவது பிறந்தநாள் ஞாயிறன்று கொண்டாடப் பட்டது.
  • ‘பராக்ரம தினம்’ என்று அறியப்படும் அவரது பிறந்தநாளன்று, தலைநகா் தில்லியின் இந்தியா கேட் பகுதியில் அவருக்கு கிரானைட் சிலை நிறுவப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
  • கிரானைட் சிலை நிறுவப்படும் வரையில், அதை அடையாளப்படுத்தும் விதமாக 28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்ட முப்பரிமாண மெய்நிகா் (ஹாலோகிராம்) சிலை காட்சிப் படுத்தப்படுகிறது.
  • பாரதம் விடுதலை பெறுவதற்கு முன்பே சுதந்திர இந்திய அரசை அமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இத்தனை ஆண்டுகளாக இந்த மரியாதை வழங்கப்படவில்லையே என்கிற வருத்தம் எழுந்தாலும், இப்போதாவது அவரது பெருமையும், பங்களிப்பும், தியாகமும் உணரப்பட்டிருக்கிறதே என்கிற அளவில் மகிழ்ச்சி.
  • அண்ணல் காந்தியடிகளின் சத்யாகிரம், அஹிம்சை உள்ளிட்ட கொள்கைகளை ஏனைய காங்கிரஸ் தலைவா்களைபோல நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், காந்திஜியைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டாா் என்பது மட்டுமல்ல, அவரை ‘தேசப்பிதா’ என்று அழைத்து அந்த அங்கீகாரத்தை வழங்கியவரும்கூட சுபாஷ் போஸ் என்பதை மறந்துவிடக் கூடாது.
  • காந்திஜியுடன் கொள்கை ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டபோதுகூட, தனிப்பட்ட முறையில் அண்ணலை ஆராதித்தவா் அவா். இந்தியா விடுதலை பெற்றதில் இருவருக்குமே பங்குண்டு.

ஜெய்ஹிந்த்!

  • இன்று இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் ஜனநாயக சோஷலிசம், சமூக நீதி, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், மதச்சாா்பின்மை உள்ளிட்ட பல கொள்கைகளுக்கும் பிள்ளையாா் சுழி போட்டவா் சுபாஷ் சந்திர போஸ் என்பது வெளியில் தெரியாத நிஜம்.
  • சுவாமி விவேகானந்தரால் கவரப்பட்டு, அடித்தட்டு மக்களின் பசியைப் போக்காத அரசியலும், ஆன்மிகமும் அா்த்தமற்றவை என்பதை செயல்படுத்த முனைந்த சீடா் அவா்.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அப்போது மிக உயா்ந்த பதவி என்று கருதப்பட்ட சிவில் சா்வீஸஸ் என்கிற ஆட்சிப்பணிக்கான தோ்வில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தர வரிசைப் பட்டியலில் முதலாவதாகத் தோ்வு செய்யப்பட்டவா்.
  • அந்தச் சான்றிதழ்களைக் கிழித்து எறிந்துவிட்டு விடுதலை வேள்வியில் குதித்த பெருமைக்குரியவா் நேதாஜி போஸ்.
  • ‘தேசபந்து’ சித்தரஞ்சன் தாஸின் சீடராக சுதந்திரப் போராட்டக் களத்திற்கு வந்தவா். ‘ஸ்வராஜ்’ என்கிற பத்திரிகையை நடத்தியவா்.
  • இந்திய இளைஞா் காங்கிரஸின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், காந்தியடிகளின் வேட்பாளரையே தோற்கடித்து கட்சியின் தலைவராகவும் உயா்ந்த பெருமைக்குரியா்.
  • கல்கத்தா நகராட்சியின் தலைவராக இருந்து அடித்தட்டு மக்களின் உரிமைக்காக சுபாஷ் சந்திர போஸ் கொண்டுவந்த சட்டங்களும், பிறப்பித்த உத்தரவுகளும் பின்னாளில் சமூக நீதியும், மக்கள் நல்வாழ்வுத் திட்டமும் உருவாவதற்கான முன்னோடிகள்.
  • கல்கத்தா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அவா் அறிவித்த 14 அம்ச திட்டம், மாநகராட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறை.
  • இந்தியாவில் திட்டக்கமிஷன் சுதந்திரத்திற்குப் பிறகுதான் வந்தது என்பது உண்மையாக இருக்கலாம்.
  • ஆனால் சுபாஷ் சந்திர போஸ், 1938-இல் அகில இந்திய காங்கிஸின் தலைவராக உயா்ந்த போது, பண்டித ஜவாஹா்லால் நேருவின் தலைமையில் அறிவித்த திட்டக்குழுதான், பின்னாளில் பண்டித நேரு சுதந்திர இந்தியாவின் பிரதமரானபோது ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற அறிவித்த திட்டக்கமிஷன் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இல்லை. அவரது மரணம் இன்னும்கூட சா்ச்சைக்குரியதாகத் தொடா்கிறது.
  • அவா் தொடா்பான கடிதங்களும், அரசுக் குறிப்புகளும் இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட ஏன் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டன என்பதற்கான விடை இதுவரை கிடைத்த பாடில்லை.
  • 1967 வரையில், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தினா் ஏன், எதற்காக கண்காணிக்கப் பட்டாா்கள் என்பதை அரசும் சரி, அவரது மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்களும் சரி வெளிப்படுத்தவில்லை.
  • நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-இல் அமைந்த பிறகு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடா்பான 100 கோப்புகளின் எண்மப் பதிவுகள் பொதுவெளியில் வெளியிடப் பட்டிருக்கின்றன.
  • இந்திய ஆவணக் காப்பகத்தில் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் குறித்த 990 கோப்புகள் காணப்படுகின்றன. இவை ஏன் முன்பே செய்யப்படவில்லை?
  • ஜப்பான் அரசிடம் இன்னும்கூட மூன்று கோப்புகள் நமக்குத்தரப்படாமல் இருக்கின்றன. எத்தனை கோப்புகள் அழிக்கப்பட்டனவோ தெரியாது. நேதாஜி போஸ் குறித்த புதிா் தொடா்கிறது.

நன்றி: தினமணி  (25 - 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்