TNPSC Thervupettagam

நேபாள விவகாரத்தில் நிதானமே நல்லது

January 8 , 2021 1474 days 701 0
  • நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்று அறிவித்த சில நாட்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பிரதிநிதிகள் குழுவொன்றை நேபாளத்துக்கு அனுப்பியிருக்கிறது.
  • இதன் மூலம் நேபாளத்தின் அரசியலில் குறுக்கிடுவதற்குத் தான் தயாராக உள்ளதாக சீனா சமிக்ஞைகளைத் தந்திருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் குவா யெஸோ தலைமையிலான குழு நேபாளத்தின் அரசியல் தலைவர்களையெல்லாம் சந்தித்தது.
  • அந்நாட்டின் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரியையும் பிரதமர் ஒலீயையும் அந்தக் குழு சந்தித்தது. ஒலீக்கும் அவரது எதிராளிகளான புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வுக்கும் மாதவ் நேபாளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி, அவர்களின் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்வதற்காகத் தாங்கள் வந்திருப்பதாக சீனக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
  • ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதென்ற தன் முடிவிலிருந்து ஒலீ பின்வாங்குவதாக இல்லை. அதேபோல், தஹாலும் நேபாளும் ஒலீயுடன் சமரசமாகப் போக முடியாது என்பதில் தெளிவாக உள்ளனர்.
  • இதுபோன்ற நெருக்கடியான தருணத்தில் இரண்டு தரப்புகளும் சீனப் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்க ஒப்புக்கொண்டது ஆச்சரியமளிப்பது என்றாலும் சீனத் தலையீடு நேபாளத்துக்குள்ளே விரும்பப்படவில்லை என்பதை நன்றாகவே உணர முடிகிறது.
  • சீனாவுக்கு நேரெதிராக இந்தியா மிகவும் நடைமுறைரீதியாகவும் மிதமாகவும் எதிர்வினை ஆற்றுவதென்ற முடிவை எடுத்திருக்கிறது.
  • நேபாள அரசியலை வரலாற்றுரீதியில் புரிந்துவைத்திருப்பதால் இப்படியொரு நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கிறது. நேபாளத்தில் 2015-ல் புதிய அரசமைப்புச் சட்டத்தை அந்நாடு தழுவிக்கொண்டதிலிருந்து பல முறை ஆபத்தின் உச்சியை எட்டியிருக்கிறது;
  • 2016-ல் ஒலீயுடனான கூட்டணி அரசிலிருந்து தஹால் வெளியேறியது அவற்றுள் ஒன்று. டிசம்பர் 2020-ல் ஒலீ எடுத்த முடிவை இனி மாற்றிக்கொள்ள முடியாது என்றாலும் சமரசங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன.
  • தேர்தலை நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்குமா என்பதைப் பொறுத்தும், கீழவை கலைக்கப்பட்டாலும்கூட அதைக் கூட்டுவதற்கு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் குடியரசுத் தலைவரைத் தூண்டுவாரா என்பதையும் பொறுத்து இனி அங்கே காட்சிகள் அரங்கேறும்.
  • இந்தியா மரபாக நேபாளத்திடம் ஆற்றும் பங்கைத் தற்போதைய விவகாரத்தில் ஆற்றாது என்பது தெளிவாகத் தெரிகிறது; நேபாள அரசியலில் தலையிடுவதாக எந்த வெறுப்பையும் அங்கிருந்து இந்தியா தற்போது எதிர்கொள்ளவில்லை.
  •  வரைபடம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, சில மாதங்களுக்குப் பிறகே ஒலீ இந்தியாவிடம் நட்புக் கரம் நீட்டினார்; இந்தக் காலகட்டம் முழுவதும் தஹால் இந்தியாவுடன் நட்புறவு கொண்டவராகவே இருந்துவந்திருக்கிறார்.
  • நம் அண்டை நாட்டின் அரசியல் நிலையற்றதன்மை என்பது நமக்கும் நீண்ட கால நோக்கில் நல்லதல்ல என்பதாலும் நேபாளத்தை சீனாவின் கண்கள் வட்டமிடுவதாலும் நேபாளம் விஷயமாக எந்த முடிவெடுத்தாலும் இந்தியா தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்